தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 september 2011

நெருங்க முடியாதளவுக்கு இன்னமும் பற்றி எரிகிறது படைமுகாம் � வெடிக்கும் நிலையில் மேலும் இரு ஆயுதக்கிடங்குகள்

(படங்கள் இணைப்பு)
வீரவில சிறிலங்கா படைமுகாமில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தை அடுத்து முகாமுக்குள் பற்றிக் கொண்ட தீ நள்ளிரவுக்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




மறைந்த பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவுக்கு சொந்தமான சனசும விடுதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமிலேயே இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து சிறிய ஆயுதக்கிடங்கிலேயே தீ விபத்து ஏற்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார்.

படையினர் தங்கியிருந்த பகுதியில் இருந்து சற்றுத் தொலைவிலேயே, ஆயுதக்கிடங்கு அமைந்திருந்ததால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து வீரவில படைமுகாமில் இருந்த படையினரும் முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த பொதுமக்களும் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி மேலும் இரு படையினருடன் அங்கு சென்றபோதே வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், கூடச் சென்ற இரு படையினரும் காயங்களுடன் திரும்பியுள்ளதாகவும் தங்காலை காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆயுதக்கிடங்கிற்குப் பொறுப்பான அதிகாரி பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பற்றியெரியும் படைமுகாமுக்குள் படையினர் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பது பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், தீயினால் ஏற்பட்டுள்ள கடும் வெப்பமும், கரும்புகையும் முகாமுமைச் சூழ்ந்துள்ளதாலும், தொடர்ந்து வெடிப்புகள் இடம்பெறுவதாலும் முகாமை நெருங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வெடிப்பு நிகழ்ந்த முகாம் பிரதேசம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள படை முகாம்கள், காவல் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெருமளவு படையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெடித்துச் சிதறிய ஆயுதக்கிடங்கிற்கு சற்றுத் தொலையில் உள்ள ஏனைய இரு ஆயுதக்கிடங்குகளையும் பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தின் சிறப்பு அணிகள் வீரவிலவுக்கு வான்வழியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பிந்திய செய்தி

வீரவில படைமுகாமில் நேற்று் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 Sep 2011

Geen opmerkingen:

Een reactie posten