தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 september 2011

தொடரும் கனடாவின் காத்திரமான செயற்பாடுகளால் சீற்றமடைந்துள்ள சிறீலங்கா

[ செவ்வாய்க்கிழமை, 27 செப்ரெம்பர் 2011, 06:36.11 AM GMT ]
சிறீலங்காவிற்கு அதிர்ச்சிதரும் வகையில் கனடிய அரசு வெளிக்காட்டிவரும் காத்திரமான இராஐதந்திர செயற்பாடுகள், சிறீலங்கா அரசையும், கடுங்கோட்பாட்டு சிங்களவர்களையும் கடும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தமது சீற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் கனடாவிற்கு எதிரான மலினத்தனமான பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
கனடாவின் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் 2013ம் ஆண்டு சிறீலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மகாநாட்டில் அந்நாட்டில் காத்திரமான மாற்றங்கள் ஏற்படாத வரை நான் கலந்து கொள்ளப் போவதில்லை அதேபோன்று ஏனைய நாடுகளின் தலைவர்களும் செய்வார்கள் எனத் தெரிவித்தமை கடும் அதிர்ச்சியை சிறீலங்கா அரச வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு சிறீலங்காவில் நடைபெறவிருந்த கொமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தை அவுஸ்திரேலியாவிற்கு மாற்றுவதில் கடந்தமுறை பிரித்தானியா பிரதான பங்கு வகித்தது. இந்நிலையில் 2013ல் சிறீலங்காவில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கான எதிர்பை கனடா தலைமை தாங்கி முன்னெடுப்பது பாரிய சிக்கலை கொழும்பு அரசியல் தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பில் உள்ள இராஐதந்திரிகள் பலர் தெரிவித்தனர்.
கடந்த வாரம் நியூயோர்க்கில் நடந்த ஐ.நா பொதுச்சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட கொமன்வெல்த் தலைவர்கள் பலர் இது குறித்து தங்களிடையே பேசிக் கொண்டார்கள் என சிறீலங்கா இராஜதந்திர வட்டாரங்களில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அதுவும் பிரித்தானிய பிரதமர் ஐ.நாவில் இருந்து கனடாவிற்கு விஜயம் செய்ததும், இரண்டு பிரதமர்களும் பேசிக் கொண்டதும் கொழும்பில் மேலும் விசனத்தை அதிகரித்துள்ளது. கனடா, பிரித்தானியா என்பன கொமன்வெல்த்தில் முதன்மை நாடுகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகின் பலநாடுகளில் ஏற்பட்டுவரும் இராஜதந்திர அணுகுறை மாற்றங்களால் சீற்றம் அடைந்துள்ள சிறீலங்கா அரசு, கனடாவின் அதிரடியான வெளிப்படையான செயற்பாடுகளால் மேலும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது என்றார் ஆசிய இராஜதந்திரி ஒருவர்.
அதுவும் கனடா உட்பட பல நாடுகள் தமிழர் பிரதிநிதிகளான தமிழர் தேசிய கூட்டமைப்புடன் திரை மறைவில் மேற்கொண்டு வரும் பல உரையாடல்கள் சிறீலங்காவின் சீற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சிறீலங்காவிற்கு எதிராக இறுக்கமடைந்துவரும் சர்வதேச சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல உயர்மட்டக் கூட்டங்கள் கடந்த சில தினங்களாக கொழும்பில் நடைபெற்று வருவதாகவும், ஜனாதிபதி ராஜபக்சவின் நியூயோர்க் விஜயத்தின் போதும் இதுகுறித்து தீவிரமாக அங்கு ஆராயப்பட்டதாகவும் விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பான அரசிற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் சிங்கள தமிழ் செயற்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாவும் அறியப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலையை அதிகரிக்கும் செயற்பாடுகளை கூட்டுமாறு பலரும் பணிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை அதிகமாக தமிழர்களிடையே வெளியிட்டு குழப்பங்களை வளர்க்குமாறும், புலம்பெயர்ந்த தமிழர் செயற்பாடுகளை முழுமையாக கவனித்துக் கொள்ளும் வகையிலான ஊடுருவல்களை தீவிரப்படுத்துமாறும் சிறீலங்கா அரச செயற்பாட்டாளர்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
சிறீலங்காவின் சீற்றம் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களை சுற்றி மையம் கொள்ள ஆரம்பித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten