தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 16 september 2011

உயர்மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு இயக்கப்படுவதுதான் 'கிறீஸ் மனிதன்'!- சுமந்திரன் எம்.பி.விசேட செவ்வி

[ வெள்ளிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2011, 07:18.18 AM GMT ]
மர்ம மனிதன் விவகாரமானது உயர் மட்டத்தில் இயக்கப்படுகின்ற காரியம் என்பது எங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்குகிறது. இல்லாவிட்டால் பொத்துவிலிலும் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் ஒரே காலகட்டத்திலே ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற மாட்டாது.
அந்த இடங்களில் இருக்கின்ற மன நோயாளிகள் எல்லோருக்கும் ஒரே நாளில் இப்படி செய்யத் தோன்றாது எனக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற இடத்திலேயே தான் திடீரென இம்மாதிரியான யோசனை வர வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

மர்ம மனிதன் விவகாரம் மற்றும் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

செவ்வியின் முழு விபரம்:
கேள்வி:   ஜனாதிபதியுடன் த.தே.கூட்டமைப்பு சந்தித்தபோது வடக்கில் கிறீஸ் மனிதர்கள் விவகாரம் பற்றி பேசினீர்களா?

பதில்:
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்த போது இந்த கிறீஸ் மனிதர்கள் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு நடந்து கொண்டிருக்கின்ற விடயங்கள் குறித்து நாம் அவருடன் பேசினோம். அதிலே விசேடமாக இந்த அச்சுறுத்தலை செய்கின்றவர்கள் ஆயுதப்படையினர் என்ற சந்தேகம் வலுவாக மிகுந்துள்ளதாக எமது மக்கள் மத்தியிலேயே நம்பப்படுவதாகப் பேசப்படுகின்றது. இந்தக்காரியத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அடுத்தது இப்படியான மனிதர்களைப் பிடிக்க முனைந்த மக்களுக்கு பொலிஸாரும் இராணுவமும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் இன்னமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரிவித்தோம்.
ஜனாதிபதி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தான் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்துக்கு அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவை அனுப்பி ஒவ்வொரு நிலைகளில் குழுக்கள் பல அமைக்கப்பட்டிருப்பதாகவும், இனிமேல் இந்த மாதிரியான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
கேள்வி:  மர்ம மனிதராக வருவோர் இராணுவத்தினரே என பொதுமக்கள் கூறுவதை ஜனாதிபதிக்கு தெரிவித்தீர்களா?
பதில்:  மக்கள் ஆயுதப்படையினரால் தாக்கப்படுவது தொடர்பில் பேசிய போது, மக்கள் இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து அவர்களுடைய பாசறைகளைத் தாக்கியதன் காரணமாகத்தான் இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், மக்களை யாரோ சில சக்திகள் தூண்டி விடுவதாகவும் அவர் சொன்னார்.
அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். மக்கள் மத்தியிலேயே இப்படியாக பதற்றம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் உண்மையான சம்பவங்ளை நாங்கள் கண்டிருக்கின்றோம். காயத்தினால் பாதிப்புற்ற பெண்கள் இன்னமும் உள்ளனர். ஆகவே அதற்கு எதிராக பொலிஸாரோ அரசாங்கமோ எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் தான் மக்கள் இப்படியான ஆர்ப்பாட்டங்களைச் செய்திருக்கின்றனர். இந்த மாதிரியான ஆர்ப்பாட்டங்களைச் செய்த மக்களை வேறொரு தருணத்திலே அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களைத் தாக்கிக் காயப்படுத்தி இராணுவம் அடாவடித்தனம் செய்வது ஏற்கமுடியாத ஒரு காரியம் என்று நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்தோம்.
கேள்வி:  இது தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் என்ன?
பதில்:   அவர் இனிமேல் இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாகவும், இப்படியாக கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அவர்களுக்கு எதிராக வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விலகமுடியுமா என பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுள்ளார். அவ்வாறு முடியுமானால் அவர்களை வாபஸ் பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.
