தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?!- இதயச்சந்திரன் !


ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன. இதில் ஒன்றுமே இல்லை என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப் போவதுமில்லை.
இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று இலகுவில் சொல்லிவிடலாம்.
அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானத்தில், நவநீதம்பிள்ளை அம்மையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் 'சர்வதேச சுயாதீன விசாரணை' என்கிற சொல்லாடலை இணைத்தவுடன், அமெரிக்கா அதனை ஏற்றுக்கொண்டு விட்டது என சில நுனிப்புல் மேய்வோர் ஆர்ப்பரிக்கத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச விசாரணை செய்யப்பட வேண்டுமென அமெரிக்கா எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அம்மையார் குறிப்பிட்டுள்ளார் என்றுதான் அமெரிக்க வரைபு கூறுகிறது.
அமெரிக்கா ஊடாக சிங்களத்தை தண்டித்து விடலாம் என்கிற பெருத்த நம்பிக்கையோடு வாழ்பவர்கள், தமது நம்பிக்கை தோற்றுப்போய் விடக்கூடாது என்பதற்காக, இல்லாததை இருப்பது போல் காண்பிக்க முயல்கின்றார்கள்.
இலங்கை இராணுவத்திற்கு அமெரிக்கா பயிற்சி கொடுப்பதை பற்றி இந்தத் தரகர்கள் மூச்சு விடமாட்டார்கள். ராஜபக்சவின் இந்தியத் தரகர் சுப்பிரமணியம் சுவாமி, அமெரிக்கா சென்று அந்நாட்டின் தலைவர்களையும், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்தது குறித்து பேசமாட்டார்கள்.
எல்லாமே எமக்குச் சாதகமாக நடப்பது போல் காட்டுபவர்கள், தமது பலவீனமான இராஜதந்திரப் பக்கங்களை மிக நேர்த்தியாக மறைத்து விடுகின்றார்கள்.
இது குறித்த ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்தால், இவர்களையும் விட்டால் 'இனம் அழிந்துவிடும்' என்று கவலை கொள்வதுபோல் பாசாங்கு செய்கின்றார்கள்.
இந்த அமெரிக்க மீட்பர்களின், சமகால பின் நவீனத்துவ [ இலக்கியத்தில் மட்டுமே இச்சொல்லை பாவிக்க முடியுமென்று யார் சொன்னது?] முகத்தினை, இத் தரகர்கள் கண்டு கொள்ள மறுத்தாலும், அதனை வெளிக்கொணர வேண்டியது ஊடகங்களின் கடமை.
அண்மைக்காலமாக ஒரு முன்னாள் பேரினவாத அதிபர் ஒருவரின் பெயர் பலமாக அடிபடுவதை அறிந்திருப்பீர்கள். அவர் வேறு யாருமல்ல. நாமறிந்த, நாடறிந்த, செம்மணியறிந்த, யாழில் சிங்கக் கொடியேற்றிய ரத்வத்தையின் மருமகள் சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா என்பவரே.
இவர் இந்தியா செல்கின்றார். இந்த முன்னாளை, இந்திய வெளிவிகார அமைச்சர், அவரின் செயலாளர் ரஞ்சன் மாதாய், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கூட்டாகச் சந்திக்கின்றனர்.
அதிகாரத்தில் இல்லாத ஒருவரை, ஏன் இந்த முன்னணி அரசியல் அதிகாரவாசிகள் சந்திக்கின்றனர்?. இதையிட்டு மகிந்த கம்பனி குழப்பமடைகிறது. ஆனால் இந்தியாவோடு முரண்பட விரும்பாத காரணத்தால் கறுவிக்கொண்டு நிற்கிறது.
ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளோடு மோதக்கூடாது என்கிற தந்திரோபாய உத்தியைக் கடைப்பிடித்து, பேசாமல் இருக்கிறது சிங்களம்.
ஆனால் மகிந்த சகோதரர்களின் தற்போதைய பெருங்கவலை என்னவென்றால், தமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, பண்டாரநாயக்காவின் வாரிசு உடைத்து பலவீனமானதாக மாற்றிவிடுவார் என்பதுதான்.
மைத்திரிபால சிறிசேன என்பவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர். இவர் பண்டாரநாக்கா குடும்பத்தின் நிரந்தர ஆதரவாளர். இவர் ஊடாக கட்சியை உடைத்துவிடுவார் சந்திரிக்கா என்று மகிந்தர் உணர்ந்ததால், சிறிசேன மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அண்மையில் செய்தியொன்று வெளிவந்தது.
இத்தகைய நடப்புச் செய்திகளின் பின்புலத்தில், ஒரு ஆட்சிமாற்ற நகர்விற்கான சதியொன்று உண்டென, சர்வாதிகாரத்தை நோக்கி நடைபோடும் மகிந்த சகோதரர்கள் உணர்ந்து விட்டார்கள்.
