ஜெனீவாவில் அரசுக்கு எதிரான சிறிய குழுக்கள் சில நாடுகளுடன் இணைந்து முன்னெடுத்துவரும் முட்டாள்தனமான செயற்பாடுகளால் பல மில்லியன் பணமும் நேரமுமே வீண் விரயம் எனத் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, இதனால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியுள்ளார்.
30 வருட காலம் நீடித்த போரால் மக்கள் பட்ட அவலங்கள் நீங்கி அவர்கள் தற்போது சமாதானத்தை அனுபவித்து வருகின்றனர். போருக்குப் பின்னரான 3 வருட காலப்பகுதியில் உலக தரத்துக்கு இணையான அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் எடுக்காதவர்கள், அரசு மற்றும் அரச படைகள் மீது குறை கண்டுபிடிப்பதிலேயே குறியாக உள்ளனர். இதுவே தற்போது ஜெனீவாவில் நடக்கிறது எனவும் ஹத்துருசிங்க கூறினார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் கிழக்கு - NI 278 கிராம சேவகர் பிரிவில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பமொன்றுக்கு இரானுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த வீட்டைக் கையளித்து உரையாற்றுகையிலையே ஹத்துருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்….
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக செயற்படும் சிறிய குழுக்களால் பல மில்லியன் பணம் வீண் விரயம் செய்யப்படுகிறது. இந்தப் பணத்தை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினாலே அவர்கள் துன்பங்கள் தீரும். ஆனால் இத்தகைய குழுக்களுக்கு மக்கள் குறித்து எந்த அக்கறையும் கிடையாது.
30 வருடப் போர், அதற்குப் பின்னரான மூன்று வருடங்களை இவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். இந்த மூன்று வருட காலமாக நாட்டு மக்கள் அனைவரும் சமாதானத்தை அனுபவிக்கின்றனர்.
அபிவிருத்தி துரித கதியில் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கில் வைத்தியசாலைகள், பாடசாலைகள், வீதிகள் உள்ளிட்டவை உலகத் தரத்துக்கு இணையாக அபிவிருத்தி செய்யப்ப்பட்டு வருகின்றன எனவும் ஹத்துருசிங்க கூறினார்.
மக்களில் சிலரும் ஜெனீவா சென்று அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராக முட்டாள்தனமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
ஆனால் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இராணுவம் ஆற்றிவரும் நலப் பணிகள் நன்றாகத் தெரியும். நாம் மக்களுடனேயே வாழ்கிறோம். மக்களுக்கான பணிகளையே செய்கிறோம். தொடர்ந்தும் செய்வோம்.
இங்குள்ள சில அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்தில் அதிக இராணுவம் நிலைகொண்டுள்ளது. இராணுவம் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்துள்ளது என பொய்களைக் கூறி இராணுவத்துக்கு எதிரான எதிர்மறையான கருத்துக்களை தெரிவிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
இராணுவம் முன்னெடுக்கும் நேர்மறையான நல்ல விடயங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. யார் எதனைச் சொன்னாலும் மக்களுக்காக இராணுவத்தினரின் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் எனவும் யாழ். இராணுவத்தளபதி ஹத்துருசிங்க மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten