தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாது பொறுப்புவாய்ந்த பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி கட்சியின் அரசியல்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்தும் தேர்தலின் போதும் தேர்தலின் பின்னரும் கட்சியில் தனக்கு இருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, கட்சிக் கட்டுபாட்டை மீறிய காரணங்களை முன்வைத்து ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியில் இருந்து என்.குமரகுருபரன் அகற்றப்பட்டுள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றிய வேலணை வேணியன், காலியான பிரதி தலைவர் பதவிக்கு கட்சியின் அரசியல்குழுவினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமரகுருபரனின் கட்சி அங்கத்துவம் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜனநாயக மக்கள் முன்னணியை தேசிய ரீதியாகவும் சர்வதேசிய ரீதியாகவும் எந்த ஒரு ஊடக, சமூக, அரசியல் தளத்திலும் பிரதிநிதித்துவம் செய்யும் தகைமை உடனடியாக என். குமரகுருபரனிடம் இருந்து அகற்றப்படுகிறது.
இந்த அறிவித்தல் இந்நாட்டின் சகல ஊடகங்களும்இ அரசியல் கட்சிகளும், ராஜதந்திர நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், கட்சியின் தொழிற்சங்க, இளைஞர், மகளிர் துணை அமைப்புகளை சார்ந்தவர்களும் அவருடன் எந்த ஒரு தொடர்புகளையும் பேண கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல்குழு கட்சி தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடியது.
வேலணை வேணியன், எஸ். ராஜேந்திரன், ஜெயபாலன், சண். குகவரதன், வேலு குமார், எஸ். கணேசன், கே.ரீ.குருசாமி, எஸ். பாஸ்கரா, பிரியாணி குணரத்ன, லோரன்ஸ் பெர்னாண்டோ, எ. ராஜ்குமார், பிரதீப் ராஜகுமாரன், சண். பிரபாகரன், நந்தினி விஜேரத்தினம் உள்ளிட்ட கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவுகளை கட்சியின் ஊடக செயலாளர் சின்னத்தம்பி பாஸ்கரா ஊடகங்களுக்கு அறிவித்தார்.
இந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் நடத்தப்படும் ‘தினகரன்’ வார இதழில் கடந்த ஞாயிற்றுகிழமை வெளியான தனது நேர்முகத்தில், கட்சியின் அரசியல்குழு முடிவுகளை பகிரங்க விமர்சனத்துக்கு உள்ளாக்கி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிட்டு, கட்சியின் பொறுப்பு வாய்ந்த பிரதிதலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, அரசாங்கத்தை திருப்திபடுத்தும் நடவடிக்கையில் என்.குமரகுருபரன் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க அரசாங்கம் பல குழுக்களை களமிறக்கியது.
இந்த அனைத்து குழுக்களையும் பின்தள்ளி நடைபெற்று முடிந்த தேர்தலில் நமது கட்சி மேல்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் அதிகப்படியான மக்களாணையை பெற்றுள்ளது. இதையடுத்து உருவாகியுள்ள மகிழ்சிகரமான சூழ்நிலையை பாழ் செய்து தமிழ் மக்களிடம் தோற்றுபோயுள்ள அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், ஜனநாயக மக்கள் முன்னணியை அழிக்க திட்டமிடும் அரசாங்கத்தில் இருக்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகளின் சதி முயற்சிகளுக்கு துணை போக வேண்டாம் எனவும், உண்மைக்கு புறம்பான பொய்யுரைகளை தொடர்ந்தும் ஊடகங்களில் வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் என்.குமரகுருபரனிடம் அரசியல்குழு தெரிவித்து கொள்கிறது.
கடந்த சுமார் பத்து வருடங்களில், முதல் ஐந்து வருடங்களில் கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும், அதையடுத்து மேல்மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டதற்கான பதவி நியமனங்களை கட்சி வழங்கியதையும், கடந்த 2010ம் வருட பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி கொழும்பு மாவட்ட நியமனத்தையும் கட்சி வழங்கியதையும், உடல்நலக்குறைவு காரணமாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை உரிய முறையில் தன்னால் முன்னெடுக்க முடியாமையினால் தான் அத்தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனதையும் கவனத்தில் கொண்டு. தற்போது நடைபெற்று முடிந்த மேல்மாகாணசபை தேர்தலில் தான் வெற்றிபெற முடியாமைக்கான காரணங்களை தனக்குள்ளே தேடும்படியும்,
மிக நீண்ட காலம் பதவி வகித்துவிட்டு, இன்று வெற்றிபெற முடியாமல் போன பிறகு அதை மனதில் கொண்டு, மேல்மாகாண மக்களின் அங்கீகாரம் பெற்றுள்ள கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும், அபாண்டமான சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளை சுமத்த வேண்டாம் என்றும், கட்சிக்குள்ளே புதிய இளைய தலைமுறையினர் உட்பிரவேசிப்பதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வழிவிட்டு கனவானாக நாகரீகத்துடன் நடந்து கொள்ளும்படியும் என். குமரகுருபரனிடம் அரசியல்குழு மேலும் தெரிவித்து கொள்கிறது.
அரசியல்குழுவின் ஒழுங்கு நடவடிக்கையை அறிவிக்கும் கடிதம் என்.குமரகுருபரனுக்கு பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்படுகின்றது. இதன்படி தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடுத்து வரும் இரண்டு வாரத்துக்குள் எழுத்து மூலமாக பதிலளிக்க அவருக்கு ஜனநாயகரீதியாக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிய பதில் உரிய காலகட்டத்துக்குள் வழங்கப்படாதவிடத்து அவரது கட்சி அங்கத்துவம் முழுமையாக நீக்கப்பட்டு அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
http://www.jvpnews.com/srilanka/64851.html
Geen opmerkingen:
Een reactie posten