இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியில் பத்திரிகையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஸியேசன் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கனகராஜ், அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் உலகாள்வோன் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணிய ஆதித்தன், இணைச் செயலாளர் செல்வம் கிறிஸ்டோபர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மோகன்ராஜ், மக்கள் உரிமை பாதுகாப்பு குழு அமைப்பாளர் அதிசய குமார், மனித உரிமை பாதுகாப்பு கழக தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராமசந்திரன், மதிமுக நக்கீரன், வீராங்கனை அமைப்பின் தலைவி பேராசிரியை பாத்திமாபாபு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்ட இலங்கை மீது சுந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. சபை உத்தரவிட வேண்டும்.
இலங்கையில் 60 ஆண்டு கால போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தமிழர் பகுதிகளிலும், புலம்பெயர் தமிழர் மத்தியிலும் ஐ.நா. சபை பொது சுதந்திரமான வாக்கெடுப்பு எடுக்க வேண்டும்.
தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களுக்கு சுதந்திரமான வாழ்வுரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
சிறுவர்களை குறி வைத்து கடத்துவதையும், கொலை செய்வதையும் ஐ.நா. மேற்பார்வையில் விசாரனை மேற்கொண்டு இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் ஊடகத்தினரை படுகொலை செய்வதும், கடத்தப்படுவதும், ஊடகத்தினர் மீது தாக்குதல் தொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே, இலங்கையில் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐ.நா. மேற்பார்வையில் கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும்.
600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றும், ஆயிரக்கக்கான மீனவர்களை சித்திரவதை செய்தும் வருகின்ற இலங்கை அரசு மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மூத்த பத்திரிகையாளர் குமாரவேல், துணைச் செயலாளர் மாடசாமி, பொருளாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூத்துக்குடி பிரஸ் மீடியா அசோஸியேசன் செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten