போர் நடத்துவதே குற்றம். அதில், நெறிமுறைகளை மீறுவது அதைவிடப் பெரிய குற்றம். உலகத்தின் குற்றவாளிக் கூண்டில் இலங்கை இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கே வாழும் மக்களின் மனநிலையை அறிவதற்காகவே எனது பயணம் திட்டமிடப்பட்டது.
இந்த 25 நாட்கள் பயணத்தில் நான் கண்டதும் அறிந்ததும் ஈழத்தின் கொடுமைகளில் கடுகளவே. இலங்கை இனவாதத்தின் சிறுஅளவே.
போரில் மனித வேட்டை நிலமாக இருந்த முள்ளிவாய்க்கால், இன்றும் அந்த சோகத்தை அப்பிக்கொண்டுள்ளது.
வடகிழக்கு நிலம் கண்காணிப்புப் படைகளில் அத்துமீறல்களால் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறது.
மலையகத் தோட்டங்களை நம்பியுள்ள இலங்கையின் சர்வதேசப் பொருளாதாரம், தமிழர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறது.
அனாதையான இந்த நிலத்துக்கும் அந்த மக்களுக்கும் இனியும் ஒன்றுபட்ட இலங்கைதான் தீர்வு என்றால், உலகமும் ஐ.நா-வும் எஞ்சிய தமிழர்களையும் கொன்று புதைத்துவிட்டு, ராஜபக்சவை சுடுகாட்டின் ராஜாவாக்கி விடலாம். இலங்கையை உலகின் வியாபார நிலமாக்கிக் கொள்ளலாம்.
கொடூரங்கள் நடந்தது, இராணுவம் இரத்தத்தில் குளித்தது, பிணங்கள்கூட பாலியல் பண்டங்களாக மாற்றப்பட்டன என வரிசையாக போர்க் குற்றங்களின் காணொளிகள் வெளியாகின்றன.
ஆனால், அந்தப் போர்க் குற்றக் களத்தில் பத்திரிகையாளர்களின் மனிதாபிமானச் செய்திப் பரிமாற்றங்கள் இன்னும் நமக்குத் தெரியாத இருட்டுக்குள்ளேதான் இருக்கிறது என்பதே யதார்த்தம்.
அப்படிப்பட்ட பத்திரிகையாளர் ஒருவர், உடைந்த மனதோடும் கண்ணீரோடும் பகிர்ந்து கொண்டது...
''வன்னியின் போர்ச் சூழலில் பணியாற்றிய ஊடகங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று, 'புலிகளின் குரல்’, மற்றொன்று, 'ஈழநாதம்’ நாளிதழ்.
'புலிகளின் குரல்’ வானொலி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதற்காகப் பணியாற்றிய பல அறிவிப்பாளர்கள், பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அப்படியிருந்தும் அந்த வானொலி தன் பணியை மே 16 வரை கடுமையான போர்ச் சூழலிலும் செய்தது. வானொலி ஒலிபரப்பு நிலையம் என்பது ஒரு சிறிய ரக வான் மட்டும்தான்.
மக்கள் இடம்பெயரும்போது மக்களோடு மக்களாக அந்த வேனும் இடம்பெயரும். வழிகளில் இருக்கும் மரங்களின் கிளைகளில் அன்டெனா பொருத்தப்பட்டு, மரத்தின் கீழே வாகனம் நிறுத்தப்பட்டு, செய்தியும் மற்ற தகவல்களும் ஒலிபரப்பப்படும்.
அந்த நேரத்தில் வாகனத்தின் அருகிலேயே செல்களும் குண்டுகளும் விழும். அந்தச் சத்தம் வானொலி கேட்கிறவர்களுக்கு கேட்கும். அந்த வானொலியில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் சாதாரண மக்கள்தான்.
'தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ பரந்தனின் இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் செயலிழந்தப் பிறகு, 'புலிகளின் குரல்’தான் வன்னியில் செயல்பட்டது.
