தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

மாய மானாக மாறியுள்ள அமெரிக்கா !


தேசிய தலைவரின் இளையமகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்ட புகைப்படங்களோடு சூடுபிடிக்க ஆரம்பித்தது அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மாணம் ! இந்தியா, மலேசியா , பிரித்தானியா , கனடா என்று உலகில் உள்ள பல நாடுகளின் பாராளுமன்றம் வரை இந்த அதிர்வலைகள் சென்றன. அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ள தீர்மாணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது. இந்திய ஊடகங்கள் தமது கடமைகளைச் சரிவரச் செய்தார்கள். தமிழ் நாட்டில் இது பலத்த உணர்வலைகளைத் தோற்றுவித்தது. ஆனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த தமிழர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் தான் மிச்சமாகியுள்ளது. இன்று கூட சில தமிழ் சிங்கள ஊடகங்கள் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மாணம் பற்றி மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு வருவது பெரும் வேதனைக்குரிய விடையம் ஆகும் !

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மாணத்தில் அப்படி என்ன தான் உள்ளது ?

தற்போது எமக்கு கிடைப்பெற்றுள்ள அமெரிக்க தீர்மாணத்தை பார்வையிட்டால், அதில் எல்.எல்.ஆ.சி என்று கூறப்படும், கற்றுக்கொண்ட பாடத்திற்கான நல்லலிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனைத் தவிர மேலும் 1 வருட அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை நடைமுறைப்படுத்தாவிட்டால் அதற்கு எதிராக என்ன நடக்கும் என்பது தொடர்பாக காட்டமாக எதனையும் குறிப்பிடவில்லை. ஒட்டுமொத்தத்தில் ஒரு பிசு பிசுத்துப்போன கண்துடைப்பு தீர்மாணம் ஒன்றையே அமெரிக்கா இம் மாதம் தாக்கல் செய்யவுள்ளது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஆரம்பத்தில் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும், பொருளாதாரத் தடை இல்லையெனில் இலங்கைக்கு ஐ.நா வின் கண்காணிப்புக் குழுவை அனுப்பவேண்டும் என்று, சில யோசனைகள் முன்மொழியப்பட்டது. 



இதற்கு அமைவாகவே இத் தீர்மாணம் எழுதப்படவிருந்த நிலையில் இலங்கையானது அமெரிக்காவை (போனமுறை போல) எதிர்க்காமல் ராஜதந்திர ரீதியில் அணுகியுள்ளது. இது தற்போது இலங்கைக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்று கூடச் சொல்லலாம். ஏனெனில் அமெரிக்கா கடுமையாக எழுதியிருந்த தீர்மாணத்தில் இருந்து பல அம்சங்களை அகற்றிக்கொண்டுள்ளது. இவ்வாறு பல அம்சங்களும் நிபந்தனைகளும் நீக்கப்பட்ட டம்மியான (வெற்று வேட்டு) தீர்மாணம் ஒன்றையே அமெரிக்கா சமர்பிக்கவுள்ளது. இதனை சில தமிழர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அமெரிக்கா தமிழர்களுக்கு பாரிய உதவிகளைப் புரிவதாக கூறிவருகிறார்கள். ஆனால் அமெரிக்கா போட்டுள்ள இரட்டைவேடம் தற்சமயம் கலைய ஆரம்பித்துள்ளது. 

ஏன் இந்த மாற்றம் ?

இலங்கை அரசானது இந்திய அரசைப் பகைத்துக்கொண்டு சீனாவிடம் ஒட்டி உறவாடி வருகிறது. இச் செயலானது இந்திய உபகண்டத்தை பலமாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக காட்டமான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. எப்போது இலங்கை அரசு அமெரிக்காவுடன் சமரசம் பேச ஆரம்பித்ததோ, அப்போதே அமெரிக்க அரசு, இலங்கை தொடர்பான தனது நிலையை மாற்றிவிட்டது. இந்திய அரசு ஊடாகவும் , மற்றும் இலங்கை ராஜதந்திரிகள் ஊடாகவும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. இப் பேச்சுவார்த்தையில் நேரடியாக அமெரிக்க அதிகாரிகளும் கொள்கைவகுப்பாளர்களும் கலந்துகொண்டுள்ளார்கள். இதனையடுத்து இலங்கை அரசு பல உறுதிமொழிகளை அமெரிக்கா அரசாங்கத்துக்கு கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் பல மாற்றங்களை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது.

தமிழர்களை எவ்வாறு இது பாதிக்கிறது ?

அதாவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகள் போராடியவேளை அவர்களை மட்டுமே நம்பி ஒரு விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாழ்ந்துவந்தார்கள். புலிகள் யுத்த ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மனச்சோர்வடைந்து, சில நாடுகள் தமக்கு விடுதலையப் பெற்றுத்தரும் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆரம்பத்தில் நோர்வே என்றார்கள். பின்னர் இந்தியா என்றார்கள், அமெரிக்கா என்றார்கள், தற்போது தென்னாபிரிக்கா என்கிறார்கள். ஆனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே பிராந்திய நலன் கருதியும், தமது சொந்த நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டுதான் செயல்பட்டு வருமே தவிர , தமிழர்களின் நலன் கருதி செய்ற்படாது என்பதனை , தமிழர்கள் அறிந்துவைத்திருப்பது நல்லது. இதில் குறுகிய அரசியல் லாபத்தைக் கருதி சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கூறும் வியாக்கியானத்தையும் சற்று கேட்டுப்பார்ப்போமா ?

ஆம் அமெரிக்கா போன்ற நாடுகள் சில இலங்கை சீனா பக்கம் செல்வதை விரும்பவில்லைத் தான். அதனால் அவர்கள் இலங்கைக்கு எதிராக தீர்மாணங்களைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்தால் தனை நாம் பயன்படுத்திக்கொள்ளவதில் என்ன தவறு இருக்கிறது ? இந்தச் சண்டையில் நாங்களும் கொஞ்சம் குழிர் காயலாமே ! அதனால் அமெரிக்காவை ஆதரிப்பதில் என்ன தவறு என்று கேட்ப்பார்கள் சில தமிழ் அரசியல்வாதிகள். ஆனால் நாம் இன்னமும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் ஒரு வெளிநாடு எமக்கு விடிவைப் பெற்றுத்தரும் என்று மோட்டுத்தனமாக நம்புகிறோம். இவை அனைத்துமே எம்மை ஒருபோதும் முன்னேற விடாது. எங்கே ஆரம்பித்தோமோ அங்கேயே திரும்பவும் எம்மை கொண்டுபோய் விடும். எனவே நாமே எமக்காகப் போராடவேண்டிய சூழ் நிலையில் தான் இருக்கிறோம். பஸ் ஒன்று வீதியில் பயணிக்கும்வேளை, ஆங்காங்கே உள்ள ஸ்டாப்பில் எல்லாம் பயணிகள் ஏறி இறங்குவார்கள். அதுபோலவே எமது விடுதலைப் பயணத்தில் அமெரிக்கா ஏறி இறங்கலாம், நோர்வே ஏறி இறங்கலாம்.... ஆனால் இறுதிவரை என் நாடும் வரப்போவது இல்லை என்ற விடையத்தை ஆழமாக உணர்ந்து கொண்டால் சரி !

அதிர்வுக்காக

வல்லிபுரத்தான்.


Geen opmerkingen:

Een reactie posten