தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 20 september 2011

ஐ.நா தலைமையகத்தில் தொடர் சந்திப்புகளில் சிறிலங்கா இராணுவத் தளபதி


சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நியுயோர்க்கில் ஐ.நா அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.


ஹெய்டிக்கான பயணத்தை மேற்கொண்ட அவர், நியுயோர்க்கில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படையுடன் தொடர்புடைய அதிகாரிகள், இராஜதந்திரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறார்.

நேற்று அவர், ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கை திணைக்களத்தின் பதில் தலைவரும், அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான ஐ.நா உதவிச்செயலருமான எட்மன் முலட்டை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அமைதிகாக்கும் ஐ.நாவின் நடவடிக்கையில் கூடுதல் பங்களிப்பை வழங்க சிறிலங்கா தயாராக இருப்பதாக லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை முன்னதாக அமைதிகாக்கும் நடவடிக்கைத் தலைமையகத்தில் களஉதவித் திணைக்களத்தின் அடிநிலைச் செயலர் சுசானா மல்கோராவையும் சிறிலங்கா இராணுவத் தளபதி சந்திதுப் பேசியிருந்தார்.

இந்தச் சந்திப்புகளுக்கு ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவே ஒழுங்குகளைச் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஐ.நா பொதுச்சபை அரங்கிற்குச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்பட்டால், ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினர் பங்கேற்பது சிக்கலாகலாம் என்று கருதப்படுகிறது.

இந்தநிலையிலேயே சிறிலங்கா இராணுவத் தளபதி இதுபற்றி ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைத் தலைமையக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

puthinappalakai.com
19 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten