September 16, 2011
எமதருமை தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களே!
குருதி வெள்ளம் காய்ந்து அதன் வீச்சம் இன்னும் வீசிக்கொண்டிருக்கும் ஈழத்து மண்ணிலிருந்து உங்கள் அனைவரையும் நோக்கிய ஒரு அகதியின் கடுதாசி இது.
இங்கிலாந்தில் வாழ்கின்ற எமது புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் நீங்கள் அனைவரும் அங்கு சென்று மாபெரும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தப்போவதாக அறிந்து இந்த அகதியின் மனம் உவகையில் பொங்கி நிற்கிறது.
மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களை உள ஆற்றுகைப்படுத்தல் வேண்டும் என்பது மனோதத்துவ உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். பிரதான கோட்பாடும் அதுவே.
மன ஆற்றுகைக்கான செயற்பாடுகளாக விளையாட்டுடன் ஆடல், பாடல், கூடிக்கழித்தல் என்பன விளங்குகின்றன. அந்த வகையில் உங்கள் முயற்சியானது வெறும் கலைத்திறமைகளை வெளிப்படுத்துவதாக மட்டுப்படாமல் மனோதத்துவ சிகிச்சையாகவும் அமையப் போகின்றது என்பதை நான் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன். நன்றிகள்.
எனினும் உறவுகளே!
எமது நெஞ்சில் சிறு சிறு நெருடல்கள்……
அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் தவறேதுமில்லை என நம்புகின்றேன்.
எமது உறவுகளாகவே நாங்கள் உங்களை நினைத்திருக்கின்றோம். இறுதிப்போர்க்காலங்களில் நாம் அலறித் துடித்தபோது சினிமாத்துறையினராகிய நீங்கள் துடித்தெழுந்து எமக்காக வானதிரக் குரல் கொடுத்ததை இன்னும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
ஆனால் நாம் கொடியிழந்து, முடியிழந்து, படையிழந்து வஞ்சிக்கப்பட்டு நொந்து அழும்போது நீங்கள் ஏன் எமைத்தேற்ற வரவில்லை….?
குருதிச் சேற்றிலிருந்து மீளமுடியாது அழுந்திக்கிடக்கும் எங்களை கை கொடுத்துத் தூக்கி விட ஏன் நீங்கள் நினைக்கவில்லை…?
புழுதியில் புரண்டபோதும் எமது தேவர்களாகவும் தேவதைகளாகவும் உங்களைத்தானே நினைத்திருந்தோம். இந்த தாசர்களின் கண்ணீர் துடைக்க ஏன் நீங்கள் வரவில்லை.
நாங்களும் இங்கு பாதிக்கப்பட்டிருக்கின்றோம். எமது குழந்தைகளும் ஏக்கத்துடனேயே தமது எதிர்காலத்தை நோக்குகின்றன.
நிச்சயமற்ற எதிர்காலம்…..
நம்பிக்கையற்ற நாளைகள்……
எம் தோள் மீது கைபோட்டு நெஞ்சை வருடிவிட்டு ‘மீண்டும் நீ எழுவாய் தோழனே’ என தெம்பூட்ட உங்கள் கரங்களும் மனங்களும் ஏன் மறுக்கின்றன?
‘நாம் இருக்கின்றோம் அஞ்சற்க’ என துணிவூட்ட பலம் பொருந்திய தமிழ் சினிமா சமூகம் சிந்திக்காதது ஏன்?
நாம் எல்லாவற்றையும் இழந்தவர்கள் என்பதற்காக ஏங்கியே சாக வேண்டுமா…?
யாரோ தேவர்கள் வானிலிருந்து குதித்துத்தான் எம்மை மீட்க வேண்டுமா…?
இன்னுமொரு தேவ மைந்தன் இப்போதைக்கு வருவார் என்று நாம் நம்பவில்லை. எங்களுக்குத் தேவை ஆதரவான அரவணைப்புத்தான். அதைத் தர வேறொருவரையும் விட உங்களால் தான் அது முடியும்.
நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்…..
நாங்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம்……
நாங்களும் முதுகில் குத்தப்பட்டிருக்கின்றோம்……
உலகில் உள்ள எவரையும் விட உள ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்…….
எமக்கும் உள ஆற்றுகை தேவை.
அச்சத்தினாலும் இழப்புகளினாலும் இறுகியிருக்கும் எம் மனங்களிற்கும் சிகிச்சைகள் தேவை. எங்களையும் தேடி வாருங்கள். எம்மோடு ஆடிப்பாடுங்கள். எம் குழந்தைகளுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஊட்டுங்கள்.
இன அழிப்பு விடயத்திற்காக இலங்கை விஜயங்களை கட்டுப்படுத்தும் உங்கள் சங்கங்களிடம் சொல்லுங்கள்.
