தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 18 maart 2013

அறவழியில் போராடும் மாணவர்களை தாக்குவதா? காவல்துறைக்கு வைகோ கண்டனம்


தனி ஈழம் கோரி அறவழியில் போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறையை கையாளும் தமிழ்நாடு காவல்துறைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இதுவரை நடைபெறாத விதத்தில், தமிழக மாணவர்கள், ஈழத் தமிழருக்கு நீதி கேட்டு, அறவழியில் போராடி வருகின்றார்கள்.
கடந்த 11 நாட்களாக தமிழகத்தில் இலட்சக்கணக்கான மாணவர்கள் துளியும் வன்முறைக்கு இடம் இன்றி, அறவழியில், பசியோடும், பட்டினியோடும் சிங்களக் கொலைகார அரசை எதிர்த்தும் அதற்கு உதவும் இந்திய அரசின் துரோகத்தைத் தடுக்கவும், தமிழ் ஈழ சுதந்திர விடியலுக்கு ஐ.நா. மன்றம் நடவடிக்கை எடுக்கவும் போராடி வருகின்றார்கள்.
இத்தகைய ஒரு அமைதி வழிப் போராட்டம், பிரளயத்தின் எழுச்சியோடு நடக்கிறது. மாணவர்கள் மீது தடியடி மதுரையில், ஆயிரக் கணக்கான மாணவர்கள் பேரணியாக மூலக்கரை என்ற இடத்தில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்துகொண்டு இருந்தனர்.
அப்பொழுது காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு என்பவர், மதுரை சட்டக்கல்லூரி மாணவர் அய்யாதுரையைப் பார்த்து, ‘நீதான் போராட்டங்களுக்கு எல்லாம் காரணமாக இருக்கிறாய், உன்னை அடித்தே கொன்று விடுவேன்' என்று கடுமையாக மிரட்டி உள்ளார்.
பேரணியாக வந்த மாணவர்கள், பெரியார் பேருந்து நிலையம் அருகில், அமைதியாக அமர்ந்தபோது, துணை ஆணையர் திருநாவுக்கரசு காவலர்களோடு வந்து, மாணவர் அய்யாத்துரையை அடித்து இழுத்துக்கொண்டு சென்று, முகத்திலும் தலையிலும் தாக்கி உள்ளார்.
இரத்தக் காயத்தோடு கீழே விழுந்த ஐயாத்துரையின் நெஞ்சில் ஏறி காவல்துறையினர் மிதித்தனர். அய்யாதுரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
காட்டுமிராண்டித்தனம் வேண்டாம் காட்டுமிராண்டித் தனமான இந்த அக்கிரமத்தைச் செய்த காவல்துறை துணை ஆணையர் திருநாவுக்கரசையும், தாக்குதல் நடத்திய காவல்துறையினரையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1965 இல் ஜனவரி 25 ஆம் தேதி மதுரை மாசி வீதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதின் விளைவாகத்தான் புரட்சி வெடித்தது; இராணுவத்தையும் மாணவர்கள் எதிர்கொண்டனர் என்பது நினைவுபடுத்தும் வரலாறு ஆகும்.
மாணவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்த காவல்துறைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, விபரீத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனில், அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

Geen opmerkingen:

Een reactie posten