அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி பதிலளிக்குமாறு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்தில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பாணை அவரது தனிப்பட்ட வதிவிடத்துக்கு (அபாட்மென்ட்) அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை.
வீட்டில் இருந்த ஒருவரே அந்த அழைப்பாணையை பெற்றுக் கொண்டுள்ளார்.
அழைப்பாணை அனுப்பிய அமெரிக்க நீதிமன்றத்துக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா 21 நாட்களுக்குள் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, தன் மீதோ தனது கட்டளையின் கீழ் இருந்தவர்கள் மீதோ சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உலகின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.
எவரும் தன் மீது குற்றசாட்டுகளை சுமத்த முடியும் என்றும் அவற்றை எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இது தொடர்பாக நியுயோர்க்கில் தங்கியுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் தங்கியுள்ள நேரம் பார்த்து- அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகள் கூறியுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று சிறிலங்கா அதிபர் ஐ.நாவில் உரையாற்றுவதற்கு சற்று முன்னதாகவே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு நியுயோர்க்கில் அளிக்கப்பட்டுள்ள இராஜந்திரப் பாதுகாப்புக் காரணமாக அவரைக் கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ, அவர் மீது குற்றவியல் வழக்குத் தொடுக்கவோ முடியாது.
ஆனால் குடியியல் நடவடிக்கை எடுக்கபடலாமா என்பது தொடர்பாக தெளிவாகத் தெரியவில்லை.
அதேவேளை, இராஜதந்திரி ஒருவருக்கான பாதுகாப்பு அவர் பணியத்தில் இருக்கும் போதே செல்லுபடியாகும் என்றும், அவர் பணியாற்றும் இடத்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டால் அது செல்லுபடியாகாது என்று மனிதஉரிமைகள் சட்டவாளர் அலி பேடன் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அவரது வசிப்பிடத்துக்கே அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நாவுக்கான இராஜதந்திரப் பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ள இந்த விவகாரத்தை ஐ.நா பொதுச்செயலரின் பணியகத்திடம் கொண்டு செல்வது குறித்து நியுயோர்க்கில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு அழைப்பாணை அனுப்புவதை அல்-ஜெசீரா தொலைக்காட்சிக் குழுவினர் படமாகியுள்ளனர்.
இதற்கிடைய இதுபற்றி கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கொடூரச் செயல்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் விபரிக்க இது நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
கேணல் ரமேஸ் ஒரு மோசமான பயங்கரவாதி என்றும், அவர் சரணடைந்த நூற்றுக்கணக்காக காவல்துறையினரையும், அரந்தலாவவில் பௌத்த பிக்குகளையும், முஸ்லிம் கிராமவாசிகளையும் படுகொலை செய்தவர் என்றும் குற்றம்சாட்டியுள்ள கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவியும் இந்தக் கொடூரச் செயல்களில் தொடர்புபட்டிருந்தவர் என்றும் கூறியுள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten