தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 april 2014

இலங்கையைத் தண்டிக்குமா அமெரிக்கா!

தயான் ஜயதிலக்க இந்திய உளவாளி?
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 11:42.45 AM GMT ]
எதிரிகளின் ஜெனிவா நடவடிக்கைக்கு அமைய உத்தேச சர்வதேச விசாரணை என்ற பொறிக்குள் கால் வைத்தால், இலங்கை இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக மாறிவிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்காவினால், ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட யோசனை குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், தேசிய சுதந்திர முன்னணி தனது நிலைப்பாட்டை வெளியிட வேண்டியுள்ளது.
2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் இலங்கைக்கு எதிரான யோசனையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை இந்த யோசனையை நிராகரித்திருந்தாலும் இலங்கையை அதற்கு இணங்க வைக்க பல்வேறு திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா போன்ற நாடுகள் இதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளன.
அரசாங்கத்திற்குள்ளும், இராஜதந்திர துறையிலும் பல்வேறு வேஷங்களில் இருக்கும் “றோ”புலனாய்வுப் பிரிவின் ஒற்றர்களை இந்தியா இதற்காக பயன்படுத்தி வருகிறது.
தயான் ஜயதிலக்கவும் அப்படியான ஒருவர். இந்தியா இம்முறை ஜெனிவாவில் வாக்களிக்காதது குறித்து உச்சத்தில் வைத்து வர்ணித்து வருகிறார்.
தருஸ்மன் அறிக்கையில் ஆரம்பித்த இலங்கையின் கழுத்துக்கு பொறி வைக்கும் நடவடிக்கைக்கு அமெரிக்காவை போன்று பங்களிப்பு வழங்கிய நாடு இந்தியா.
2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவா யோசனைகளுக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது மாத்திரமல்லாது ஏனைய நாடுகளை அதற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தது.
இந்த நிலையில், 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் பிரிவினைவாத அதிகாரங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையான தார்மீக அதிகாரத்தை கட்டியெழுப்பவே இந்தியா இறுதியாக தற்போது முயற்சித்து வருகிறது.
தோட்டாவுடன் துப்பாக்கியை கொடுத்து ஒருவரை சுட்டுக்கொல்லுமாறு கூறிவிட்டு, அந்த நபர் இறந்த பின்னர், நான் கொலைகாரன் இல்லை என்ற குற்றவாளியின் பாத்திரத்தையே இந்தியா தற்போது ஏற்று நடிக்க ஆயத்தமாகி வருகிறது.
தயான் ஜயதிலக்க என்பவர், இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளில், பிரிவினைவாதத்தை வலுப்படுத்தும் வகையில் பரிந்துரைகளை முன்வைத்த வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர். இந்தியாவின் தேவைக்கு அமைவான திசை நோக்கி இலங்கையை தள்ளுவதே அவரது தேவையாக இருக்கின்றது.
இந்தியாவின் இந்த தந்திரத்திற்குள் இலங்கை சிக்கினால், ஆரம்பம் முதல் ஜெனிவா நடவடிக்கைக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வந்த நாட்டின் உண்மையான நண்பர்களான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எம்மை விட்டு விலகி செல்லும். இவ்வாறான நிலைமைக்குள் இலங்கை தள்ளிவிடும் தேவையே “றோ)” ஒற்றர்களுக்கு உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போன்றவர்கள் அமெரிக்கா நிறைவேற்றியுள்ள யோசனைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கூறி வருகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற ஜெனிவா யோசனைக்கு ஆதரவு பெற்றுக்கொடுப்பதற்காகவே இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இலங்கையின் நீதியமைச்சர் சர்வதேச விசாரணையை கோருகிறார் என்ற சர்வதேச நிலைப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ரவூப் ஹக்கீம் நீதியமைச்சர் பதவியில் இருந்து கொண்டு செய்த பாரிய தூரோகம் இதுவாகும். இவ்வாறான நிலைப்பாட்டை உருவாக்கி அரசாங்கத்தை சர்வதேச விசாரணை என்ற பொறிக்குள் தள்ளுவதே ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் நோக்கம்.
அரசாங்கம் இதுவரை சரியான நிலைப்பாட்டில் இருந்து ஜெனிவா நடவடிக்கையை எதிர்கொண்டது. எப்படியான அழுத்தங்கள் வந்தாலும் அந்த நிலைப்பாட்டில் வலுவாக தொடர்ந்தும் இருக்க வேண்டும்.
அமெரிக்கா உட்பட மேற்குலக சக்திகள் சுதந்திரமான விசாரணைகளை நடத்த முயற்சிக்கவில்லை. தருஸ்மன் அறிக்கை அதேபோல் நவநீதம்பிள்ளையின் அறிக்கைப்படி இலங்கை போர்க்குற்றவாளி என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.
அமெரிக்காவே சர்வதேச விசாரணை குழுவை நியமிக்கும். அவர்கள் தெரிவு செய்துள்ள விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர்கள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