வேறு சில சம்பவங்களில் கிழக்கு மாகாணத்திலும் பலர் கைது செய்யப்பட்டு சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.சிலர் இன்னமும் விளக்க மறியலில் இருக்கின்றார்கள். அந்தச் சம்பவங்கள் தொடர்பாகவும் அவர் பொலிஸ் மா அதிபரிடத்திலேயே ஒரு வேண்டுகோளை விடுத்தார். இதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இம்மக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் விட முடியுமா? என்று ஆராய்ந்து பாருங்கள் என்றுதான் கூறினார்.
அது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று அவர் சொல்லவில்லை. அதை ஜனாதிபதி சொல்லவும் முடியாது என்பதே எங்களது கருத்தும். ஏனென்றால் அது பொலிஸார் செய்ய வேண்டிய காரியம். ஆனால் நிலைமை சுமுகமாக அமைந்து இந்தப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஏதுவாக அவ்வாறு செய்ய முடியுமா என்று அவர் சொன்னார்.
ஆனபடியால் தான் நாங்களும் பல சிவில் அமைப்புகளோடு இந்தக் கூட்டத்திலேயே எடுக்கப்பட்ட தீர்மானம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை யாழ்ப்பாணத்திலேயே நடத்துவதாக இப்படியான இரண்டு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட காரணத்தால் தான் அந்த உண்ணாவிரதத்தை பிற்போடுவதாக தீர்மானிக்கப்பட்டது.
கேள்வி:  தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா?
பதில்:  ஒருவர் வாக்குறுதி கொடுத்தால் அவர் நிறைவேற்றுவாரா இல்லையா என்பதை சாத்திரம் பார்த்து எனக்குச் சொல்ல முடியாது. அவர் நிறைவேற்றுவாரா இல்லையா என்பதற்காகத்தான் உண்ணாவிரதத்தை பிற்போட்டுள்ளோம்.
கேள்வி:  காலப்பகுதி எதுவும் உள்ளதா?
பதில்:  காலப்பகுதி ஒன்றும் இல்லை. வாக்குறுதி கொடுத்திருந்தாலும் கூட கடந்த சில நாட்களாக சம்பவம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகையால் அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் எமது சிந்தனை.
ஆகவே அதனையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம். அது குறித்து சில நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம். இப்படியான சில சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுமாக இருந்தால் நாங்கள் ஒத்திவைத்த உண்ணாவிரதப் பேராட்டத்தையும் வேறு கருமங்களையும் செய்வோம்.
கேள்வி:  குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதா?
பதில்:  குழுக்கள் அமைத்ததாக சொன்னபோது, நாங்கள் ஜனாதிபதியிடம் சொன்னோம் குழுக்கள் அமைத்தது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அனைவரும் பாராளுமன்றத்தில் இருந்த தருணத்திலேயே யாழப்பாணத்தில் இந்த சம்பவங்கள் தொடர்பாக கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் எமக்கு ஒன்றும் தெரியாது.
நாங்கள் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்த போது அரசாங்க தரப்பில் இருந்து இவ்வாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த யாழ்ப்பாணத்திற்கு சென்று கூட்டம் நடத்துகிறார். அது உடனடியாக திடீரென்று தீர்மானம் எடுத்து செய்த கூட்டம் .எனினும் எல்லா மட்டங்களிலும் நீங்கள் பங்கு பெறுவதோடு குழுக்களிலும் அங்கம் வகிக்க வேண்டும் என்று சுசில் பிரேமஜயந்த கேட்டுக்கொண்டார்.
ஆகவே உயர்மட்டக் குழுக்களில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அடிமட்டத்திலேயே இருக்கின்ற குழுக்களில் உள்ளூராட்சி அங்கத்தவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என நம்புகின்றோம். அதுவும் நடக்கின்றதா இல்லையா எனப் பார்க்க வேண்டும்.
கேள்வி:  பாதிப்புற்ற மக்கள் தொடர்பு கொண்டார்களா?
பதில்:  நிறையப்பேர் தொடர்பு கொண்டனர். இது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கவும் உத்தேசித்துள்ளோம். அதிலே இருக்கின்ற பெரிய பிரச்சினை பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலே நடவடிக்கை எடுக்க முடியுமாக இருந்தால் நாங்கள் முடிவை எடுத்திருப்போம். ஆனால் அவர்களாகவே அந்த சட்ட நடவடிக்கையில் ஈடுபாடுகொள்ள வேண்டும் என்ற ஒரு தேவைப்பாடு இருக்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு இப்போது எழுந்திருக்கின்ற பயம் சம்பந்தமாகவும் நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கின்றது.
மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அவர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் இருக்கின்றதா? இல்லையா என்ற கேள்விகளை அவர்கள் எங்களிடத்தில் கேட்கின்றார்கள். ஒருவருக்கு பாதுகாப்பு இருக்கின்றதா? இல்லையா என்பதை நாங்கள் உத்தரவாதம் செய்ய முடியாது.
ஆகவே பயம் நியாயமானதே என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆகவே நாங்கள் நிதானமாக இந்தக் காரியத்தை அணுகுகின்றோம். கூடிய விரைவிலேயே உயர்நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் நம்புகின்றேன்.
கேள்வி:  கிறீஸ் மனிதன் அகப்பட்ட பின் பொலிஸ், இராணுவத்தினர் வருகின்றனர். இதற்கு அவர்கள் தெரிவிப்பது இவர்கள் மனநோயாளி என்று இது குறித்து?
பதில்:  இது எங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கும் காரியம். இது ஒழுங்கு செய்யப்பட்டு ஓர் உயர் மட்டத்திலேயே யாராலோ இயக்கப்படுகின்ற காரியம். இல்லாவிட்டால் பொத்துவிலிலும் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் ஒரே காலகட்டத்திலே ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற மாட்டாது. அந்த இடங்களில் இருக்கின்ற மனநோயாளிகள் எல்லோருக்கும் ஒரே நாளில் இப்படி செய்யத் தோன்றாது.
அதுவும் விசேடமாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழுகின்ற இடத்திலேயே தான் திடீரென இம்மாதிரியான யோசனை வர வேண்டுமா?. ஆனால் அவ்வாறு கூறுவது எல்லோரையும் முட்டாளாக்கும் செயலாகும். ஆனால் என்ன நோக்கத்துக்காக செய்யப்படுகின்றது, இதைச் செய்பவர்கள் யார்? என்ற கேள்விகள் இன்னமும் இருக்கின்றன.
இராணுவமும் மற்ற ஆயுதப் படையினரும் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்துக்கு நியாயமான ஆதாரங்கள் உண்டு. ஆகவே அரசாங்கப் படையினருடன் சம்பந்தப்பட்டவர்களாலே இது செய்யப்படுவதாக இருந்தால் இதற்கான காரணம் என்னவென்பதை நாங்கள் கொஞ்சம் சிந்தித்து அறிய வேண்டியுள்ளதாகவும் உள்ளது.
கேள்வி: மக்கள் இராணுவம் தாக்குவதாக முறையிட்டதை ஜனாதிபதியிடம் கூறினீர்களா?
பதில்:  ஆம். ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒழுங்கு செய்யப்பட்டு யாராலோ நடத்தப்படுகின்ற விடயம் என்று நாங்கள் சொன்னோம். அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எடுத்து அவர்கள் காட்டுகின்றார்கள். அது மனநோயாளி, போதைக்கு அடிமையானவர்கள் என இப்படியாக ஒவ்வொரு காரணத்தை கூறினார்.
கிண்ணியாவிலே நடந்த சம்பவத்தை சொன்னபோது, அதனை ஜனாதிபதி ஒத்துக்கொண்டார். கடற்படை வீரர் ஒருவர் தான் அதிலே ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் கிறீஸ் மனிதனாக அவர் போகவில்லை. அவர் வேறு ஏதோ காரணத்திற்காக வெளியில் போய் வந்தவரை மக்கள் துரத்த அவர் கடற்படைத் தளத்துக்குள் புகுந்துள்ளார் என்று சொல்கின்றார்கள்.
ஆகவே, இப்படியாக ஒவ்வொன்றாக எடுக்கிற போது, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லுகின்றார்களே தவிர ஒட்டுமொத்தமாக எக்காலத்திலும் இப்படியான சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டா என்ற கேள்விக்குப் பதிலை அவர்களால் சொல்லமுடியவில்லை. இனிமேலும் இது நடக்காமல் முயற்சிகளை எடுப்போம் என்று வாக்குறுதிகளை அளிப்பார்கள்.
