தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2011

பான் கீ மூன் - மஹிந்த ராஜபக்ச சந்திப்பில், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து விவாதம்

[ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 05:40.15 AM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற சந்திப்பின்போது பரஸ்பரக் குற்றஞ்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஓராண்டுக்கு முன்னர் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டபடி, மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை ஒன்றை மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்தவில்லை என்பதை பான் கீ மூன் அந்தச் சந்திப்பில் நினைவுபடுத்தினார்.
பதிலுக்கு இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஐ.நா. செயலருக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டது என்று கூறப்பட்டபோதும், அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு கடும் வாதப் பிரதிவாதங்களையும், குறுக்கு விசாரணைகள், குற்றச்சாட்டுகள் நிறைந்ததுமாகவே இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இரு தரப்புக்களுமே இத்தகைய ஒரு நிலையை எதிர்ப்பார்த்துத் தயார்ப்படுத்தல்களுடனேயே சந்திப்பில் கலந்துகொண்டன.
ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன், ஜனாதிபதியிடம் அவசரகாலச்சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
பதிலளித்த ஜனாதிபதி, அவஅரகாலச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டதாகவும், ஆனால் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுப்பதைத் தடுக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் கூறினார்.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கில் படையினரை அதிகளவில் நிலைநிறுத்தி வைத்திருப்பது எதற்கு என்று பான் கீமூன் எழுப்பிய கேள்விக்கு, "வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமே படையினர் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் அங்கு போதிய சிவில் தொழிலாளர்கள் இல்லாததன் காரணமாகக் கட்டுமானப் பணிகளில் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்'' என்று அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் தொடர்பிலும் இரு தரப்பினருக்கும் இடையில் பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பான் கீமூனைச் சந்தித்தபோது, வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.நா. தலைமையிலான நிபுணர்குழு தனக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்ததாகவும், அந்த வாக்குறுதியை ஐ.நா. காப்பாற்றவில்லை என்றும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.
வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தமிழ்க் கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சு என்பன தொடர்பாகவும் பான் கீ மூனிடம் எடுத்துக் கூறியுள்ளார்.

இலங்கைக்குத் தெரியாமல் நிபுணர்குழு அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலரிடம் தனது விசனத்தை வெளிப்படுத்தினார் என்று அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவின் வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையை பாதிக்கப்
பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.
இந்த விடயத்தில் ஐ.நாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்பாடல் குறைபாடுகள் இருந்ததை பான் கீ மூன் ஒப்புக்கொண்டார் என சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு இறுக்கமானதாகவும் வாதப்பிரதிவாதங்கள் கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்து ஜனாதிபதி தன்னுடன் ஆறு பேரை அழைத்துச் சென்றிருந்தார் என்று கருதப்படுகிறது. அதேவேளை ஐ.நா பொதுச்செயலரும் அதற்குத் தயாராகத் தனது ஆலோசகர்கள், அதிகாரிகளுடன் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜெயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியுடன் ஜி.எல்.பீரிஸ், பாலித கொஹன்ன, ஜாலிய விக்கிரமசூரிய, லலித் வீரதுங்க, காமினி சேனாரத், சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி இருப்பவருமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாதமை முக்கியமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஐ.நா பொதுச்செயலருடன் அவரது அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோவும், பிரதம அதிகாரி விஜய் நம்பியாரும் சந்திப்பில் கலந்து கொண்டனர் என்று அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளையின் நியூயோர்க் பிரதிநிதி ஐவன் சிமோனோவிக், பாலியல் வன்முறைகள், மற்றும் மோதல் குறித்த ஐ.நா. சிறப்பு ஆலோசகர் மாகொற் வோல்ஸ்ரோம் ஆகியோரும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதும் அதுபற்றிய தகவல் இந்தச் செய்திக்குறிப்பில் மறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten