இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் அதிகரித்துள்ள சீனாவின் தலையீடுகளைக் கட்டுப்படுத்த, சிறிலங்காவுடன் தனது கடல்சார் கூட்டணியை வலுப்படுத்திக் கொள்ள ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான கூட்டறிக்கை ஒன்று, ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேக்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ள சந்திப்பை அடுத்து வெளியிடப்படும் என்று ஜப்பானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் ‘அசாகி சிம்பொன்‘ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவைச் சுற்றி முத்துமாலை வியூகம் அமைக்கும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு ஒருதொகை துறைமுக கட்டுமான உதவிகளை சீனா வழங்கியது.
இதன் மூலம், சிறிலங்காவுக்கு கொடை வழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருந்த ஜப்பானை பின்தள்ளி விட்டு, 2009இல் சீனா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது.
சிறிலங்காவுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வது, சீனாவின் முத்துமாலை வியூகத்துக்கு ஆப்பு வைப்பதற்கான ஒரு நகர்வு என்று ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்துலக, சட்டங்களுக்கு அமைவான கொள்கைகளை அடிப்படையாக கொண்ட, குறிப்பாக, கடல் தொடர்பான ஐ.நா பிரகடனங்களுக்கு அமைய, சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவத்தை, ஜப்பானும் சிறிலங்காவும் இணைந்து வெளியிடத் திட்டமிட்டுள்ள கூட்டறிக்கை உறுதிப்படுத்திக் கொள்ளவுள்ளது.
இந்தக் கூட்டறிக்கை, குறிப்பாக சிறிலங்காவின் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் ஜப்பானிய கடலோரக் காவல்படைக்கும், சிறிலங்கா கடற்படை மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்புப்படைக்கும் இடையில் ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்வதையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்து சமுத்திர கடற்பாதையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் சிறிலங்கா அமைந்துள்ளது.
ராஜபக்சவின் பிறப்பிடமான அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுகம் ஒன்றை சீன முதலீட்டின் மூலம் அமைக்கப்பட்டதானது, முத்துமாலை வியூகம் சாத்தியமானதற்கு ஒரு காரணமாகும்.
இதுகுறித்து ஜப்பானிய வெளிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தத் துறைமுகம் சீனக் கடற்படையின் இராணுவத் துறைமுகமாக மாற்றப்படக் கூடும் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
பொருளாதார உதவிகளின் மூலம் இந்தப் பிராந்தியத்தில் சீனா தனது தலையீடுகளை விரிவாக்கி வருகிறது.
பாகிஸ்தானில் குவாதார், பங்களாதேசில் சிட்டகொங் துறைமுகங்களை விரிவாக்கிக் கொள்ள சீனா உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten