ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தாக நேற்று பத்திரிகையில் வெளியான செய்தி கடந்த கால யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவராக செயற்படும் யசூசி அகாசி அண்மையில் ஜப்பானுக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின் டோக்கியோவில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தாக நேற்று சனிக்கிழமை பத்திரிகைகளில் வெளியாகிய அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிட்ட தமது அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது!
கடந்த கால யுத்தத்துக்கு முன்னும் பின்னும் ஜப்பானின் விசேட தூதுவர் இலங்கைக்கு விஜயம் செய்து சமாதானத்தை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்வதாக காட்டிய நிலை தமிழ் மக்களிடம் நன்மதிப்பை ஜப்பானுக்கு ஏற்படுத்தியது.
இந்தவகையில் தற்போது ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் ஊடாக சில வீதிகளை திருத்தியும், மதகுகள், பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றை வழங்கியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில உதவிகளை வழங்கியும் உள்ளதை நாங்கள் மறக்கவில்லை.
ஆனால் எமது தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தங்கள் சொந்த மண்ணில் சாத்வீக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராடி இலட்சக்கணக்கில் தங்கள் உயிர்களை தியாகம் செய்தமையானது ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவர் யசூசி அகாசி கூறும் இந்த அபிவிருத்தி சார் நடவடிக்கையை எதிர்பார்த்து அல்ல என்பதை அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் இந்நாட்டின் தேசிய இனம் என்ற வகையில் இந்நாட்டில் எங்களை நாங்களே ஆட்சி செய்து கொண்டு எங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்து அவர்களின் சகல விதமான அபவிருத்தியையும் நாங்களே மேற்கொள்ளும் வகையில் ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே எமது மக்களின் உயிர்த் தியாகங்கள் நடைபெற்றுள்ளன.
ஆனால் இவ்வாறான அற்ப சொற்ப சலுகைக்காக எங்கள் மக்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்யவில்லை என்பதை இலங்கைக்காக ஜப்பானிய விசேட தூதுவர் ஜசூசி அகாசி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெரிவிப்பதுடன், எமது தமிழ் மக்களின் நியாய பூர்வமான தியாகங்களை மதித்து, மனித உரிமைகளை மதிக்கும், மனிதாபிமான உணர்வு கொண்ட நாடுகள் எங்களுக்காக குரல் கொடுத்து நியாயத்தையும், தர்மத்தையும் சர்வதேசத்தின் முன் நிலைநிறுத்தி எங்களுக்கு உதவ முன்வருவதை கெடுக்கும் வகையில் தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என்ற வகையில் எம் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக ஜப்பானின் விசேட தூதுவரை வேண்டிக் கொள்கின்றேன்.
இதேவேளை இன்று அரசாங்கத்தின் மனித உரிமை மீறல், மனிதாபிமான நடவடிக்கை இன்மை என்பவற்றை மறைத்து இலங்கை அரசாங்கத்தை சர்வதேசத்தில் பாதுகாக்க துணைபுரியும் தாங்கள் கடந்த கால யுத்தத்தின் போதும் அதற்கு முன்பும் பின்பும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர் பல ஆயிரக்கணக்கில் உள்ளதால் இவர்கள் எங்குள்ளார்கள், இவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை பாதிப்பால் துன்புறும் உறவுகளுக்கு பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
இவ்வேளை அரசாங்கமே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழு குறிப்பிட்ட அறிக்கையை அதே அரசாங்கமே நிறைவேற்ற தவறியுள்ள நிலையில் இதுவரை காணாமல் போனவர் சார்பாக ஒழுங்காக ஆராய்வு குழு நியமிக்கப்படாத போதும் மக்கள் காணாமல் போனோர் சார்பாக சந்தேகிக்கும் இராணுவ அதிகாரிகளை நியமித்து காணாமல் போனோர் பற்றி ஆராய்ந்து, காணாமல் போனோர் எவரும் இல்லை என்ற முழுப்பொய்யை கூறியுள்ள நிலையில் அரசாங்கத்தை பாதுகாக்க ஜப்பானின் விசேட தூதுவர் அறிக்கை விடுவது மிகவும் வேதனையை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக இன்று முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படாத நிலையிலும், இதேவேளை மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வாழ்வதார உதவிகள், அபிவிருத்திகள் போன்றவற்றை ஒழுங்காக மேற்கொள்ளப்படாத நிலையில் மக்களின் குடியிருப்பு காணிகள் இராணுவத்தின் முகமாகவும், திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்களாகவும், இராணுவ குடி அமர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நிலையிலும் தன்னை பாதுகாப்பாக பிரதான வீதி வழியாக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்று தாங்கள் மேற்கொண்ட ஒரு சில அபிவிருத்தி வேலைத் திட்டத்தை காட்டி விட்டதாக அரசாங்கம் ஏதோ பெரிதாக சாதித்துள்ளதாக சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறி அவர்களை இங்கு வருகை தந்து பார்வையிடுமாறு அழைப்பு விடுக்கும் விசேட தூதுவரின் கருத்து ஒரு நகைச்சுவையாக உள்ளது.
இவ்வாறான அறிக்கையை வெளியிடுபவரா? முன்பு அரசாங்கத்தையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்து சமாதான சூழலை உருவாக்க முனைத்தவர் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. வன்னிப் பிராந்தியத்தின் உட்பகுதிகளை விசேட தூதுவர் சென்று பார்வையிடுவதுடன் இராணுவ பிரசன்னமின்றி அங்குள்ள மக்களோடு உரையாடினால் உண்மைகள் பல இவருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
இவ்வேளை “அமெரிக்கா” போன்ற மனிதநேய நாடுகள் இதில் தலையிட்டு இலங்கைத் தமிழ் மக்களின் விமோசனம் பெற்றுக் கொடுக்க முற்படுவதை சகிக்காதவர்களே இவ்வாறு அரசாங்கத்தை காப்பாற்ற, நீதிக்கும், தர்மத்துக்கும் எதிராகவும், மனித உரிமை மீறலுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
மேலும் எங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் யுத்தம் முடிந்து மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பின் நூற்றுக் கணக்கானோர் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை யார் கடத்தினர்கள்? யார் கப்பம் கேட்டார்கள்? என்பவற்றை பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகள் சிலர் கூறத் தயாராக உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு தடவை வருகை தந்து இம்மக்களை பார்வையிட்டு இவர்களின் அவலங்களின் சூத்திரதாரிகள் பற்றி அறிந்து கொள்ளுமாறு ஜப்பானின் இலங்கைக்காக விசேட தூதுவர் அவர்களை அன்பாக அழைக்கின்றேன்.
அத்தோடு இரு வருடத்துக்கு முன் இந்தியா கொடுத்த வீடுகளை கூட முற்று முழுதாக இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒழுங்காக வழங்க முடியாத அரசாங்கம் என்ன அபிவிருத்தியில் தமிழ் இனத்தை திருப்திப்படுத்தி உள்ளது என்பதை ஜப்பானிய விசேட தூதவர் தெரிவிப்பாரா?
ஆகவே எங்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுத்தும் விதத்திலோ அல்லது உண்மைகளை மறைக்கும் விதத்திலோ தமிழ் மக்கள் தமது தாயக பூமியில் சுதந்திரமாக வாழ விரும்புவதை தடுக்கும் வித்திலோ? கருத்துக்களை வெளியிட்டு தாங்கள் சர்வதேசத்தின் மனிதாபிமான, மனித உரிமை மீறல் நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் நீதியும், நேர்மையும் மிக்க பாதைக்கு குந்தகத்தை எற்படுத்த வேண்டாம் என வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் சார்பாக ஜப்பானின் இலங்கைக்கான விசேட தூதுவரை அன்பாக வேண்டிக் கொள்கின்றேன் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten