ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மாதம் 27ம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், 2002ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூலம் நியமிக்கப்படும் நிபுணர்கள் மூலம் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்குச் சாத்தியங்கள் உள்ளன.
இந்த விசாரணைக்குழுவை நியமிக்கும் முயற்சிகள் ஜெனிவாவில் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கென ஆகப்போகும் செலவும் சாதாரணமானதல்ல. கிட்டத்தட்ட 1.46 பில்லியன் டொலர் இதற்குத் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இலங்கை நாணய மதிப்பின்படி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தயாராகி வருகின்ற போதும், இந்த தீர்மானத்தையோ ஐநாவின் விசாரணைகளையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதனால் எவ்வாறு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
எனினும் போரின் இறுதி காலகட்டத்தில் நிகழ்ந்த மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச அளவில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதானது ஒரு முக்கியமான திருப்பமாகவே இருக்கப் போகிறது.
ஏனென்றால் இறுதிக்கட்டப் போரில் மறைந்து போன, மறைக்கப்பட்ட ஏராளமான உண்மைகள் அப்படியே புதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழர்களில் பெரும்பான்மையானோரிடம் இருந்து வந்தது.
ஆனால் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கேனும் என்ன நடந்தது என்ற வெளிச்சம் சர்வதேச விசாரணை முயற்சி ஒன்றின் மூலம் வெளிப்படும் சாத்தியம் இப்போது உருவாகியுள்ளது.
அதேவேளை இந்த விசாரணை நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைக் காலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதானது இலங்கையில் போரின் போது நடந்த ஏராளமான குற்றங்கள் உலகின் பார்வைக்கு வரமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா, மொறிசியஸ் ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்ட முதலாவது வரைவில் இந்தக் காலவரையறை ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஆனால்மூன்றாவதும் இறுதியுமான வரைவில் இந்தக் காலவரையறை அறிமுகப்படுத்தப்பட்டது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கான அல்லது அதன் ஆதரவை உறுதிப்படுத்துவதற்கான நகர்வு என்றே நம்பப்படுகிறது.
13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல், அதிகாரங்களைப் பகிர்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதன் மூலம் இந்தத் தீர்மான வரைவுக்கு சிவப்புக்கொடி காட்ட முடியாத நிலைக்குள் இந்தியாவைத் தள்ளிவிட்டிருந்தது அமெரிக்கா. ஆனாலும் தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை பற்றிய பகுதி இந்தியாவுக்கு நெருடலை ஏற்படுத்தியிருந்தது.
சர்வதேச சுதந்திர விசாரணை என்ற சொற்பிரயோகத்தை இந்தியா விரும்பவில்லை என்றும் அதனை மென்மைப்படுத்த அமெரிக்காவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் புதுடில்லியிலிருந்து முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.பின்னர் இறுதி வரைவில் சர்வதேச விசாரணை என்ற பதம் நீக்கப்பட்டு விரிவாக, சுதந்திரமான விசாரணை என்ற பதம் சேர்க்கப்பட்டது.
எனினும் இந்தியாவினது ஆதரவை அமெரிக்காவினால் பெற முடியாமல் போனது துரதிஸ்டமென்றே கருதப்படுகிறது.
அதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை நிராகரித்துள்ள போதிலும் விசாரணைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதைக் காண முடிகிறது.
அதாவது 2002 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள் குறித்தே ஐநா தற்போது விசாரிக்க உள்ளது.
ஆனால் 1983ம் ஆண்டிலிருந்து நடந்த சம்பங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் சுசில் பிரேமஜெயந்த, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருபக்கத்தில் விசாரணைகளை நிராகரிக்கும் அரசாங்கத்தின் அமைச்சர்களே இன்னொரு பக்கத்தில் முழு அளவிலான விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
அதுமட்டுமன்றி, ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் தேர்தல் பேரணி ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட தாம் போரின் முழுப்பகுதியிலும் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கத் தயார் என்றும் கடைசி 5 நாட்கள் குறித்து விசாரிப்பது நியாயமல்ல என்றும் கூறியிருந்தார். எந்தவொரு கட்டத்திலும் போரின் இறுதி 5 நாட்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழவோ அதற்கான முயற்சிகள் இடம்பெறவோ இல்லை.
அத்துடன், போரின் இறுதிக்கட்டத்தில் எந்த மனித உரிமை மீறல்களும் நடக்கவில்லை என்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே நடத்தப்பட்டது என்றும் கூறும் அரசாங்கம், எதற்காக அந்த 5 நாட்கள் குறித்தும் விசாரிக்க மறுக்கிறது என்பதுவும் உறுத்தலான விடயமாகவே உள்ளது.
எவ்வாறாயினும் போரில் முழு அளவில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பில் இருந்து வெளியிடப்படும் ஆதரவு கருத்துகள் மிகவும் முக்கியமானது.
ஏனென்றால், இதுவரை இத்தகைய விசாரணை தேவையில்லை என்றும் எத்தகைய மீறல்களும் நடக்கவில்லை என்றுமே அரசதரப்பு கூறிவந்தது.
அதேவேளை, புலிகள் மட்டும் தான் மீறல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அரசாங்கம் குற்றம் சாட்டி வந்தது.
உண்மையில், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இருதரப்புக்களினதும் மீறல்கள் குறித்து விசாரிக்கவே வழி செய்கிறது. எப்போதுமே சர்வதேச சமூகம் இருதரப்பு மீறல்கள் குறித்துமே பேசி வந்துள்ளது.
ஆனால், இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணை முயற்சிகளை நிராகரிப்பதற்கு ஒரு பக்கத்தில் எந்த மீறல்களுமே நடக்கவில்லை என்று வாதிட்டுக் கொண்டே இன்னொரு பக்கத்தில் புலிகள் தான் மீறல்களைப் புரிந்ததாகவும் கூறிவந்தது.
புலிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை.
அதாவது சுருங்கச் சொல்வதானால் புலிகள் மீதான குற்றச்சாட்டுகளை எழுப்பி சர்வதேச விசாரணைக்கு அரசாங்கமே கூட ஊக்கமளித்தது என்பதை மறுக்க முடியாது.
உதைபந்தாட்டத்தில் “சேம் சைட் கோல்” என்று சொல்வார்களே அது போலத் தான் இதுவும். எனவே, சர்வதேச விசாரணை முயற்சி ஒன்றை தடுக்க அரசாங்கம் முழுஅளவில் முயற்சித்ததாக கூறமுடியாது.
ஒருவகையில் அதுவும் கூட துணைபோயுள்ளது என்றே கூறலாம்.
இப்போது, 2002- – 2009 வரையான காலப்பகுதியில் நடந்த மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணை பிறப்பித்ததும், முழுஅளவில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசே கூறுகிறது.
ஆனால், அத்தகைய விசாரணைகளை அரசாங்கம் தானும் செய்யவில்லை, செய்யத் தயாராகவும் இல்லை, வெளிநாடுகளை செய்யவும் அனுமதிக்கத் தயாராக இல்லை. இந்த விடயத்தில் வைக்கோல் பட்டடை நாய்க்கு ஒப்பீடு செய்யத்தக்க நிலையிலேயே அரசாங்கம் இருக்கிறது.
2002 தொடக்கம், 2009 வரையான சம்பவங்கள் குறித்து விசாரிக்கப்பட்டால், அந்தக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களுக்காக தற்போதைய அரசாங்கமே பதில் கூறியாக வேண்டும்.
ஆனால், முழுஅளவில் விசாரணை நடத்தப்பட்டால் எல்லாத் தரப்புகளையும் மாட்டி விடலாம் என்று நினைக்கிறது. அதாவது ஐ.தே.க., விடுதலைப் புலிகள், இந்தியா என்று பல தரப்புகளையும் மாட்டி விட முனைகிறது.
ஐ.தே.க. காலத்துப் படுகொலைகள், சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்ட புலிகளின் தாக்குதல்கள், இந்தியப் படைகளின் காலத்து குற்றங்கள் எல்லாவற்றையும் விசாரணைக்கு இழுத்தால், இத்தகைய விசாரணைக்கான சர்வதேச ஆதரவு குறைந்து விடும் என்று அரசாங்கம் நினைக்கிறது.
ஆனால், ஒட்டுமொத்தப் போரினதும், அது உருவான சூழலினதும் பற்றிய முழு விசாரணை ஒன்று அவசியமானதே. ஏனென்றால், அது மட்டுமே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் எத்தகைய வரலாற்று நிர்ப்பந்தங்களினால் தோற்றம் பெற்றது என்ற உண்மையை வெளிப்படுத்தும்.
ஆயுதப் போராட்டத்துக்குள் தமிழர்களைத் தள்ளிய இனப்படுகொலைகள் குறித்தும் நில அபகரிப்புகள், ஆக்கிரமிப்புகள், இன, மொழி, மத ஒடுக்குமுறைகள் குறித்தும் உண்மைகளை அதுவே வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும். ஆனால், இப்போதைய ஐ.நா. விசாரணைகள் அத்தகையதொன்றாக இருக்காது.
அது மட்டுப்படுத்தப்பட்ட கால எல்லையையே கொண்டது. அதுமட்டுமன்றி, போருக்குப் பிந்திய மீறல்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றியும், இந்த விசாரணை கவனத்தில் கொள்ளப் போவதில்லை.
எனவே, ஐ.நாவின் தற்போதைய விசாரணை முயற்சியானது, தமிழரின் மனவடுக்களை அகற்றும் முழுமையான முயற்சியாக இருக்காது. ஆழமாகப் பதிந்து போயிருக்கும் கசப்புணர்வை இப்போதைய விசாரணை முயற்சியால் களைந்து விடுவதற்கு வாய்ப்பில்லை. அத்தகைய களைதல் இன்றி நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது.
எவ்வாறாயினும் முழுஅளவிலான சர்வதேச விசாரணை ஒன்றுக்கு பல தடைகள் இருக்கின்ற நிலையில், இந்த விசாரணையையே நம்பியிருக்க வேண்டிய நிலை தான் உள்ளது. ஒருவகையில், இதற்காக தமிழர்கள் ஆறுதல் கொள்ளலாம்.
அது என்னவென்றால், முள்ளிவாய்க்காலில் மறைக்கப்பட்ட உண்மைகள் எல்லாமே நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விடப்போவதில்லை, அவை முழுமையாக இல்லாது போனாலும், ஒருபகுதியாவது வெளிச்சத்துக்கும் வரப்போ கிறது என்பதே அது.
கபில்
Geen opmerkingen:
Een reactie posten