அரசியற் கலப்பற்ற எமது மக்களின் மன ஆற்றுகைக்கான உங்கள் வரவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எமது அவலங்களை வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்ல. அவற்றிலிருந்து மீண்டெழவும் உங்கள் அன்பான அரவணைப்பு எமக்குத் தேவை.
நாம் இப்போது வேண்டி நிற்பது போர்க்குற்ற விசாரணையை அல்ல…
மனிதர்களாக நிமிர்ந்து நிற்பதையே.
நாம் பிணங்களாகச் சரியும்போது கொத்துக் கொத்தாக மடியும்போது கந்தகத் தீயில் தசித்துக்கிடந்த போது உலக சமூகத்தை நோக்கி கரங்கூப்பி ‘காத்தருள்க’ என இறைஞ்சிக் கதறும்போது கண்மூடி நின்ற உலக அரசியல் இன்று போர்க்குற்ற விசாரணை நடாத்தி எதை எமக்கு பெற்றுத்தரப் போகிறது.
அது தன்பாட்டிற்குப் போகட்டும். நாம் எதையும் மறப்பதற்குத் தயாராகவில்லை. ஆனால் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.
எப்படி மறப்பது..? கண்முன்னே நாம் கண்ட கொடூரங்கள். அங்கங்கள் ஊனமான அரை மனிதத் தோற்றங்கள். சொந்தங்கள் சிதறிச் செத்த அந்தக் கோரங்கள். தூக்கத்திலும் கண்ணின் உள்ளே கூத்தாடும் செந்நீர் சீறல்கள்….
இது தான் எமது வாழ்க்கை. இரணமான எமது மனங்கள் மறக்கச் சொன்னால் மறக்குமா….? நினையாதே எனச் சொன்னால் பணியுமா….?
கல்யாண வீட்டிற்குச் சென்றாலும் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட உறவுகள் இங்க இல்லையே என நெஞ்சம் ஏங்கும். சாவீட்டிற்குச் சென்றாலும் கட்டியணைத்து அழ வேண்டியவர் போனதெங்கே என மனம் தேடும்.
ஒற்றைக் காலுடன் இரட்டைக்கோல் ஊன்றி தாவித்தாவி நடக்கும்போது மற்றக்காலை மறந்துவிட முடியுமா?
பக்கத்து ஊரில் நாகதம்பிரான் கோவில் பொங்கலென ஊர் திரளும்போது சமாதான காலமிது. என்ன தடை எமக்கென்று சுற்றுலாவரும் தென்னிலங்கைச் சோதரர்கள் ஆடிப்பாடிக் கூடும்போது சோடி சோடியாய் ஒட்டியபடி ஆணும் பெண்ணும் சிரிக்கும் போது அன்றொரு காலம் என்னுடன் சோடி போட்டு வந்தவர் இன்று என்னுடன் இல்லையே என்று என் அக்கா விம்மும்போது நாகதம்பிரான் கோவில் பொங்கல் எதை மறக்க வைக்கும்.
காலையில் வேலைக்குப் போக பேருந்துக்கு நிற்கும்போது எதிரெ உள்ள வீட்டிலிருந்து கைகாட்டி வழியனுப்பும் குழந்தை….
இப்போதும் நிற்கின்றேன்….. கைகாட்டி புன்னகைக்க அந்த மழலை இல்லை. ஏனென்று அங்கு சென்று கேட்டேன். கந்தகச் சிதறல் கொண்டு போனதே எனக் கதறும் அம்மம்மா.
அருகே சித்தம் பேதலித்துச் சிரித்துக் கொண்டிருக்கும் பெற்றெடுத்த தாய்….
ஏன் சாகிறோம் என்று தெரியாமலே சதைத்துணுக்குகளாய்ச் சிதறிப்போன அந்தக் குழந்தையை மறக்க பேருந்து நிலையத்தையென்ன பிடுங்கியா எறிய முடியும்?
இவற்றையெல்லாம் ஏன் எங்களிடம் சொல்கின்றீர்கள் எனக் கேட்கின்றீர்களா?
நியாயம் தான். எனினும் இந்த அவலங்களுக்கு நீங்களும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாயிருக்கின்றீர்கள் என்பதுதான் எனது குற்றச்சாட்டு.
வெறுமே பொங்கியெழுந்து போராடியதுடன் அடங்கிப் போனீர்கள். காலை உணவிற்கும் பகல் உணவுக்கும் இடையே நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை படைத்த பழம்பெரும் தமிழ்த் தலைவரின் உண்ணாவிரதத்துடன் அடங்கிப் போனீர்கள்.
எமது அழிவுகளைப் பார்க்க மறுத்தும் உங்கள் கண்களையும் காதுகளையும் இறுக மூடிக்கொண்டு சூட்டிங் லொகேசனுக்குப் போய்விட்டீர்கள்.
எமது ஒப்பாரியைக் கேட்க மறுத்து ஸ்ரூடியோவினுள் குத்துப்பாட்டு பாடப் போனீர்கள்.
நீங்கள் நினைத்திருந்தால் தமிழகத்தை சீறியெழ வைத்திருக்கலாம். தமிழக அரசை அசைத்திருக்கலாம்.
மத்திய அரசை ‘குய்யோ முறையோ’ வென அலற வைத்திருக்கலாம். அதற்கு வாய்ப்பாக இந்திய நாடாளுமன்றத்தேர்தல் கூட உங்களுக்கு களமாகக் காத்திருந்தது. நீங்கள் நினைத்திருந்தால் இந்திய அரசை எமது பிரச்சனையில் தலையிடச் செய்திருக்கலாம். பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.
வெறும் சீனப்பூச்சாண்டி காட்டிக் காட்டியே கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டிய கிருஸ்ணன்களையும் மேனன்களையும் வழிக்குக் கொண்டு வந்திருக்கலாம்.
செய்தீர்களா….?
இதையெல்லாம் கேட்க நீ யார் என்று கேட்பதுவும் எனக்குத் தெரிகிறது.
அதையும் கூறுகிறேன் கேளுங்கள். அதற்கு சில தசாப்தங்கள் பின்னோக்கிச் சென்ற திரும்ப வேண்டும்.
இலங்கைத் தீவிலும் தமிழ்ச்சினிமா என்ற ஒன்று இருந்தது. ‘தோட்டக்காரி’ என்று தொடங்கிப் பல சினிமாக்கள் 1983 வரை தயாரிக்கப்பட்டன. பல தோல்வி கண்டன. சில வெற்றி கண்டன.
1983 இற்கு முற்பட்ட காலம் வரை இலங்கைத் தமிழ்த் திரைத்துறை வெற்றிகரமாக இயங்காமை தொடர்பாக ஒரு கருத்து நிலவியது. அது போதியளவு தமிழ்ச் சனத்தொகை இலங்கையில் இல்லை என்பதுவே.
ஆனால் இன்று தமிழகச் சினிமாவின் வெற்றிகளை தீர்மானிப்பது எமது புலம்பெயர் ஈழத்தமிழர்களே என்பதை நீங்கள் அறியாத முட்டாள்கள் அல்ல.
உங்களின் தற்போதைய நட்சத்திர ஜொலிப்புகளுக்கும் ஆடம்பர பட்டோப வாழ்க்கைக்கும் எமது புலம்பெயர் உறவுகளே அடித்தளம் என்பதை நீங்கள் மறந்துவிட மாட்டீர்கள்.
எங்கள் புலம்பெயர் உறவுகளின் பெரும் பொருளாதாரப் பலத்திலேயே தென்னிந்தியத் தமிழ்ச்சினிமா உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தப்பலம் மட்டும் அதற்குத் துணையாக இல்லாது விட்டால் தமிழ்ச் சினிமாவானது எங்களைப்போல் சேடமிழுத்துக்கொண்டு இருந்திருக்கும்.
எமது உறவுகளின் அனுசரணையுடன் ஐரோப்பிய நாடுகளில் கலைச்சுற்றுலா செல்லும் நட்சத்திரங்களே. எமக்காக உங்கள் நாட்டின் ஒரு நாணயத்தையாவது வழங்கியிருப்பீர்களா…..?
நீங்கள் அனைவரும் மனம் வைத்தால் எமது இன்றைய பிரச்சனைகளுக்கு ஐம்பது சதவீதமான தீர்வுகள் கிடைத்திருக்கும்.
இலங்கை வருகைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் உங்கள் சங்கனிடம் கூறுங்கள்.
அரசியற் கலப்பற்ற உண்மையான ஈழத்தமிழ் அகதிகளுக்கு துணைபுரிகின்ற அவர்களை மனிதர்களாக உத்வேகமூட்டக்கூடிய உளவளத்தை மேம்படுத்துகின்ற இலங்கைத்தீவு வருகைக்கு தடை போடாமல் உற்சாகப்படுத்தும்படி கூறுங்கள்.
எங்களோடு சேர்ந்து எங்கள் அவலங்களைப் பதிவு செய்யும் உன்னத சினிமாப் படைப்புகளை உருவாக்கக் கரம் தாருங்கள்.
நாளைய வாழ்க்கை மீதான நம்பிக்கையை எமக்கு ஊட்ட எமது பச்சிளம் சிறார்களுடன் ஆடிப்பாட வாருங்கள்.
உங்கள் நாடும், நாட்டின் அரசும் எமது துன்பங்களுக்குக் காரணமாக இருந்த வரலாற்றுக் கறைகளை உங்களால் மட்டுமே துடைக்க முடியும்.
ஈழத்து அகதிகள் சார்பாக என்னால் முன் வைக்கப்படும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறும் நான்…
உணர்வா…???
பணமா…???
- உண்மையான ஈழத்து அகதி.
Geen opmerkingen:
Een reactie posten