இறப்பர் தோட்டத்தில் வல்லாரை காணப்படலாம் ! அதனால் அது வல்லாரை தோட்டம் என்று ஆகிவிடுமா ? அதுபோல இலங்கையில் பல இனங்கள் வாழலாம் ஆனால் வாயை மூடிக்கொண்டு தான் வாழவேண்டும் என்று பொருட்படும் விதத்தில் பேசியுள்ளார், பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் நந்த தேரர். தாம் அடிப்படையில் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளையும் மதச் சுதந்திரத்தையும் பாதுகாக்கவே தனது அமைப்பு(பொதுபல சேனா ) செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் இவர் பொடிவைத்துப் பேசுவதும் , அடிப்பையில் இவர் ஒரு இனவாதி என்பதும் யாவரும் அறிந்ததே. குறிப்பாக சிங்களவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதனை இவர் பேச்சு பிரதிபலித்துள்ளது.
அவர் பேசிய சில விபரங்கள் பின்வருமாறு:
முஸ்லிம் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்க கூடாது, சுதந்திரக் கல்விக்கான சந்தர்ப்பம் வழங்க கூடாது என்றெல்லாம் போராட்டங்களை முன்னெடுத்த உலமாசபை ஹலால் சான்றிதழை வைத்துக்கொண்டு போலியான மதப்பற்றைக் காட்டி நாட்டில் அடிப்படைவாதத்தையே பரப்புகின்றது என்று பொதுபல சேனா குற்றம் சுமத்தியுள்ளது.சிறுபான்மை இன மக்களின் உரிமைகளையும் மதச் சுதந்திரத்தையும் அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்கவுமே பொதுபல சேனா செயற்படுகின்றது. எனவே எம்மை இனவாதியாக பார்க்க வேண்டாம். காக்கிச் சட்டை போடாத பொலிஸ்காரராக பாருங்கள் என்றும் அவ்வமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
இறப்பர் தோட்டத்தில் வல்லாரை மற்றும் பொன்னாங்கானி ஆகிய கீரைகள் இருக்கலாம். அதற்காக அது வல்லாரை தோட்டம் பொன்னாங்கானி தோட்டம் என்று ஆகிவிடாது.இலங்கையிலும் அவ்வாறான நிலையிலேயே காணப்படுகின்றது. பல இனங்கள் இலங்கையில் வாழ முடியும். ஆனால் அது பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களுக்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது. பொதுபல சேனா அடிப்படை வாதத்திற்கு எதிராகவே உள்ளது.
உலமாசபை முஸ்லிம் மதத்தின் தலைமை பீடமாக கருதப்பட்டாலும் அச் சபையினால் முஸ்லிம் இனத்திற்கு பெரும் அநீதிகளே இடம்பெற்றுள்ளன. உதாரணமாக முஸ்லிம் பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கல்வி மற்றும் வாக்குரிமை வழங்கப்படகூடாது என்றும் 1926 மற்றும் 1943 ஆண்டு காலப்பகுதியில் இந்த உலமா சபையே போராட்டம் நடத்தியது. ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை சவுதி அல்ல என்பதை உலமாக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் நந்த தேரர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten