தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

அமெரிக்காவின் தீர்மானமும் தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களின் போராட்டமும் !



இலங்கைக்கு எதிரான அமெரிக்காத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டுமெனக் கோரி, தமிழக மாணவர்கள் நடாத்தும் போராட்டம் புதிய உத்வேகத்தை அளிக்கின்றது. மேலும் தமிழீழ மண் விடுதலையடையும் என்ற நம்பிக்கையை எமக்கு தருவதாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழீழ மக்களின் பாதுகாவலர்களாக திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு தமிழீழத் தமிழினம் சொந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழும் துயர நிலை சூழ்ந்துள்ளது. மேலும் தமிழீழத்தில் வாழும் எமது உறவுகள் சொல்லெனா துன்பத் துயரத்தில் வாழ்வா சாவா என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால் சிங்கள பேரினவாதம் தொடரந்தும் தனது திட்டமிட்ட இனவழிப்பை நடாத்திக் கொண்டுள்ளது. தமிழர் காலம் காலமாக வாழ்ந்த நிலப்பரப்பில் சிங்கள பெயர்களை சூட்டி பௌத்த சிலைகளை அமைத்து எமது சகோதரிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, எமது சகோதரர்களை சித்திரவதைப்படுத்தி மிகவும் திமிருடன் வேகமாக தமிழர் நிலப்பரப்பில் தனது சிங்களமயப்புடுத்தலை நிகழ்த்தி வருகின்றது.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் அமெரிக்க அரசானது தமிழர்களுக்கு நிலையான சமாதானத்தை உருவாக்கக் கூடிய தீர்மானத்தை கொண்டு வரவேண்டுமென தமிழ் இளையோர் அமைப்பு எதிர்பார்க்கின்றது.
மேலும் அமெரிக்க அரசானது இலங்கையில் ஐ. நாவினால் சுயாதின விசாரணையை ஏற்படுத்துவதற்கு இலங்கையரசை வழியுணர்த்த வேண்டும். 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல, அதுவோர் இனவழிப்பு என்று அறிவித்து குற்றவாளிகளை சர்வதேச நீதி மன்றத்தில் முன்நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புகின்றார்களா? அல்லது பிரிந்து சென்று வாழ விரும்புகின்றார்களா? என்று சனநாயகமுறையில் ஐ. நாவின் கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடாத்த அமெரிக்க அரசு உதவ வேண்டுமென விரும்புகின்றோம்.
மாறாக இலங்கையரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்மானம் வலுவற்றது, நடுநிலையாக நின்று உருவாக்கப்படவில்லை, தமிழினவழிப்பிற்கு நீதி தரக்கூடிய எந்தவொரு ஆக்கப்பூர்வமான தீர்வையும் கொண்டுள்ளதாக காணப்படவில்லை என்பதையும் நாம் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகையால் நல்லிணக்க ஆணைக்குழுவின் தீர்மானத்தை அமுல்படுத்தினால் அது தமிழர்களுக்கு நிலையான சமாதானத்தை என்றுமே ஏற்படுத்தாது. மாறாக தமிழின அழிப்பிகற்கே துணை நிற்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
2012ம் ஆண்டு இலங்கையரசுக்கு கொடுத்த ஒருவருட காலக்கட்டத்தில் இலங்கையரசு சமாதானத்திற்கான எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்பதை அமெரிக்க அரசு உணரவேண்டுமென விரும்புகின்றோம். தமிழர்களுக்கு குற்றமிழைத்த இலங்கையரசு தன்கைத்தான் விசாரித்து தனக்கு தானே தண்டனை கொடுக்கும் என்பதில் தமிழர்களுக்கு என்றுமே நம்பகத்தன்மை இல்லை.
தமிழ்நாட்டுத் தொப்புள்க்கொடி கல்லூரி மாணவச் சகோதரங்களே, தமிழர்கள் சோர்ந்து எமக்கு நடக்கின்ற அநீதியை தட்டிக் கேட்க எவரும்மில்லை என்று வேதனைப்பட்டு வாழும் காலகட்டத்தில் நீங்கள் நடாத்துகின்ற போராட்டம் எமக்கு புதிய உத்வேகத்தை அளிக்கின்றது.
மேலும் தமிழீழ மண் விடுதலையடையும் என்ற நம்பிக்கையை எமக்கு தருகின்றது என்பதை குறிப்பிட விரும்புகின்றோம். எமக்கு துயரம் ஏற்பட்டால் தமிழ்நாட்டு உறவுகள் அமைதியாக இருக்கமாட்டார்கள், தீயாய் மாறி எமக்கு ஒளிதருவார்கள் என்ற புதிய நம்பிக்கை வந்துள்ளது.
இந்திய தேசம் தமிழீழ மண்ணில் வந்து தியாகி திலீபனையும் அன்னை பூபதித்தாயையும் அழித்தது ஆனால் இன்று நூற்றுக்கணக்கான திலீபன்ங்களையும் அன்னை பூபதித்தாய்களையும் உங்கள் முகத்தில் காண்கின்றோம்.
தமிழர்களின் விடிவிற்காக நீங்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு தனது தார்மிக ஆதரவை என்றும் அளிக்கும். முத்துக்குமார் ஏற்றிய விடுதலைத் தீயை அரசியல் அணைத்தது போல் நீங்கள் ஏற்றியுள்ள விடுதலைத் தீயையும் அணைக்காமல் தொடர்ந்தும் ஒளிரவிடுங்கள்.
சாதி, மதத்தை கடந்து தமிழர் என்ற உணர்வுடன் ஒன்றுமையாய் தொடர்ந்தும் போராடுங்கள், நிச்சயம் உலகத் தமிழர்களுக்காக தமிழீழ நாடு உலகப் பந்தில் மலரும். நாளை தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உங்களுக்கும் ஒர் தனியிடமுண்டு.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி

http://www.tamilwin.net/show-RUmryDSYNYgsz.html

Geen opmerkingen:

Een reactie posten