தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

எனது கருத்தை விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை: கருணாநிதி புலம்பல்!!!


எனது கருத்தை விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை: கருணாநிதி புலம்பல்

பாராளுமன்றத்தில் தீர்மானம் மட்டும் நிறைவேற்றினால் போதுமா என யாரும் திமுகவின் நிலை குறித்து திரித்துக் கூற வேண்டாம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
“இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்” என்றும்; “நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு திருத்தங்களை வலியுறுத்தியது.
அந்தத் திருத்தங்களை, இந்திய பாராளுமன்றத்தில் உடனடியாகத் தீர்மானமாக நிறைவேற்றி அமெரிக்கத் தீர்மானத்தில் அந்தத் திருத்தங்களையும் இணைத்து ஆதரித்திட வேண்டும் என்று 19-3-2013 அன்று நான் சொன்னேன்.
நான் தெளிவாகச் சொன்னதை, முதலமைச்சர் ஜெயலலிதாவும், ஒரு சில ஊடகங்களும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது உள்நோக்கத்துடனோ ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதும் என்று நான் சொன்னதைப் போல விமர்சனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
இலங்கையில் ராஜபக்ஷ அரசால் நடத்தப்பட்டது இனப் படுகொலையே என்பதையும், நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதையும், அந்த ஆணையம் குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்பதையும் முதலில் இந்திய அரசு ஏற்றுக் கொண்டு, அதனையொட்டி பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும்.
அந்தத் தீர்மானத்தை அமெரிக்கத் தீர்மானத்தோடு இணைத்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வர வேண்டுமென்பதுதான் நமது விருப்பமும் வேண்டுகோளுமாகும்.
ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை, அமெரிக்கத் தீர்மானத்தில் இப்போது இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக, இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போனதற்குப் பின்னணியில் இந்தியாவும் உள்ளதாக “சர்வசே மன்னிப்புச் சபை” எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இப்படி அமெரிக்கத் தீர்மானம் பெருமளவுக்கு நீர்த்துப் போய்விட்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்ற ஆய்வின்போது, இலங்கை அரசு சார்பில் வைக்கப்பட்ட அறிக்கையை, இந்தியாவின் சார்பில் முழுவதுமாக ஏற்றுக் கொண்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. தி.மு.கழகம் முன்வைத்த திருத்தங்களும் மத்திய அரசால் முறையாக பரிசீலிக்கப் படவில்லை.
இந்தச் சூழ்நிலைகளிலேதான் தி.மு.கழகம் தனது நிலைப்பாட்டை அறிவித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வது என்ற முடிவை மேற்கொண்டது. இதனைத் தெளிவாக தி.மு.கழகம் தெரிவித்திருந்த போதிலும் – வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு – திசைதிருப்பி விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது!
என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

http://asrilanka.com/2013/03/20/16055

Geen opmerkingen:

Een reactie posten