ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, பங்களாதேஸ், மாலைதீவு, கியூபா ஆகிய ஒன்பது நாடுகள் மட்டுமே ஒப்பமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளிடம் இருந்து இந்தக் கடிதத்தில் ஒப்பம் பெறுவதற்கு சிறிலங்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இந்தியா, இந்த விடயத்தில் முன்கூட்டியே எதுவும் செய்ய முடியாது என்றும், அது பற்றிய விவாதம் ஒன்று வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாகவும் கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
22 Sep 2011
Geen opmerkingen:
Een reactie posten