கேள்வி: குறிப்பாக பெண்கள் மட்டுமே தாக்கப்படுவது குறித்து என்ன சொல்கறீர்கள்? 
பதில்:  பெண்கள் மாத்திரம் தாக்கப்படுகின்றனர். பீதியை உண்டாக்க செய்யப்படுவதாக இந்தக் காரியத்தைச் சொல்லலாம். இதனுடைய நேரடி விளைவாக மக்களிடம் பெரிய பயம் ஏற்பட்டுள்ளது. அதனை விட பல இடங்களிலேயே மக்கள் இப்படியான செயற்பாட்டுக்கு எந்தவிதமான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள் என்பதை சோதித்துப் பார்ப்பதற்காக இருக்கலாம் அல்லது சில இடங்களிலே ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றதா? இப்படியாக பெண்களுக்குத் தொல்லை கொடுக்கின்ற போது இளைஞர்கள் ஒளித்து வைத்துள்ள ஆயுதங்களை எடுத்து வருவார்களா இல்லையா என்று சோதித்துப் பார்ப்பதற்காகச் செய்யப்படுவதாகவும் இருக்கலாம்.
கேள்வி:  மர்ம மனித செயற்பாடு மலையகத்தில் இருந்து கிழக்கு சென்று தற்போது வடக்கை ஆக்கிரமித்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்த பின் தற்போது இந்த நிலை. எவ்வாறான பீதியை மக்கள் அடைந்துள்ளனர்?
பதில்:  எல்லா இடத்திலும் மக்களுக்கு பயம் தான் ஏற்பட்டுள்ளது. காரணம் இது ஒரு மர்ம நிகழ்ச்சி. யாழ்ப்பாணத்தில் தான் ஆயுதப்படையினர் மக்களைத் தாக்குகின்றனர். போர் முடிவடைந்த சூழலில் இராணுவத்தினரோடு மக்களுக்கு நல்லிணக்கம் ஏற்படுகின்றது என நடத்தப்படுகின்ற காரியம் என அரசாங்கம் சொல்லியிருக்கின்ற அதேவேளையிலேயே இப்படியாக இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்டு மக்களை தாக்கும்படி செய்தால்அதற்கு பின்னணியிலே மோசமான எண்ணங்கள் இருக்கக்கூடும்.
மக்களையும் கிளர்ந்தெழப்பண்ணி அதற்கு பதிலடியும் கொடுத்து அதற்கு சுமுகமான நிலை மாறாமல் மீண்டும் கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்கு வேண்டுமென்றே செய்யப்படுவதாக இருக்கலாம்.
கேள்வி:  தொடர்ச்சியாக இந்த சம்பவம் இடம்பெற்றால் இதன் விளைவு என்னவாக இருக்கும்?
பதில்:  இப்படியாக நிலைமை போய்க்கொண்டிருந்தால் அரசாங்கம் இதற்கான பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். ஏனென்றால் எழுந்திருக்கின்ற பல சம்பவங்களிலேயே ஆயுதப்படையினரோடு இருக்கின்ற தொடர்பு தெளிவாக காண்பிக்கப்படலாம்.
ஆகையினால் இதனை வெளிக்கொண்டுவருகின்ற போது அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் அரசாங்கத்தினுடைய நல்லெண்ணம் இந்த வேளையில் தமிழப் பேசும் மக்களிடையே இல்லாமல் போய்விட்டதை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுவதாக இருக்கும். இதற்கு வேறு காரணங்களும் இருக்கக்கூடும். அரசாங்கத்துக்கு உள்ளேயே சில பிளவுகள் இருக்கக்கூடும். ஆனால் இதற்கான சரியான காரணம் என்னவென்பது மக்களுக்கு இன்னும் புலப்படவில்லை.
கேள்வி:  விசேட குழு ஏதும் இயங்குகின்றதா?
பதில்: விசேட குழுவென்றால் இராணுவ அதிகாரிகளாகத்தான் இருப்பார்கள். அதற்கு மேல் வேறு யாரும் இல்லை.மற்றவர்கள் என்ன தான் செய்வது.
கேள்வி:  அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த எதிரணியினரால் ஏற்படுத்தப்பட்ட திட்டம் எனலாமா?
பதில்:  யாழ்ப்பாணத்தில் யு.என்.பி இருக்கின்றதா? ஜே.வி.பி பெருமளவில் இருக்கின்றதா? அத்தனையாயிரம் படையணிகளை வைத்துக்கொண்டு எதிரணி செய்கின்றது என்று சொன்னால் அதற்கு எந்தவிதமான அர்த்தமும் கிடையாது.
இராணுவத்தினர்தான் வீடுகளுக்குள் புகுந்து மக்களைத் தாக்குகின்றனர். அது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? ஆனபடியால் இது இராணுவத்தினராலே மேற்கொள்ளப்படுகின்ற அல்லது மர்மனிதன் இராணுவத்தினரோடு இணைந்து நடத்தப்படுகின்ற செயல்.
கேள்வி:   பாதிக்கப்படும் மக்கள் எவ்வாறு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்?
பதில்:  பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு வகை உண்டு. இதில் ஒரு வகை மர்ம மனிதனால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மர்ம மனிதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். மர்ம மனிதன் யாரென்று தெரியாவிட்டால் நடவடிக்கை எடுப்பது கஷ்டம். ஆனால் இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டு பிறகு படைத்தரப்பினராலேயே தாக்கப்பட்ட மக்கள் நேரடியாக அரசாங்கப்படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
கேள்வி:   வெளிநாட்டு சக்திகளினால் இது மேற்கொள்ளப்படும் விடயமென நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. இது குறித்து உங்கள் கருத்து?
அரசாங்கத்தரப்பிலே இருக்கின்ற பலருக்கு என்ன நடக்கின்றது எனத் தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்த ஒவ்வொன்றை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியாக செய்யப்படும் காரியம் பாராளுமன்றத்திலுள்ள எல்லா உறுப்பினர்களுக்கும் அறிவித்து செய்யப்படுவதில்லை. இது உயர்ந்த மட்டத்திலே மிகவும் உயர்ந்த மட்டத்திலே இருந்து தீர்மானித்து செய்யப்படுகின்ற செயலாகும்.
கேள்வி:  தேர்தலில் அரசாங்கத்திற்கு வாக்குகள் கிடைக்காததால் பழிவாங்கும் செயலாக இருக்கலாமா?
பழிவாங்குவதற்கு இப்படியான காரியத்தை செய்யப்போவதில்லை. இதற்குப் பின்னணியிலே மிகவும் சிந்தித்து வடிவமைக்கப்பட்டு ஏதாவது ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.
கேள்வி:   தற்போது அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே இதனைக் காரணமாக வைத்து அவசரகாலச் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சி எனக் கருதலாமா?
பதில்:  அவசரகாலச் சட்டம் நீக்கப்படப்போகின்றது என்ற நேரத்திலேதான் இந்தச் சம்பவங்கள் நடைபெற்றன. எனவே, அரசாங்கத்தின் ஒரு பகுதியாலோ இராணுவத்தின் ஒரு பகுதியாலோ இவ் அவசரகாலச் சட்டம் நீக்கப்படாமல் தடுப்பதற்கு இப்படியான ஒரு காரியம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது அவசரகாலச் சட்டம் தேவையில்லை. அவசரகாலச் சட்டத்தின் கீழிருந்த சரத்துக்கள் அனைத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொண்டுவந்து விட்டார்கள்.
எனவே, எனக்கிருக்கின்ற சந்தேகம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சரத்துக்கள் ஏற்கனவே அவசரகாலச் சட்டத்தின் கீழிருந்த சரத்துக்கள். அவசரகாலச் சட்டம் நீக்கப்படக்கூடாது என்று செயற்பட்டவர்களை ஆறுதல் படுத்துவதற்காக இப்போது பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் அதே காரியங்களைக் கொண்டுவந்திருக்கக்கூடும்.

Geen opmerkingen:

Een reactie posten