தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 september 2011

எங்களுடைய பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம்! இராணுவத்தினர் தலையிடவேண்டாம்! சுரேஸ் எம்.பியிடம் பாதிக்கப்பட்ட யாழ். மக்கள் வேண்டுகோள்

[ சனிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2011, 12:39.03 PM GMT ]
எங்களுடைய பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்வோம் இராணுவத்தினர் தலையிடவேண்டாம், இராணுவத்தினர் மக்களைத்தான் தாக்கி அராஜகம் புரிகிறார்களே தவிர மர்ம மனிதனைப் பிடிப்பது கிடையாது. அவர்களை விலக்கிக் கொள்ளவேண்டும்!  இவ்வாறு  பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர்.
மர்மமனிதனின் பாதிப்புக்குள்ளான கொக்குவில், திருநெல்வேலி உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோரையும் நேற்று நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார்,
இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்,
இவ் விஜயத்தின்போது மக்கள் மேலும் தெரிவித்தவையாவது,
ஓரிரு நாட்களின்றி ஒருவாரம், இரண்டு வாரம் என மர்ம மனிதன் பிரச்சினை தொடர்கின்றது. ஆனால் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, மர்ம மனிதன் வந்து ஒரு சில நிமிடங்களில் அங்கே இராணுவத்தினரும் வந்து விடுகின்றார்கள்,
நாங்கள் துரத்திச் செல்லும் மர்ம மனிதனை சேர்ந்து துரத்தி அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்க இராணுவத்தினர் முயல்வதில்லை, மாறாக துரத்தி வருகின்ற மக்கள் மீது தங்கள் காடைத்தனத்தைக் காட்டுகின்றார்கள், இராணுவத்தினரால் எமக்கு ஒரு ஆறுதலும் கிடையாது.
மர்ம மனிதன் வருகிறபோது திட்டமிட்டது போன்று மின்சாரமும் தடைப்பட்டு விடுகின்றது. அதனால் மிகவும் அச்சமும் துயரமும் நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு இரவு நாங்கள் தூக்கமில்லாமல் இருந்தால் மறுநாள் வேலைக்குச் செல்ல முடியாது,
அதனால் மறுநாள் சாப்பாட்டுச் செலவிற்கே திண்டாடிக் கொண்டிருக்கின்றோம், எங்களுடைய பிரதேசத்திற்கு மர்ம மனிதன் வந்ததாகச் சொன்னார்கள், உண்மையில் வந்தது கூட எங்களுக்குத் தெரியாது, ஆனால் வீட்டினுள் படுத்துறங்கிக் கொண்டிருந்த எங்களை பயங்கரவாதிகள் போல் வீதியில் போட்டு அடித்தார்கள்.
எங்களை அடிக்கிறார்கள் என கூச்சலிட்ட பெண்களையும், சிறுவர்களையும் கூட பொல்லுகளுடன் துரத்திச் சென்றார்கள். எங்களுடைய பிள்ளைகள் முன்னாள் போராளிகள் என்று கூறுகிறார்கள், ஆனால் என்னுடைய பிள்ளை போராளி கிடையாது,
அவனுடைய பிறப்புறுப்பினுள் மிளகாய்த் தூளைக் கொட்டி அதன் மேல் பெற்றோலை ஊற்றி சித்திரவதை செய்திருக்கிறார்கள், எங்களுடைய நிலைமை தொடர்பாக சர்வதேசத்திற்;கு எடுத்துச் சொல்லுங்கள், எங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுங்கள் எனவும் மக்கள் மேலும் கேட்டுக் கொண்டனர்,
இச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒரு மாதத்திற்கு முன்பாக மலையகத்தில் கிறிஸ் மனிதன் பயங்கரம், பின்பு அம்பாறை, மட்டக்களப்பு, எனப் பரவி இப்போது வடமாகாணத்தையும் வந்து சேர்ந்துள்ளது.
கிறிஸ் மனிதனின் பயங்கரம் நிகழ்ந்தேறிய எல்லாப் பகுதிகளிலுமே மக்கள் ஒன்று திரண்டு கிறிஸ் மனிதர்கள் சிலரைப் பிடித்துள்ளனர், பொலிஸாரிடமும், இராணுவத்திடமும், கையளித்துமுள்ளனர்.
ஆனால் இவைகள் எல்லாம் கட்டுக் கதைகள் என்றும் வெறும் வதந்திகள் என்றும் பொலிஸாரும் இராணுவத்தினரும் மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றனர்..
பொதுமக்களால் பிடித்து ஒப்படைக்கப்படும் மர்ம மனிதர்கள் எல்லோரும் பெரும்பான்மைச் சமுகத்தைச் சார்ந்தவர்களாகவுள்ளனர். இறுதியாக இவர்கள் மனநோயாளியாகச் சொல்லப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.
ஆனால் இவர்களைப் பிடிக்க முயலும் அல்லது இவர்களைப் பிடித்து ஒப்படைக்கும் அப்பாவிப் பொதுமக்கள் பொலிஸாராலும், இராணுவத்தினராலும் மிருகத்தனமாக தாக்கப்படுகின்றனர்.
இவ்விவகாரம் நன்கு பயிற்றப்பட்டவர்களினால் திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இவ்வாறான பரவலான தாக்குதலை மேற்கொள்ளக் கூடிய பலம், யாரிடம் இருக்கின்றது என்பதையும் இங்கு நிலைகொண்டிருப்பவர்கள் யார் என்பதையும் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார்கள்,
எனவே ஜனாதிபதி இவற்றை உடனடியாக நிறுத்தி தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கின்றது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten