சிறிலங்காவில் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்று நள்ளிரவுடன் நீங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனாலும் அவசரகாலச்சட்டவிதிகளின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கம் மீதான தடை தொடரும் என்றும், உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படாது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எவரும் விடுவிக்கப்படமாட்டார்கள் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்தவாரம் அவசரகாலச்சட்டத்தை நீக்கவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
இதன்படி நேற்று நள்ளிரவு - 30ம் நாள் இரவு 12 மணி- தொடக்கம் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் சில புதிய விதிமுறைகளைச் சேர்க்கும் வகையிலான உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வருவதாக சிறிலங்காவின் சட்டமாஅதிபர் மொகான் பிரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன், உயர்பாதுகாப்பு வலயங்களும் தொடர்ந்து பேணப்படும்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குவதன் மூலம் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையும் வாய்ப்பை வழங்க முடியாது என்றும் சிறிலங்காவின் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
அத்துடன் தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளை கையாள்வதற்காக சிறப்பு விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எந்தவொரு உறுப்பினரும் விடுவிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச்சட்ட பின் ஏற்பாடுகள் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் சிறப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர்மேலும் கூறியுள்ளார்.
இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten