தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 maart 2013

போரில் இலங்கைக்கு இந்தியா உதவியிருந்தால் அதுவும் விசாரிக்கப்பட வேண்டிய நிலை வரலாம்! கருணாநிதி பேட்டி !


2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இலங்கை விவகாரத்தை முன் வைத்து மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதை இன்று நிருபர்களிடம் அறிவித்த கருணாநிதி நிருபர்களுக்கு வழங்கிய பேட்டி:
கேள்வி: இனிமேல் மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில்ஆதரவு தரப்படுமா?
பதில்: பொதுவாக பிரச்சனை அடிப்படையில் ஆதரிப்பது என்பது எல்லா கட்சிகளுமே கடைப்பிடிக்கின்ற முறை தானே.
கேள்வி: அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படுமா?
பதில்: எதுவும் கிடையாது.
கேள்வி: மத்தியில் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தீர்கள். நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக் கூடுமல்லவா?
பதில்: அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல.
கேள்வி: நேற்றைய தினம் உங்களை மத்திய அமைச்சர்கள் சந்தித்து விட்டுப் போன பிறகு, மத்திய அரசிலிருந்து உங்களுக்கு ஏதாவது தகவல் வந்ததா?
பதில்: பத்திரிகைகளில் வந்த செய்திகள் தான் தகவல். எங்களிடம் யாரும் இதுவரை பேசவில்லை.
கேள்வி: இது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்று நினைக்கிறீர்களா? ஏனென்றால் 2009ம் ஆண்டு இலங்கையில் இறுதிப் போர் நடந்தபோது நீங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளதே?
பதில்: 2009ம் ஆண்டில் நாங்கள் என்ன செய்யவில்லை? அப்போது நாங்கள் ஒன்றும் அமைதியாக இல்லையே.
கேள்வி: பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டு உங்கள் மீது சொல்லப்பட்டதே?
பதில்: 'பொது' என்பதே ஒரு நல்ல சொல் அல்ல.
கேள்வி: டெசோவின் அடுத்த கட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
பதில்: டெசோ சார்பில் ஏற்கனவே நடந்து வரும் செயல்பாடுகள் மேலும் தொடரும்.
கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வராத பட்சத்தில் இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக நினைக்கிறீர்களா?
பதில்: தற்போது ஐ.நா. மன்றமே அப்படி துரோகம் இழைத்து விட்டதோ என்று கருதுகிறேன். இந்திய அரசும் கூடத்தான்.
கேள்வி: 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்: அது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் விசாரிக்கப்பட வேண்டியவற்றில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.
கேள்வி: அப்படிப்பட்ட நிலையில் இந்திய அரசும் சேர்ந்து போர்க் குற்றம் செய்ததாக கருதலாமா?
பதில்: அது உண்மையா இல்லையா என்பது முதலில் தெரியட்டும்.
கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா?
பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
கேள்வி: உங்களுடைய மத்திய அமைச்சர்கள் எப்போது ராஜினாமா செய்வார்கள்?
பதில்: இன்று அல்லது நாளை.
இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார். 

Geen opmerkingen:

Een reactie posten