அதேபோல்தான் 'ஈழநாதம்’ பத்திரிகையும். வன்னி மக்களுக்கு தொலைத் தொடர்பு முற்றும் துண்டிக்கப்பட்ட பிறகு, மக்களிடையேயான தொடர்புகளை 'ஈழநாதம்’தான் செய்தது.
அதாவது, 'புலிகளின் குரல்’, 'ஈழநாதம்’ வழியாகத்தான் ஒருவர் இறந்து போனார், காணாமல் போனார் என்ற செய்தியைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்கான செய்தி சேகரிப்பின்போது, தாக்குதலில் பல செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
'ஈழநாத’மும் மக்களோடு மக்களாகத்தான் இடம்பெயர்ந்தது. ஒரு கனரக வாகனத்தில் அச்சு இயந்திரம், கணினி, ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருக்கும்.
மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து செய்தியை அச்சிட்டு வெளியிடும். அந்த போர்ச் சூழலிலும் யார் கொல்லப்பட்டார், அவர் வசித்த பகுதி, பெயர் எனக் கிடைக்கும் விவரங்களை எல்லாம் சரிபார்த்து வெளியிட்டது.
மிகுந்த இக்கட்டான நிலைமை நெருங்க நெருங்க... 'காகிதத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதனால், செய்திகளைக் கிடைத்த காகிதங்களில் (ஒரு பக்கம் பயன்படுத்தப்பட்ட காகிதம்) எல்லாம் அச்சிட்டனர். அந்த அளவுக்கு தனது ஊடகப் பணியை 'ஈழநாதம்’ செய்தது.
இந்தப் போரில் மேரி கெல்வின் போன்ற பல வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள்கூட அக்கறையோடு செயல்பட்டனர்.
அது மட்டுமின்றி 'தமிழ்நெட்’ போன்ற இணையப் பத்திரிகைகளும் கடமைகளை செவ்வனே செய்தன.
இப்போது யுத்த காலக் காணொளிகள் பல வெளியாகின்றன. ஆனால், அந்தக் காணொளிகளை வெளியில் கொண்டு செல்லப் பணியாற்றிய பத்திரிகையாளர்களின் நிலைமைகளை இன்றும் யாரும் அறிய மாட்டோம்.
வன்னியின் கொடூரப் போரில் பத்திரிகையாளர்கள், உயிரைக் கொடுத்துச் செய்த செய்தி சேகரிப்புகள்தான், தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கான சாட்சிகள்.
2009-ல் நடந்தது இரத்தப் படுகொலைகள். ஆனால், இன்று நடப்பது திட்டமிடப்பட்ட இன அழிப்பு. அந்த இன அழிப்புச் செயல்கள் மொழி, கல்வி, கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றிலும் பாகுபாடு இல்லாமல் படர்கிறது.
கிளிநொச்சி-முல்லைத் தீவு மாவட்டங்களில் உள்ள 250 சிறுவர் பள்ளிகளும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, இந்தப் பள்ளிகளுக்கு தலைமை, அரசு பள்ளிக் கல்வித் துறை அல்ல. இராணுவத்தை வழிநடத்தும் பாதுகாப்புச் செயலகம்தான்.
பாதுகாப்புச் செயலகத்தின் குடிமக்கள் பாதுகாப்புப் படையே, இந்த ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் தலைமை வகிக்கும்.
இதுவரை 3,500 ரூபாய் சம்பளம் வாங்கிய ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் 19,500 ரூபாய்.
மாதத்தின் முதலாவது, மூன்றாவது திங்கட்கிழமைகளில் படைப்பிரிவின் பணியகத்தில் கையெழுத்திட வேண்டும்.
ஒருமுறை அதில் கையெழுத்திடத் தவறினால், மாதச் சம்பளத்தில் 4,500 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.
இந்த ஆசிரியர்கள் வகிக்கும் பதவி நிலை... குடிமக்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்பதுதான். ஆசிரியர்கள் என்பது அல்ல.
மதியம் 12 மணி வரை பள்ளியில் பணியாற்றிவிட்டு, அதன்பின் குடிமக்கள் பாதுகாப்புப் படை கொடுக்கும் பணியைச் செய்ய வேண்டும்.
விசுவமடுவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்புப் படையின் 430-வது படையணியின் தலைமையகம், இதற்கான கட்டுப்பாடு தலைமையாக உள்ளது.
இந்தப் படையணியின் கட்டளை அதிகாரியான கேணல் ரத்னபிரிய, துணைக் கட்டளை அதிகாரி மேஜர் ரஞ்சித் மல்லவராச்சிதான் இந்தப் பள்ளிப் பணிகளுக்கான தலைமைகள்.
இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் பகுதிகள் முழுமையாக சிங்களமயம் ஆகிவிடும். 'தமிழர்’ என்பதே தமிழருக்கு நினைவில்லாமல் போய்விடும்.
இலங்கை தன்னை நிலைநிறுத்த எந்த நாட்டோடும் நட்பு பாராட்டும். ஆனால், ஒருபோதும் இந்தியாவின் கைக்குள் அடங்காது.
சீனா-பாகிஸ்தானை வைத்து இந்தியாவை அடக்குவதுதான் இலங்கையின் திட்டம். அதற்கான முழுக் கட்டுமானத்தை கொழும்பில் இருந்து கச்சதீவு வரை கட்டியெழுப்பிவிட்டது இலங்கை அரசு.
தமிழர்களை மையம்கொண்ட சிங்கள அரசின் படுகொலைகள், இப்போது முஸ்லிம்களை நோக்கித் திரும்பியுள்ளது.
அன்பைப் போதிக்கும் பிக்குகளே, முஸ்லிம்களின் கடைக்குள் புகுந்து இராணுவத்தைப் போல் எல்லாவற்றையும் சூறையாடுகின்றனர்.
'இது புத்த தேசம், சிங்களர்களுக்கே சொந்தம்’ என்று கோஷமிடுகின்றனர்.
'குரான் ஓதும்போது, ஆயுதங்களையும் தாருங்கள் என முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ய மாட்டார்களா?’ என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி பேசுகிறார் என்றால், முஸ்லிம்களும் இலங்கையில் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறாரா?'' என்றார் அந்தப் பத்திரிகையாளர்.
'பொதுபல சேனா’ என்ற புத்த அமைப்பிடம்தான் இலங்கை அரசை ஆட்டி வைக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதிதான் மகிந்த ராஜபக்ச.
இலங்கையின் புத்த மயத்துக்கு ஓர் உண்மை எடுத்துக்காட்டு... மாவத்தையில் உள்ள முஸ்லிம் சிறுவன் ஒருவன் புத்த பிக்குவாக மாற்றப்பட்டுள்ளான்.
முகமத் சப்ராஸ் என்ற அந்தச் சிறுவன் பெயர் 'தலங்காம நாபித’ என்றும் மாற்றப்பட்டுள்ளது.
இனி, இலங்கை அரசின் அடுத்த போர் என்பது முஸ்லிம்களுடன்தான். பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்ட பிறகும் ஹலால் உரிமை பறிக்கப்பட்ட பின்னரும், பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளே இலங்கையின் பக்கம் நிற்கிறது என்றால், இனி முஸ்லிம்களின் நிலை இலங்கையில் என்னவென்று எண்ணிப் பாருங்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல... எந்தவொரு இனமும் சிங்கள இனவாதத்தோடு ஒன்றி இனி வாழ முடியாது என்பதே யதார்த்தம்.
சிங்கள தேசத்தோடு வெட்டுண்டு போவதே, இலங்கையில் அடிமைப்பட்டு கிடக்கும் இனங்களுக்கான விதியோ? அந்த மண்ணைவிட்டு வெளியேறும் போது, 12 நாட்கள் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த தியாகி திலீபனின் வார்த்தைகள் நினைவுக்கு வந்துவந்து போனது...
''எனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஒருநாள் எம் மக்கள் விடுதலையடைவார்கள். அப்போது என் தேசத்துக்காக என் தேசிய பொறுப்பு நிறைவேறும்!''
புலித்தடம் தேடி....முற்றும்
ஜூனியர் விகடன்
http://news.lankasri.com/show-RUmryDRUNZnq7.html
Geen opmerkingen:
Een reactie posten