தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 21 maart 2013

இன்னொரு பிரபாகரன் அங்கே தோன்றக்கூடும் தினமணி ஆசிரியர்!


இன்னொரு பிரபாகரன் அங்கே தோன்றக்கூடும் தினமணி ஆசிரியர்

மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதாலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைப்பாட்டை மேற்கொண்டாலும் ஆதரிப்பது என திரிணமூல் காங்கிரஸ் முன்வந்திருப்பதாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெரும்பான்மையை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதில்லை.
இந்த நிலையிலும், திமுக கோரிய அதே இரண்டு கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்போகும் தீர்மானம் எப்படி அமைய வேண்டும் என்பது, மார்ச் 19-ஆம் தேதி இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசிய வார்த்தைகளிலேயே வெளிப்பட்டுள்ளது. அவர் கூறியிருப்பது இதைத்தான்:
“இலங்கைத் தமிழர்களின் துயரம் எங்கள் இதயத்தைத் தொடுகிறது. அவர்களது சமஉரிமை, சட்டப்படியான பாதுகாப்பு ஆகியவற்றில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலம் முதலாகவே உறுதியாக இருந்துள்ளோம். அவர்களுக்கு உரித்தான அரசியல் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அப்பாவி மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் நிகழ்த்தப்பட்ட சொல்லொணா அட்டூழியங்கள் பற்றிய செய்திகள், குறிப்பாக 2009-இல் இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டு வேதனையடைந்தோம். ஆகவேதான் சுதந்திரமான, நம்பத் தகுந்த விசாரணையைக் கோருகிறோம்’.
இதே வார்த்தைகள் அச்சு பிறழாமல் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்று நம்பலாம். சோனியா காந்தியின் உரையில் இருக்கும் “சுதந்திரமான நம்பத்தகுந்த விசாரணை’ என்பதை “சர்வதேச விசாரணை’ என்று மாற்றப்படுவதும், அதேபோன்று 2009-இல் நிகழ்த்தப்பட்ட “சொல்லொணா அட்டூழியங்கள்’ என்பது “இனப்படுகொலை’ என்று மாற்றப்படுவதும் இருக்காது. இந்தத் தீர்மானமும் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைக் குழுமத்தில் அளித்த இறுதித் தீர்மானம்போல நீர்த்துப்போனது என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு வீரியம் இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றக் காரணம், நிச்சயமாக திமுகவை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும் என்கிற நெருக்கடிதான் காரணமாக இருக்க முடியும்.
இத்தனை நாள்களாக இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததைக் காட்டிலும் நேரடியாக அமெரிக்காவுக்கே கோரிக்கை வைத்திருக்கலாம். ஓபாமாவைச் சந்தித்துப் பேசியிருக்கலாம். ஐ.நா. மனித உரிமைக் குழுமத்தின் உறுப்பு நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டுத் தலைவர்களுடன், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்துப் பேசி ஆதரவு திரட்டியிருக்கலாம். விரும்பும் திருத்தம் செய்யக் கோரியிருக்கலாம்.
ஆனால் அத்தகைய பெருமுயற்சிகளை, வாய்ப்பிருந்தும் செய்யவில்லை இங்குள்ள அரசியல் கட்சிகள். இதில் திமுகவை மட்டும் சொல்லிக் குற்றமில்லை. யாரும் செய்யவில்லை.
மார்ச் 21-ஆம் தேதி (இன்று) அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடன், அதற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்ததுடன், இப்போதைய மாணவர் போராட்டங்கள் அடங்கிப்போகக் கூடும். ஆனால், ஐ.நா. மன்றத்தில் நிறைவேறும் தீர்மானங்களுக்கு அப்பாற்பட்டு இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் செய்ய வேண்டிய கடப்பாடுகள் உள்ளன.
அதனை உறுதிப்படுத்துவதில்தான் தமிழக அரசியல் கட்சிகள் தற்போது கொண்டுவர இருக்கும் நாடாளுமன்றத் தீர்மானத்தின்போது முனைப்புக் காட்ட வேண்டும்.
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, இலங்கைத் தமிழர்களுக்கான மறுகுடியமர்வுப் பணிகளை இந்திய அரசின் மேற்பார்வையில் நடத்தவுமான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவது இன்றைய அவசியத் தேவை.
இலங்கையில் கடைசிப் போருக்குப் பின்னும் மிச்சமாக அந்த மண்ணிலேயே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை தங்களுக்குத் தாய்மண்ணில் கண்ணியமான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான். வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் கேட்பதைப்போல, அவர்களால் தமிழீழம், ராஜபட்சவுக்கு தண்டனை என்று வெளிப்படையாகப் பேச முடியாது.
ஈழத்தில் கால் நூற்றாண்டுப் போரினால் சலிப்புற்று இருக்கும் அப்பாவித் தமிழர்களின் எதிர்பார்ப்பு கல்வி, மருத்துவம், உறைவிடம், ராணுவம் வெளியேறிய அமைதிச் சூழல், தொழில்தொடங்க பொருளாதார உதவிகள் போன்றவையாகத்தான் இருக்க முடியும். இலங்கை அரசை எதிர்த்துப் போராடும் மனத்துணிவும் தலைமையும் அங்கே இல்லை. இன்னொரு பிரபாகரன் அங்கே தோன்றக்கூடும். ஆனால், அதற்கு இன்னும் காலம் உண்டு. இப்போதைய அவர்களது தேவை அமைதியான வாழ்க்கைதான்.
இத்தகைய வாழ்க்கையை நிச்சயமாக ராஜபட்ச அரசு உறுதிப்படுத்தாது. அங்கே மக்கள் பயத்திலும் பீதியிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முள்வேலிகள் அகற்றப்பட்டு விட்டனவே தவிர, ஒவ்வொரு தெரு மூலையிலும் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நிலைமையை மாற்ற, இந்திய அரசால், இந்திய அரசு இலங்கைக்குத் தரும் தலையீட்டால் தடுக்க முடியும், மாற்ற முடியும். அதற்குத்தான் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் நடுவண் அரசை வற்புறுத்த வேண்டும். கேட்டால் கேட்ட வரம் கிடைக்கும் நேரம் இது.

http://asrilanka.com/2013/03/21/16088

Geen opmerkingen:

Een reactie posten