தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 september 2011

உறங்கிக் கொண்டிருந்த ஆண்களை இழுத்துச் சென்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதியில் போட்டு அடித்தனர்! கொக்குவில் மக்கள்

[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 06:29.06 PM GMT ]
சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்திற்கு கல்லெறிந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எங்கள் வீட்டு ஆண்களை இழுத்துச் சென்று இராணுவத்தினரும் பொலிஸாரும் வீதியில் போட்டு அடித்தனர் என கொக்குவில் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொக்குவில் பிரதேசத்தில் நேற்று இரவு 8.30மணியளவில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. அதனை அவதானித்த மக்கள் சிலர் மின்னொளிகளைக் கொண்டு தேடியபோது மதிலில் இருந்து மர்ம மனிதனொருவன் பாய்ந்து ஓடியுள்ளான்.
ஓடியவன் நேராக வீதியில் நின்ற சிங்களவனுக்குச் சொந்தமான பேருந்தினுடாகச் சென்று மறைந்திருக்கின்றான். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த பேருந்தின் மீது கல்லெறிந்துள்ளனர்.
இதனால் குறித்த பேருந்து அங்கிருந்து விலகிச் சென்றுள்ளது. இதன் பின்னர் சுமார் 10.30 மணியளவில் பிரதேசத்திற்க்கு வந்த படையினரும் பொலிஸாரும் சிவில் உடையணிந்த வேறு சிலரும் மக்களை வீதிகளிற்கு கொண்டு வந்துள்ளனர்.
அங்கு வைத்து மக்கள் மீது மிகவும் கண்மூடித்தனமாகவும் காட்டுமிராண்டிகள் போலவும் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக பிரதேச இளைஞர்கள் இருவரை வீதியில் படுக்க வைத்து நான்கு பேர் பிடித்திருக்க முகத்தை ஒருவர் காலால் அழுத்தி வைத்திருக்க சுமார் 15ற்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று அடித்துள்ளனர்.
இதற்கான கட்டளையை பொலிஸ் அதிகாரியொருவர் இராணுவத்தினருக்கு வழங்கியிருக்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள் என நினைத்து அருகிலிருந்த பற்றைக்குள் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் சுமார்  22ஆண்கள் மீது மிகவும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்ட பொலிஸாரும், இராணுவத்தினரும் அவர்களை கைது செய்து இன்று காலை வரையும் விளக்க மறியலில் வைத்திருந்த பின்னர் 16 பேரை விடுவித்துள்ளனர்.
ஏனைய 6பேரை தமது விளக்க மறியலில் வைத்து விசாரித்த பொலிஸார் அவர்களின் 3 பேரின் மீது தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா 75ஆயிரம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஏனையவர்கள் கடுமையான காயங்களுடன் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும் கடுமையாகத் தாக்கப்பட்ட இருவரில் ஒருவர் இரண்டு கால்களும் உடைக்கப்பட்ட நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten