இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது.
கர்நாடக வாழ் தமிழர்களும் இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஏராளமான தமிழக இளைஞர்களும், இளம் பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தின் போது இவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் தராவி பகுதியில் உள்ள தமிழர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
ஐதராபாத்தின் மாதாபூரில் உள்ள ஹைடெக் சிட்டி என்ற இடத்தில், இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, பிற மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்தும் விநியோகித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten