தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 september 2011

ஒட்டுக் குழுக்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா!- அனலை நிதிஸ் ச. குமாரன்


[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 05:18.19 PM GMT ]
சிங்கள அரசுடன் சேர்ந்து செயற்படும் ஈ.பி.டி.பி போன்ற ஒட்டுக் குழுக்களை ஒடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்துவிட்டு திரும்பியுள்ளார் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக். செப்டம்பர் 12-ஆம் நாளன்று சிறிலங்காவுக்கு மூன்று-நாள் அதிகாரபூர்வமான பயணத்தை...
...மேற்கொண்ட பிளேக், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்து பேசியதுடன், வடக்கிற்கும் சென்று உண்மை நிலையை அறிந்துள்ளார்.
பிளேக் யாழ்ப்பாணம் சென்றிருந்தவேளை ஈ.பி.டி.பியினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். யாழ்ப்பாணம் நான்காம் குறுக்குத் தெருவிலுள்ள அமெரிக்க தகவல் மையத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
யாழ் பயணத்தின் முதற்கட்டமாக யாழ்.மாவட்டச் செயலகத்திற்க்குச் சென்ற பிளேக் குழுவினர் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கத்தைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன் பின்னர் யாழ்.அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டதன் பின்னர் பல்கலைக் கழக மாணவர்களுடனான சந்திப்பிற்காக தகவல் மையத்திற்க்கு சென்றார்.
இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமல் ஆகியோர் தலைமையில் குண்டர்கள் மேற்பார்வையில் கொண்டுவந்து இறக்கப்பட்ட அடிவருடிகள் தகவல் மையத்தின் வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போது, “இந்த நாட்டை சுடுகாடாக்க விடமாட்டோம்” “பிளேக் நீ மந்திரவாதியா” “எங்கள் பெண்களின் மானத்தை விற்காதே” போன்ற வாசகங்களைத் தாங்கிய பதாதைகளை வைத்திருந்தார்கள். இதனால் தகவல் மையத்திற்க்குள் நுழைய முடியாத பிளேக் குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வீதியில் தரித்து நின்றனர்.
இதன் பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு கேட்டனர். பின்னர் காவல்துறையினருக்கு அழைப்பு ஒன்று வந்தது அதன் பின்னர் நின்ற இடத்திற்கும் சொல்லாமல் காவல்துறையினர் சென்று விட்டனர். இதன் பின்னர் பிளேக் குழுவினர் அங்கிருந்து யாழ்.ஆயர் இல்லத்திற்குச் சென்று விட்டனர்.
பிளேக்கிற்கு நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்த யாழ்
ஈ.பி.டி.பியினரினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் உட்பட பல சம்பவங்களினால் மிகுந்த தர்மசங்கடங்களை எதிர்கொண்டார் பிளேக். சிறிலங்காவின் மனிதவுரிமை நிலைமைகள் குறித்து தான் கரிசனை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிளேக், துணை ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் ஈ.பி.டி.பி. பலமான துணை ஆயுதக்குழுவை வைத்திருப்பதாகவும் பிளேக் குறிப்பிட்டதுடன், துணை ஆயுதக்குழுக்கள் பொதுமக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. தனது பலத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களைத் தான் சந்திப்பதை தடுத்த அனுபவத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் பிளேக் கூறி தனது ஆதங்கத்தை கூறினார்.
பிளேக் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு செல்வார் என்று தெரிந்திருந்த போதும் அவரை வரவேற்க எந்த உயரதிகாரிகளும் காரியாலய வாசலில் சமுகமளிக்கவில்லை. இதனையடுத்து பிளேக், தான் வரவேற்பிடத்தில் அனுமதி பெற்று யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபரை சந்தித்தார். இது திட்டமிடப்பட்ட செயலா? என்று சந்திப்பின் பின்னர் செய்தியாளர்கள் மேலதிக அரசாங்க அதிபரிடம் கேட்டபோது தமக்கு அந்த முறை தெரிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். திட்டமிட்ட அவமதிப்பு சம்பவமே இந்நிகழ்வு என்று கூறுகிறார்கள் அரசியல் அவதானிகள். யாழ்ப்பாண மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கத்தை சந்தித்த போது யாழ்ப்பாண நிலவரம், வாழ்வாதார நிலைமைகள், பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கிறீஸ் பூதம் உட்பட்ட வன்முறை சம்பவங்கள் போன்றவை தொடர்பில் பிளேக் கேட்டறிந்து கொண்டார்.
ரூபினி வரதலிங்கத்தைச் சந்தித்த பின்னர் பிளேக், யாழ்ப்பாண பொது சமூக அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார். இதன்போது பொது சமூகத்தினர் பிளேக்கிடம் யாழ்ப்பாண நிலைமைகளை விளக்கியதாக அரச சார்ப்பற்ற இணையங்களின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை சரியோ பிழையோ அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிந்த போதும் போராட்டத்தின் இலக்குகள் இன்றும் மாறவில்லை அதற்கு சர்வதேசம் உதவி செய்யவேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதாக சிவஞானம் குறிப்பிட்டார்.
வடக்கில் அதிகளவில் தமிழ் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்றும், அதன் மூலம் நீண்டகாலத்துக்கு சிறிலங்கா படைகளை அங்கு நிலை கொள்ள வேண்டிய தேவை ஏற்படாது என்றும் பிளேக் குறிப்பிட்டார். மிகக் குறைந்தளவு அவசரகாலச்சட்டவிதிகளே விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும் நடைமுறையில் இருப்பதால் அவசரகாலச்சட்ட நீக்கத்தின் பலனை மக்களால் அனுபவிக்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். யாழ் பயணத்தின் மூலமாக பிளேக் நல்ல பாடத்தை கற்றுக்கொண்டுள்ளார் போலும். இப்பாடம் எவ்வளவு காலம்தான் ஞாபகத்தில் நிலைத்திருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சிங்கள அரசின் நிகழ்ச்சிநிரல் என்னவென்று பிளேக்கிற்கு தெரியாதா?
பிளேக் அவர்கள் 2003-ஆம் ஆண்டிலிருந்து 2006-ஆம் ஆண்டு வரை புது டெல்லியில் அமைந்திருக்கும் அமெரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் உயரதிகாரியாக பணியாற்றினார். செப்டெம்பர் 2006-ஆம் ஆண்டில் பிளேக்கை சிறிலங்கா மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கு பொறுப்பான உயர் ஸ்தானிகராக நியமித்தது அமெரிக்க அரசு. இவர் பணியாற்றிய மூன்று ஆண்டுகள்தான் ஈழத்தமிழர்கள் பல இழப்புக்களை சந்தித்திருந்தார்கள். பதவியேற்ற மறுகணமே சிறிலங்கா அரசிற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைப்பதற்கு முன்னர், பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை வென்றாக வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறினவர்தான் பிளேக்.
நான்காம் கட்ட ஈழப்போர் மே 2009-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது முள்ளிவாய்க்காலில். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்த அதே காலப்பகுதியில்தான் பிளேக்கும் சிறிலங்காவை விட்டு தனது பணியை முடித்து விட்டு சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே, பிளேக்கிற்கும் நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்ததற்கும், 40,000 அப்பாவித் தமிழ் மக்கள் பலியாவதற்கும் தொடர்பு உள்ளது. விக்கிலீக்ஸ் என்கிற இணையத்தளம் இதனை அம்பலப்படுத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிளேக் அவர்கள், இன்று தமிழர்களுக்கு அரசியல் தீர்வை எப்படிப் பெற்றுத் தருவார் என்று கேட்கிறார்கள் சில அரசியல் ஆய்வாளர்கள். பெப்ரவரி 2007-இல் மட்டக்களப்பில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்திலிருந்து வானுறிதியில் கொழும்பு செல்ல காத்திருந்த வேளை விடுதலைப்புலிகள் ஏவிய குண்டில் சிறிய காயங்களுக்கு உட்பட்டவர்தான் பிளேக். சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் ஏவிய குண்டுத்தாக்குதலுக்கு பதிலாகத்தான் குறித்த குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், இவருடைய பயணத்தை பற்றி எவ்வித முன்னறிவித்தலும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு அப்போது வழங்கப்படவில்லையெனவும் விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தார்கள்.
மகிந்த ராஜபக்ச அரசின் அனைத்து நிகழ்ச்சி நிரலும் பிளேக்கிற்கு அன்று தெரிந்திருந்;தது. அப்படியிருக்க, இப்போது திடீர் என்று தமிழர்கள் மீது பாசம் கொண்டுள்ளவர் போல் வேடமிட்டுள்ளதை தமிழர்கள் இனியும் நம்பலாமா என்பதே இப்போது எழும் கேள்வி. சிறிலங்காவை விட்டு வெளிக்கிடும் முன்னர் கொழும்பில் பத்திரிகையாளர்களை பிளேக் சந்தித்தார். அதிகாரப்பகிர்வு தொடர்பாகவும் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் சிறிலங்கா அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை மீளத் தொடங்க வேண்டும் என்று தான் கேட்டுக் கொண்டதாகவும் பிளேக் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அறிக்கை வர முன்னரே அதுபற்றி முன்கூட்டியே கருத்து வெளியிட முடியாது என்று கூறினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமெரிக்கா எதிர்பார்த்திருப்பதாகவும் ,அதில் என்ன உள்ளது, என்ன பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது என்பது பற்றி அது வெளியான பின்னர் முடிவுக்கு வருவோம் என்றும் பிளேக் தெரிவித்தார். அதைச் செய்யும் சில பொறிமுறைகளை உறுதி செய்வதற்கு அழுத்தம் கொடுக்கலாம் என்றும், ஆனாலும், அத்தகைய அழுத்தங்கள் தேவைப்படும் என்று தாம் நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.
நண்பர்களை மிரட்டுவது தனது வேலை அல்ல என்று கூறிய பிளேக், அனைத்துலக மனிதாபிமானச் சட்டமீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு நம்பகமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக கூறினார். அனைத்துலக சமூகத்துடன் சிறிலங்காஇணங்கிச் செயற்பட வேண்டும் என்றும்,குறிப்பாக ஐ.நாவுடன் சிறிலங்கா சாதகமானமுறையில் நடந்து கொள்ளவேண்டும் என்றும் தான் கேட்டுகொண்டுள்ளதாகவும் கூறி நாட்டை விட்டு கிளம்பினார் பிளேக்.
பிளேக்கினுடைய சிறிலங்காப் பயணத்தின் மூலமாக தமிழர்களுக்கு ஏதாவதொரு தீர்வு வரும் என்று தமிழர்கள் நம்புகிறார்களோ இல்லையோ நிச்சயம் இவருடைய வருகை சிங்கள அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களுக்கு கிலியை உண்டுபண்ணியுள்ளது என்பது மட்டும் தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. 

Geen opmerkingen:

Een reactie posten