உலக வலம்வரும் சந்திரிக்கா, 'தேசிய அரசாங்கம் ஒன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் ' என்று அடிக்கடி கூறிவரும் நிலையில், இது எவ்வாறு சாத்தியமாகும் என்கிற கேள்வி எம்மிடம் எழுவது இயல்பு.
இருந்தாலும், அதனை ரணிலை மட்டும் வைத்துக் கொண்டு உருவாக்க முடியாது என்பதை மகிந்தர் புரிந்து கொள்வார்.ஆகவேதான் சுதந்திரக் கட்சிக்குள் உடைப்பு வேலையை சந்திரிக்கா செய்ய முயற்சிக்கின்றார் என்று சந்தேகிக்கின்றார்.
மகிந்தர் இல்லாமல்,தேசிய அரசாங்கத்தை எப்படி அமைக்க முடியும் என்கிற கேள்விற்கு, உடைக்கப்பட்ட ஸ்ரீ.சு.கவும் ,யு.என்.பி யும், தமிழ் கூட்டமைப்பும், இணைந்துதான் அதனை நிஜமாக்க முடியும் என்பதாக பதில் அமையும்.
அதேவேளை, மேற்குலகப் பின்புலத்தில் உருவாகும் இந்நகர்வில், தானொரு பலவீனமானதொரு பங்காளியாக இருக்கப் போகிறேன் என்பதை யூகித்துக் கொண்டதால்தான், 'இராணுவத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தவிட மாட்டேன். தலைமை வகித்த நானே அதற்கான பொறுப்பினை ஏற்கிறேன்' என்று வீர வசனங்களை உதிர்க்க ஆரம்பித்துள்ளார் சரத் பொன்சேகா.
பொன்சேகாவை உள்வாங்காமல் விட்டால், சந்திரிக்காவின் தேசிய அரசாங்கக் கனவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போகும் நபரும் அவர்தான்.
கடந்த நான்கு வருடங்களில் ஆட்சிமாற்றத்திக்கான முயற்சிகளைப் பார்த்தால், முதல் தோல்வி ஆரம்பமாகிறது சரத் பொன்சேக்காவின் வீழ்ச்சியில் இருந்துதான்.
பொது எதிரணித் தலைமையை யார் பொறுப்பேற்பது என்கிற போட்டி வந்தபோது, சனாதிபதி தேர்தலில் ஓரணியில் நின்றவர்கள் பிரிந்து விட்டார்கள். ரணிலின் தலைமையால், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமது பலத்தினை நிரூபிக்க முடியவில்லை.
இந்நிலையில் மகிந்தரின் அதிகார மையத்துள் பிளவினை ஏற்படுத்தாமல், பலமான எதிரணியை கட்டமைக்க முடியாது என்கிற முடிவுக்கு வருகின்றார்கள் ஆட்சி மாற்றமொன்றினை விரும்புவோர்.
ஆகவே, தீர்மானங்கள் ஊடாக சர்வதேச அளவில் மகிந்த சர்வாதிகார ஆட்சியை தனிமைப்படுத்துவது, பொருளாதார நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, சந்திரிக்கா ஊடாக அமெரிக்க எதிர்ப்பு நாடுகளை மகிந்தருக்கு எதிராக திருப்புவது, இரண்டு பலமற்ற அரசியல் சக்திகளை [ரணில் + சந்திரிக்கா]  இணைத்து ஓரளவு பலமான எதிரணியை உருவாக்குவது என்பதுதான் ஆட்சிமாற்றத்தை விரும்பும் வல்லரசாளர்கள் மேற்கொள்ளும் தந்திரோபாய நகர்வாக இருக்கிறது.
ஆளும் கட்சியினுள் உடைப்பு வேலை தீவிரமடைந்தால், அடுத்த சனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆட்சி மாற்றம் சாத்தியமாகும் வாய்ப்புண்டு.
இல்லையேல், அடுத்த தேர்தல்வரை இம்முயற்சிகள் தொடரும். சர்வதேச சுயாதீன விசாரணையை முன்வைக்காத தீர்மானங்களும் ஐ.நா.வில் வந்து போகும்.
ஆனால், 'பொது பல சேனா' பலமடையும் அதேவேளை, பிரதமர் பதவி தருவேனென சரத் பொன்சேகாவிற்கு மகிந்தர் வாக்குறுதி கொடுத்தால், ஆட்சிமாற்றம் கானல் நீராக மாறும்.
பொன்சேகாவை எவ்வாறு கையாள்வது என்பதில்தான் ஆட்சி மாற்றத்தின் தலைவிதி தீர்மானிக்கப்படுமென எதிர்பார்க்கலாம்.
ஆனாலும் இதில் எந்தக் கூட்டு வந்தாலும் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்கப் போவதில்லை. அதனை வழங்குவோமெனக் கூறி எவரும் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற முடியாது.
ஏனெனில் அவர்கள் எல்லோரும், 'புலிகளை போரில் வென்று விட்டோம்' என்கிற மமதையில் வாழ்கின்றார்கள் என்பதே நிஜம்.
தமிழ் மக்களின் உரிமைகளை கொடுங்கள் என்று அழுத்தினால், ஆட்சி மாற்றம் நிகழாது. அத்தோடு, இராணுவத்திற்கெதிராக சர்வதேச விசாரணை தேவை என்று கூறினால், ஒட்டுமொத்த சிங்கள மக்களும் எதிர்ப்பார்கள் என்பதையும் அமெரிக்கா புரிந்து கொள்ளும்.
இந்த நிஜங்களை மறைப்பதால் யாருக்கு என்ன நன்மை?

http://www.tamilwin.net/show-RUmryDSYNYgqz.html

Geen opmerkingen:

Een reactie posten