தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

தமிழ்நாட்டில் உள்ள எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளியிடவேண்டும்!- பிரித்தானிய தமிழர் பேரவை


தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அப்பழுக்கில்லாத உங்கள் உணர்வுகளுக்கு நாங்கள் தலை சாய்த்து வணங்குகின்றோம். மாணவர்கள் அநீதியையும் அடக்குமுறையையும் எதிர்க்கும் உணர்வு உலகளாவியது.
நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் இதுவரை விலைமதிப்பில்லாத பல உயிர்களைக் கொடுத்துள்ளோம். இருந்தும் உலகின் நீதி எமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நாம் கொடுத்த விலை போதும், உங்களை வருத்திக் கொண்டு மானுட தர்மத்திற்காக போராடுவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஆயினும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  
உங்களைப் போலவே 70களில் மாணவர்கள், இளைஞர்கள் தமிழீழத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனவழிப்பினைத் தடுத்து நிறுத்த வெகுசனப் போராட்டங்களில் இறங்கியபோது போராட்டத்தின் நியாயப்பாடு சாதாரண மக்களிடையே வேகமாகப் பரவியது.  அதன் தார்மிக பலம் வலுப்படுத்தப்பட்டது. 
உங்களைப் போலவே 2000 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் ஸ்ரீலங்காவின் கொடிய இராணுவ அடக்குமுறையின் மத்தியில் துணிந்து நின்று  "பொங்கு தமிழ்" முழக்கத்தின் மூலம் எழுச்சியை ஏற்படுத்தியது உலகின் மனச் சாட்சிக்கு விடுத்த சவாலாக அமைந்தது. ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்த மக்களின் உள்மன வெளிப்பாடாக அது அமைந்தது.
உங்களைப் போலவே 2009ஆம் ஆண்டு லண்டனில் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் திரண்ட இளையோர்கள், மாணவர்கள் பிரித்தானியாவை மட்டுமல்ல உலகின் கவனத்தையே தம் பக்கம் திருப்பியது எம் வெகுசன எழுசிப் போராட்டத்தில் ஒருமுக்கியமான அத்தியாயமாகும்.
அன்று பாலச்சந்திரனைப் போன்ற எத்தனையோ அப்பாவிக் குழந்தைகள், மாணவர்கள் மற்றும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றழித்துக் கொண்டிருக்கும் போது உலகின் மனச் சாட்சியில் நம்பிக்கை வைத்து எங்கள் இளையவர்களும் நாங்களும் கதறிய போது உலகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 
போர்க் குற்றம் மற்றும் இனவழிப்பு நடைபெற்றுள்ளது, இப்போதும் தொடருகின்றது என்பதற்கான ஆதாரங்கள் தமிழர் தரப்பால் மட்டுமன்றி நடுநிலையானவர்களாலும் பெருமளவில் வெளிப்படுத்திய பின்னரும் உலகம் மிக நிதானமாகவே அசைகின்றது. இவ்வாறு சிங்கள அரசுக்கு காலத்தையும் வெளியையும் கொடுப்பது தமிழர்களுக்கெதிரான இனவழிப்பை முழுமையாகுவற்குக் கிடைக்கும் அங்கீகாரம் ஆகும்.
அநீதிக்கெதிரான எம் போராட்டம் உலகின் பூகோள நலன்களில் சிக்கிச் சிதையாது வெற்றியடைய வேண்டுமானால் இந்திய மக்களின் பேராதரவு நீதிக்கான எம் கோரிக்கைக்குச் சாதகமாக திருப்பப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இன்று வந்திருக்கும் எழுச்சி ஏனைய மாநிலங்களில் மனச்சாட்சியின் குரலாக வெளிப்பட வேண்டும்.
புனிதமான உங்கள் குரல்கள் எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten