தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

காணாமற் போனவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது: ரி.ஈ.ஆனந்தராஜா!!


காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரும் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபருமான ரி.ஈ.ஆனந்தராஜா தெரிவித்தார்.
ஆனால், சாட்சியங்களுடன் பதிவுகளைச் செய்யும்போது உரிய முறையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பி்ட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சி லெபரா நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மனித உரிமை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமானது.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் செயல் என்பது ஒரு கூட்டு நடவடிக்கையே ஆகும். பலதரப்பினருடைய ஒத்துழைப்பின் மூலமே மனித உரிமைகளை முறையாகப் பேணமுடியும்.
அதனால் சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு இதற்கு அவசியமானது. இந்த வருடம் கிளிநொச்சியில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்தியத்திற்கான அலுவலகம் திறக்கப்படும்.
அது நிரந்தர அலுவலகமாகச் செயற்படும். அதற்கு முன்னதாக வாரத்தில் ஒரு நாள் இயங்குகின்ற கிளிநொச்சி உப அலுவலகம் ஐந்து நாட்களும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், வவுனியா பிராந்திய இணைப்பாளர் றோகித பிரியதர்சன மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten