தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

மாணவர்களை உட்காத்திவைத்து மகுடி ஊதும் சில மனிதர்கள் !


தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதராவ தோன்றியுள்ள மாணவர் கிளர்ச்சியை பிழையான பாதையில் சிலர் வழிநடத்த ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளைப் பற்றி புலம்பெயர் நாடுகளில் உள்ள அனைத்து தமிழர்களும் நன்கு அறிவார்கள். அதற்கான விளக்கத்தை நாம் இங்கே கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை என நினைக்கிறோம். ஆனால் ஒரு சில தமிழின உணர்வாளர்களைத் தவிர ஏனையோர்... பிணத்தின் மீதும் ஏறி அரசியல் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை. தேசிய தலைவரது இளையமகனான பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக வெளியான காட்சிகளைப் பார்வையுற்ற, தமிழக மாணவர்கள் பலர் கொதித்து எழுந்தார்கள் ! ராஜபக்ஷவை போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்து ! மற்றும் தமிழீழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து என்று கோரிக்கை விடுத்தனர் ! இவை இரண்டுமே இவர்களது ஆரம்ப கட்ட கோரிக்கையாக இருந்தது. அவர்களது போராட்டமும் மதிக்கத்தக்க வகையில் இருந்தது.

ஆனால் சைக்கிள் காப்பில் நுளைந்த சிலர் அமெரிக்க பிரேரணையால் எவ்வித பலனும் இல்லை , எனவே அதனையும் போட்டு எரித்துவிடுவோம் என்று அறிவுரை கூற , மாணவச் செல்வங்களும் அதனை தீக்கிரையாக்கியுள்ளார்கள். தமிழக மாணவர்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் இந்த ஆயுதம் ஈழத் தமிழர்களையும், அவர்கள் அரசியல் நகர்வுகளையும் எவ்வாறு பாதிக்கும் என்று அவர்கள் சற்றேனும் சிந்தித்தார்களா ? இல்லை சிந்தனையூட்டியவர்கள் வலையில் சிம்பிளாகச் சிக்கினார்களா ? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதாவது அமெரிக்க தீர்மானத்தை ஏன் எரிக்கவேண்டும் ? அமெரிக்காவை ஏன் எதிர்க்கவேண்டும் ? இன்று அமெரிக்காவை எதிர்க்கும் உங்களுக்கு எந்த நாடு உதவ உள்ளது என்று சற்று கூறமுடியுமா ? இல்லை என்றால் பிறிதொரு நாடு உதவ இருப்பதால் அமெரிக்காவை தூக்கி எறிய முற்படுகிறீர்களா ? எந்த விதமான ஆதரவை வைத்துக்கொண்டு இவ்வாறு செய்கிறீர்கள் ? பூகோள அரசியல் தெரியுமா ? இல்லை புலம்பெயர் மக்களின் அரசியல் நகர்வுகள் தான் புரியுமா ? வெறுமனவே இவ்வாறு சட்டென்று எப்படி முடிவை கையில் எடுத்தீர்கள் ?(மாணவர்களைக் கேட்க்கவில்லை) அறிவுரை கூறிய புண்ணியவான்களை பார்த்து கேட்க்கிறோம்.

இவை அனைத்தும் நடைபெற ஒரு காரணம் உண்டு. ஆம் தமிழ் நாட்டில் தற்போது கலைஞர் ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார். அவர் தனது சுயநலத்திற்காகத் தான் ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார் என்று இன்றுவரை குறைகூறும் அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் இருக்கிறார்கள். அது அவர்களுடைய சொந்தக் கருத்து. ஆனால் இறுதியாக திமுக நடத்திய மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. திமுக வினரே இப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அங்கே திரண்ட கூட்டம் ஈழத் தமிழர்களுக்காகத் திரண்டது என்பதனையும் மறந்துவிடவேண்டாம். இது இவ்வாறு இருக்க, ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாகவே பேசிப் பேசி தமிழ் நாட்டில் தம்மை வளர்த்துக்கொண்ட கட்சிகள் பல இருக்கிறது. அவர்களுக்கு இது பெரும் தலைவலியாக மாற ஆரம்பித்தது.

இங்கே நாம் ஐயா நெடுமாறன் அவர்களையோ, அண்ணன் வைகோ அவர்களையோ இல்லையேல் உணர்வாளர் சீமான் அவர்களையோ குறிப்பிடவில்லை. ஏன் எனில் இக் கட்டுரையை அப்படியே திருப்பி, இது உங்களுக்கு எதிராகத்தான் எழுதப்பட்டுள்ளது என்று அவர்களுக்கு நெருக்கமான சிலர் சொல்லி புரளியைக் கிளப்பவும் தயங்கமாட்டார்கள். எனவே அதனை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மேற்குறிப்பிட்ட நபர்கள் அல்லாதவர்கள் சிலர், கலைஞரின் டெசோ அமைப்பு அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கிறது என்ற காரணத்தால், மாணவர்களைத் தூண்டி விட்டு அமெரிக்க பிரேரணையை எரிக்கச் சொல்லியுள்ளார்கள். இதற்கான அறிவூட்டல் யாரால் எப்போது எந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் எமக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு இவர்களுக்கு சொல்லப்பட்டதும் இம் மாணவர்கள் விடுத்த ஊடக அறிக்கைகள் கூட எம்மிடம் சான்றாக உள்ளது. எனவே எது நடக்கிறது எவ்வாறு நடக்கிறது என்பதனை நாம் நன்கு அறிவோம். அதிலும் தமிழகத்தில் உள்ள சிலருக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பிடிக்காதாம். அதனால் ஈழத் தமிழர்களுக்கு சற்றேனும் உதவ முன்வரும் அமெரிக்காவை நாம் அடியோடு வெறுத்து ஒதுக்க முடியுமா ? அவர்களுக்கு பிடிக்காத அமெரிக்கா ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வரும்வேளை நாம் அதனை வெறுக்கமுடியுமா ?

அமெரிக்க பிரேரணைய எரிக்கச் சொல்லும் சில தமிழகப் பிரமுகர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது கலைஞரைக் குறைசொல்ல ? ஏன் எனில் கலைஞர் தன் சுயநலத்துக்காக ஈழத் தமிழர் பிரச்சனையைக் கையில் எடுத்தார் என்று தானே நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் தற்போது என்ன செய்கிறீர்கள் ? அதே வேலையத்தானே நீங்களும் செய்கிறீர்கள் ! பின்னர் என்ன வேறுபாடு உள்ளது ? குறுகிய நோக்கங்களுக்காக தமிழக மாணவர்களுக்கு இவ்வாறு ஒரு சிந்தனையை ஊட்டிய, மனிதர்களே வாருங்கள் ! எமது புலம்பெயர் ஈழத் தமிழர்கள் இங்கே எப்படி இயங்குகிறார்கள் என்று ஒரு முறை கேளுங்கள் ! 

கனடா , பிரித்தானியா , நோர்வே, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் அன் நாடுகளில் உள்ள அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளோடு இணைந்தே தமது அரசியல் நகர்வுகளை மேற்கோண்டு வருகிறார்கள். அவர்கள் எந்த ஒரு அரசையும் ஒதுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை. இவ்வளவு அட்டூழியங்களைப் புரிந்த இந்திய அரசிற்குக் கூட நேசக் கரம் நீட்டுபவர்கள் ஈழத் தமிழர்கள். தமது ஆயிரம் ஆயிரம் உறவுகளை இழந்த பின்னரும், தாம் ஆண்டாண்டாக அடிமை வாழ்க்கை வாழ்ந்தது போதும், தமது சந்ததியாவது சுதந்திரமாக வாழவேண்டும் என்று நினைப்பாவர்கள். ஈழத்தில் பேச்சு சுதந்திரம் இன்றி அல்லலுறும் மக்களின் குரலாக ஒலிப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள். தற்சமயம் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறது என்றால் அதனைப் பாவிப்பதில் என்ன தவறு இருக்கிறது ? ஒரு ஊருக்குச் செல்லவேண்டும் ஆனால் நடந்து தான் செல்லவேண்டும் என்று வைத்துக்கொண்டால், பாதையில் வேகமாகச் செல்லக்கூடிய பஸ் வந்தால் அதில் ஏறி சிறு தூரம் பயணிப்பது இல்லையா ? அதுபோல அமெரிக்காவின் முதுகில் நாம் சிறிது தூரம் பயணித்தால் என்ன ?

அதாவது எமது தேசிய தலைவர் ஒரு கருத்தை அடிக்கடி சொல்லுவார். நாம் எமது கொள்கையில் உறுதியாக இருந்தால் எதிரியின் பாசறையில் கூட இருந்து போராடலாம் என்று. சிலர் சொல்வது போல அமெரிக்கா தற்காலிகமாகத் தான் இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறது என்று வைத்துக்கொண்டால் கூட, அதனையும் பயன்படுத்துவதே மதி நுட்ப்பம் ஆகும். அதனை விடுத்து அவர்கள் பிரேரணையை எரிப்பதும் அவர்களை கொச்சைப்படுத்துவதாலும் நாம் ஈழத்தை அமைத்துவிட முடியுமா ? அப்படி நினைத்தால் அதுபோன்ற ஒரு முட்டாள் தனமான காரியம் வேறு ஒன்றுமாக இருக்க முடியாது. எனவே அனைத்து நாடுகளின் அனுசரணையோடு ஈழத் தமிழர்கள் முன்னேறுவதே தமிழர்களுக்கு நன்மை பயக்கும். எந்த எந்த நாடுகள் எவ்வகையில் உதவி புரியும் என்பதனைப் பார்த்து, அவ்வாறு எமது அரசியல் நகர்வுகளை நாம் நகர்த்தினால் தான் வெற்றியைக் கிட்டமுடியும். இக் கட்டுரை எவர் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மீண்டும் மன்னிப்புக் கோருகிறோம். இது எமது கருத்தாகும். கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா !




Geen opmerkingen:

Een reactie posten