தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 september 2011

நாவாந்துறை மக்கள் ஏன் தாக்கப்பட்டனர்? அவர்கள் இந் நாட்டு பிரஜைகள் இல்லையா? - பிரதேசவாசி ஒருவரின் கண்ணீர்க்குரல்

[ செவ்வாய்க்கிழமை, 06 செப்ரெம்பர் 2011, 05:08.47 PM GMT ]
மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என உண்மையில் நீங்கள் விரும்பினால் உங்கள் கௌரவப் பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு , துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட எம் மக்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என நாவாந்துறையைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, மர்மமனிதன் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலில் பங்கு கொண்டு தனது கருத்தை முன்வைத்த அவர் இவ்வாறு கூறி அழுதுள்ளார்.
அவரின் அந்தக் கண்ணீர்க் கோரிக்கை.
நான் நாவாந்துறையிலிருந்து வருகிறேன். எனது பகுதியில் கடந்த மாதம் 22ம் திகதி இரவு இடம்பெற்ற மர்ம மனிதன் பிரச்சினை தொடர்பாக பத்திரிகைகளிடம் மக்கள் அளித்த சாட்சியங்கள் அனைத்தும் உண்மையானவையே.
மர்ம மனிதன் புகுந்து விட்டான் என்றவுடன் மக்கள் அவனிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவனை கலைத்துச் சென்றனர். அவன் நாவாந்துறை சந்தைக்குப் பின்புறமாக ஓடிச்சென்று கடற்கரையை அண்டிய இராணுவ முகாமுக்குள் மறைந்து கொண்டான்.
அவனை வெளியே விடுமாறு மக்கள் முகாம் இராணுவத்தினரை கேட்டனர். ஆனால் அவர்கள் விடவில்லை. மாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இதனால் மக்கள் தத்தமது வீட்டிற்கு சென்று விட்டனர்.
அதன் பின்பு நான் அமைதியாக இருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென அதிகாரத் தோரணை கலந்த குரல்கள் கேட்டன. அக்கம் பக்கம் இருந்த வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்ட சத்தமும் கேட்டது. வீட்டிலிருந்த ஆண்களில் சிலரை பொலிஸாரும், படையினரும் இணைந்து அடித்து இழுத்துச் சென்றனர்.
எனது சின்ன மகள் உயரத்திலிருந்த சகாயமாதா அணிவித்திருந்த செபமாலையை எடுத்து செபித்த வண்ணம் இருந்தாள். ஏன் இவ்வாறு செய்தாய் என்றேன். அதற்கு அவள் இந்த நேரத்தில் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை என்றாள்.
அங்கு வெறித்தாண்டவம் ஆடப்பட்டது. பொல்லுகள், இரும்புக் கம்பிகள் என்பனவற்றால் படையினர் மற்றும் பொலிசாரினால் மக்கள் சரமாரியாகத் தாக்கப்பட்டு 110 அப்பாவிகள் கைது செய்ய்பபட்டனர்.
இன்றும் கூட எங்கள் ஊர் பெண்கள் பருந்தின் காலில் அகப்பட்டு தப்பிய கோழிக் குஞ்சு போல உள்ளனர்.
ஏன் எங்கள் மக்கள் தாக்கப்பட்டனர். நாம் இந்த நாட்டு மக்கள் இல்லையா?
மர்ம மனிதன் என் வீட்டிற்கு வந்து என் மனைவியையும், மகளையும் காயப்படுத்தும் போது நான் கைகளைக் கட்டிப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கச் சொல்கின்றீர்களா? மர்ம மனிதர்கள் ஏன் பெண்களை மட்டும் தாக்குகின்றனர்.
எமது மக்களை இராணுவமும், பொலிசும் தான் தாக்கியது. இது உண்மை. மக்கள் அமைதியாக வாழ வேண்டும என உண்மையில் நீங்கள் விரும்பினால் உங்கள் கௌரவப் பிரச்சினைகளை மறந்து துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட எம்மக்களை உடனே விடுவியுங்கள்.
அவர்கள் எந்த விதத்திலும் முன்பே திட்டமிடாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த இடத்தில் அவ்வாறு நடந்து கொண்டனரே தவிர எந்த உள்நோக்கத்துடனும் செயற்படவில்லை.
எனவே உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுங்கள். எம் மக்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்  என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten