‘இலங்கைக்கு எதிரான தீர்மானம்!’ என்று அதை குறிப்பிட முடியாத அளவுக்கு அமெரிக்கத் தீர்மானத்தின் வரைபு நழுவல் போக்கில் அமைந்திருப்பதால்தான் ‘இலங்கை தொடர்பான தீர்மானம்’ என்று குறிப்பிட்டிருக்கிறோம்.
படுகொலைகளுக்கு பொறுப்பான இலங்கை அரசைச் சேர்ந்தவர்களை போர் குற்றவாளிகளாக்கும் எந்த சரத்தும் அந்த வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
கடந்த ஆண்டு கொண்டு வந்த தீர்மானத்தை கொஞ்சம் சீவி கூராக்கியுள்ளது போலத்தான் இம்முறை தீர்மானமும் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வெளிக்கொணடு வரப்பட்ட படுகொலைகள் சம்பந்தமான ஆவணங்கள், ஆதாரங்கள், மற்றும் தற்போதைய இனச் சுத்தீகரிப்பு எதுவுமே பிரேரணையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இம்முறையாவது நடைமுறைப்படுத்துவதை உறுதி;ப்படுத்தும் முகமாக “ஐ.நாவின் சிறப்பு நடவடிக்கை அதிகாரக் குழு” இலங்கை செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, அந்த நடவடிக்கை சம்பந்தமான தங்கள் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கத்துடன் கலந்து ஆலோசித்து, அதன் ஒப்புதலின் பின்பே அமுல்படுத்த வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானமானது இலங்கை அரசுக்கு மீண்டும் மீண்டும் கால அவகாசத்தையும் இழுத்தடிப்புகளையும் செய்வதற்கே உதவப்போகிறது என்று சொல்லலாம். இலங்கைக்கும் ஐ.நா பிரதிநிதிகளுக்கும் இடையே ஏற்படப்போகும் பிணக்குகள், வாதப் பிரதிவாதங்கள் மூலம் காலம் இழுபடப்போகிறதே தவிர, தமிழர் தாயகத்து நிலைமை மேலும் மோசமடையக்கூடிய வாய்ப்பே அதிகம்.
இனப்பிரச்சினை என்ற ஒன்று இருக்கும்வரை எந்த ஒரு அரசும் இலங்கையில் நிம்மதியாக அரசாள முடியாது என்பதே உண்மை. முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டமும், அதன் பின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் ஈழத் தமிழரால் முன்னெடுக்கப்பட்டபோதும், சிங்கள வல்லாதிக்கம் வெற்றி கொள்ளப்படவே இல்லை.
அந்த ஒரு நிலையில், சர்வதேசத்தின் கைகளில் அது விடப்பட்டுள்ளது. ஈழத்தமிழரின் எத்தனையோ ஆண்டுகால போராட்டத்தின் நியாயத்தை பாரிய உயிரிழ்ப்புகள் இடம்பெறும்வரை பாராமுகமாகவே இருந்தது சர்வதேசம்.
இன்று உண்மையின் சாட்சிகளாக வெளிவரும் கொடூரமான கொலைக்களக் காட்சிகள் அவர்களது மனச்சாட்சியை ஊடுருவியிருக்கிறது. அதன் வெளிப்பாட்டை இன்று ஐ.நாவில் ஓரளவு காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும், பிராந்திய முக்கியத்துவம் பெற்ற அதன் அமைவிடம் காரணமாக அதனுடனான தொடர்பை பேணும் அவசியம் சுற்றியுள்ள நாடுகளுக்கும், உலக பொலிஸ்காரன் என்று சொல்லும் அமெரிகாகாவுக்கும் இருக்கவே செய்கிறது.
தனது தனிப்பட்ட வல்லமையை சகல நாடுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அமெரிக்கா இருக்கையில், சகலதையும் மிஞ்சும் வேகத்தில் சீனா வளர்ந்து வரும் நிலைiயில், சீனா துணையிருக்கும் துணிவில் இலங்கை என்ற ஒரு குட்டி நாடு, தனது சொல்லுக்குப் பணியாது இராஜதந்திரப் போர் நடத்த முற்பட்டிருப்பதுதான் அமெரிகாவை சீண்டியுள்ளது.
பாரதூரமாக இல்லாவிட்டாலும், தலையில் இறுக குட்டு வைத்தாவது பணிய வைக்கவேண்டும் என்ற அமெரிக்காவின் முனைப்பே இன்று ஐ.நாவில் முன்வைக்கப்படுக்pறது. அதற்கு இந்தியாவின் துணை அவசியம் என்பதையும் அமெரிக்கா உணர்ந்திருக்கிறது.
அந்தப் பிராந்தியத்தில் வல்லமையுள்ள நாடு இந்தியா. இலங்கைக்கு மிகவும் அண்மையில் இருப்பதோடு, கால் எட்டி வைத்தாலே உள்ளே புகுந்துவிடும் தூரத்தில் உள்ளது. பெரிய நாடுதான் என்றாலும், சிறிய ஸ்ரீலங்காவுக்கு பணிந்து போகிறது என்பதுதான் விசித்திரம்.
ஈழத் தமிழர்களின் உயிர்ப்பறிப்பு விடயத்தில் இலங்கை படைகளோடு சேர்ந்து செய்த சதிதான் இந்தியாவை ஐ.நாவில் தடுமாற வைக்கிறது என்பதற்கு ஆதாரமான செய்திகள் மெல்ல வெளிவர ஆரம்பித்துள்ளன.
இலங்கைமேல் எவ்வளவோ மனக் கசப்புகள் இருந்தாலும், அமெரிக்காவின் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக் முடியாத ஒரு சிக்கலில் அது மாட்டுப்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது.
இலங்கைமேல் சீனா கொண்டுள்ள ஆதிக்கம் ஒருபுறம், ஈழத் தமிழர் சம்பந்தமாக இலங்கை அரசால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, அணுமின் நிலையம் போன்று ஒத்துக்கொள்ளப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் தடங்கல்களை ஏற்படுத்துவது, தமிழக மீனவர் தொடர்ந்தும் தாக்கப்படுவது போன்ற பல முரண்பாடுகள் இருந்தபோதும், இலங்கைமேல் காட்டும் விடாப்பிடியான ஆதரவுக்குக் காரணம் இரு நாடுகளும் சேர்ந்தே செய்த ஈழத் தமிழர் படுகொலைதான்.
சர்வதேசத்தால் இலங்கை விசாரிக்கப்படும் நிலை ஏற்பட்டால் தாமும் மாட்டுப்பட வேண்டி வரும் என்ற பயம்தான் இந்தியாவின் தயக்கத்துக்கு காரணமாக இருக்கவேண்டும்.
ஒரு கட்டத்துக்கு மேலே போனால் போரின்போது இந்தியப் படைகள் செய்த நேரடித் தாக்குதல் சம்பந்தமான வீடியோ ஆதாரங்களை இலங்கை அரசு வெளியிட தயங்காது என்பதும் இந்தியாவின் பயத்துக்கு காரணமாக இருக்கலாம். காந்தி தேசம், புத்தர் பிறந்த தேசம் என்ற மாயை பொய்யாகி விடும் நிலை ஏற்படலாம்.
இந்தியாவின் இந்த சங்கட நிலையை உணர்ந்துதான் அமெரிகாவும் பிரேரனையில் வெண்ணையை தடவியிருக்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.
அதைக்கூட ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத இலங்கை அரசு, இந்தியாவின் மூலம் தீர்மானத்தை செயலிழக்கும்படி செய்யப் பார்க்கிறது. போர்க்கால சங்கதிகளை சொல்லி இலங்கை மறைமுகமாக மிரட்டுகிறதோ என்று நினைக்கும்படியாகவே இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
எது எப்படி இருந்தாலும், தமிழரைப் பொறுத்தவரை இன்றுள்ள நிலையில் அமெரிகாகவின் இந்த வழுக்கல் தீர்மானமாவது நிறைவேற்றப்படவேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.
இலங்கை அரசின்மேல் இந்த சிறு அழுத்தம்கூட இல்லையேல் தாயகத் தமிழரின் நிலை மேலும் மோசமாகலாம். சர்வதேசத்தின் பார்வையும், மேலதிக நடவடிக்கையும் தொடர்ந்து இருப்பதற்காவது இந்தத் தீர்மானம் வழியேற்படுத்திக் கொடுக்கும் என நம்புவோம்!
க.ரவீந்திரநாதன்
(kana-ravi@hotmail.com)
(kana-ravi@hotmail.com)
Geen opmerkingen:
Een reactie posten