ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இறுதிப் பிரேரணையில் பெரும்பாலான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமையானது இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளப்பட்ட காய்நகர்த்தல் என ஜெனிவாவில் உள்ள அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் பற்றி பிரேரணையில் குறிப்பிடப்பட வேண்டுமென தமிழகம் உட்பட பல்வேறு தரப்புக்களில் வலியுறுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் அது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லையே என்று வினவியபோது கருத்து வெளியிட்ட ஜெனிவாவிலுள்ள அமெரிக்கத் தூதரக இராஜதந்திரியொருவர், சில இராஜதந்திர விடயங்கள் குறித்து பகிரங்கமாகப் பேச முடியாது, பேசக்கூடாதென்று தெரிவித்தார்.
“இராஜதந்திரச் செயற்பாடுகளின்போது கடுமையான சொற்களைப் பயன்படுத்துவது கடினமான விடயமாக இருக்கும். அப்படிப் பயன்படுத்தப்பட்டால் அப்படியான பிரேரணை வாக்கெடுப்புக்கு வரும்போது சில நாடுகள் நடுநிலைப் போக்கைக் கடைப் பிடிக்கலாம். இதனால் பிரேரணையின் வலு குறையும். வலுவற்ற பிரேரணை ஒன்றை தவிர்க்க வேண்டுமானால் இராஜதந்திர ரீதியில் நாம் செயற்பட வேண்டியுள்ளது” என்றார் அந்த இராஜதந்திரி.
அப்படியானால் சிறிலங்காவுக்கு இதில் பெரிதளவில் அழுத்தங்கள் வழங்கப்பட மாட்டாதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
“இல்லை சில விடயங்களை நாம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி உள்ளோம். மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இறுதியாக சமர்ப்பித்த அறிக்கையை சிறிலங்கா ஏற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி உள்ளோம். அதில் சிறிலங்கா குறித்து கடும்போக்கு விடயங்கள் உள்ளன.
குறித்த அறிக்கையை ஏற்றுக்கொள்வது என்பதன் அர்த்தம் சிறிலங்கா ஒரு விசாரணைக்கு இணங்கி உள்ளது என்பதுதான். இதனை நேரடியாகச் சொல்லாமால், பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் சொல்ல வேண்டி உள்ளதால் சில நுட்பமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டார் அந்த இராஜதந்திரி.
எவ்வாறாயினும் 21 ஆம் திகதி வாக்கெடுப்புக்குள் வேறு மாற்றங்கள் செய்யப்படுமா என்று கேட்டபோது பதிலளித்த அவர், அதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பதை களநிலைவரங்கள்தான் தீர்மானிக்கும் என்று குறிப்பிட்டார்.
http://asrilanka.com/2013/03/20/16058
Geen opmerkingen:
Een reactie posten