ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவே டெசோ சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழர் இன்னல் தீரவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை வலிமையான திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி டெசோ அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளோம்.
எங்கள் அழைப்பினை ஏற்று தாமாக முன்வந்து பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு தந்த வண்ணம் உள்ள செய்தி ஊக்கம் தருவதாக உள்ளது.
நான் ஏற்கெனவே கேட்டுக் கொண்டபடி நமது போராட்டம் சிறு வன்முறைக்கும் இடம்தராமல் அறவழியில் நடக்க வேண்டும்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி போராட்டம் நடைபெற வேண்டும்.
இன எதிரிகள், சமூக விரோதிகள் இடையில் புகுந்து கலவரம் ஏற்படுத்த முனையக்கூடும். அது குறித்து மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகமே தன் வேலைகளை நிறுத்தி, நாடு நிலைகுத்தி நின்று விட்டதென்ற செய்தியை திமுக தொண்டர்கள் கொண்டு வர வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten