ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் இரண்டாவது அதிகூடிய புள்ளிகளைப் (194) பெற்ற முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன், கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வட மாகாணத்தின் கல்வி நிலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆளுமை விருத்தி தொடர்பாக யாழ் நூலக கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற மாநாட்டிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
இம்மாநாட்டில் வட மாகாணத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களான ப.சேதுராகவன், ம. நிதர்ஷிகா ரமேஷ், சர்மிகா சர்வானந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது ஏனைய மாணவிகள் இருவரும் அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் சேதுராகவன் மாத்திரம் அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் தந்தை, தாயார் வலியுறுத்திய போதிலும் அம்மாணவன் பிடிவாதமாக நின்றுகொண்டிருந்தான். இதனால் அமைச்சர் சங்கடத்துக்கு உள்ளான போதிலும் அவர், தொடர்ந்தும் இந்நிகழ்வில் பங்குபற்றினார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது தந்தை, தாயார் ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்' என கூறினான்.
இவ்வைபவத்தில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர். ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். |
Geen opmerkingen:
Een reactie posten