விசாரணைக்கான அனுமதியை பெறுவதற்காக நவநீதம்பிள்ளை, அதனை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார் எனவும் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கூட்டமைப்பு கலந்துரையாடாது!- சுமந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 12:06.47 PM GMT ]
தென்னாபிரிக்காவுக்கு இந்த வாரம் விஜயம் மேற்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு, அந்நாட்டு ஜனாதிபதி ஜேகப் ஜூமா நியமித்துள்ள இலங்கைக்கான பிரதிநிதியுடன் கலந்துரையாட உள்ளது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தென்னாபிரிக்காவுக்கு இலங்கைக்கும் இடையில் நடைபெற்று வரும் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விடயங்கள் தொடர்பில் தாம் தென்னாபிரிக்காவுடன் கலந்துரையாட போவதில்லை என கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் குறித்தும் தாம் கலந்துரையாடாத போதும் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜூமா நியமித்துள்ள இலங்கைக்கான விசேட பிரதிநிதி சிறில் ராமபோஷாவை சந்தித்து பேசவுள்ளோம்.
இலங்கைக்கான தென்னாபிரிக்க விசேட பிரதிநிதியின் இலங்கை விஜயத்தின் போது கூட்டமைப்பு அவருடன் கலந்துரையாட உள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு, அந்நாட்டின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் ஆர்வத்தை வெளியிட்டிருந்தது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் தென்னாபிரிக்கா நடுநிலை வகித்தது.
இலங்கை தானே ஒரு நீடித்த தீர்வை நோக்கி நகர ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு ஆதரவு வழங்க வேண்டும் என தென்னாபிரிக்கா, மனித உரிமை பேரவையில் குறிப்பிட்டிருந்தது.
தென்னாபிரிக்கா தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லை!– இரா.சம்பந்தன்
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 11:56.17 PM GMT ]
தென்னாபிரிக்க அரசாங்கத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் ஒன்பதாம் திகதி தென்னாபிரிக்கா செல்லவுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் தலைமையில் ஆராய்ந்து தீர்த்துக் கொண்ட அனுபவம் தென்னாப்பிரிக்காவுக்கு உள்ளது.
இந்த நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் எடுத்துக் கூறி இருக்கிறோம். தொடர்ந்தும் விளக்கமளிப்போம்.
இந்த விவகாரங்களை கையாள்வதற்காக தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட தூதுவர் ஒருவரை நியமித்திருக்கிறது.
இந்த விஜயத்தின் போது அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
மிகவும் பக்குவமாகவும்,  நிதானமாகவும், ஏற்கனவே கண்ட அனுபங்களின் அடிப்படையில் ஜாக்கிரதையாகவும் இந்த செயற்பாடுகளை முன்னெடுப்போம் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையைத் தண்டிக்குமா அமெரிக்கா!
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 08:58.15 AM GMT ]
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய சில நாட்களில், கொழும்பில் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஒரு பாதுகாப்புக் கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடமும், இலங்கை பாதுகாப்பு அமை ச்சின் கூட்டுப்படைத் தலைமையகமும் இணைந்து ஒழுங்கு செய்த- Tempest Express ௲ 24 என்ற இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கு கடந்த 1ஆம் திகதி தொடக்கம் கலதாரி விடுதியில் நடந்து வருகிறது.

எதிர்வரும் 9ஆம் திகதி வரை தொடரும் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில், இலங்கை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தான் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்

இவை தவிர, சுமார் 15 நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளும் கண்காணிப்பாளர்களாக இதில் பங்கேற்கின்றனர். இதனை ஒன்றும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கருத்தரங்கு என்று கூற முடியாது. இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வது பற்றிய ஒரு பயிற்சிப் பட்டறைதான் இது.

ஆயுத தளபாடங்கள் பற்றிய விளக்கங்களுக்கோ, போர் உத்திகள் பற்றிய ஆலோசனைகளுக்கோ இதில் இடமில்லை.எல்லாமே, அனர்த்த முகாமைத்துவ திட்டமிடல் சார்ந்த பயிற்சிகளும் விளக்கங்களும் தான். ஆனாலும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அமெரிக்கா நடத்தும், இந்தக் கருத்தரங்கை பலரும் வியப்புடன் நோக்கியது ஆச்சரியமானதே.

இலங்கையுடன் அமெரிக்கா ஜெனீவாவில் மோதல் ௲ கொழும்பில் கூடல்" என்று ஊடகங்களில் வெளியான செய்தி, பலரது கண்களையும் கவர்வதற்கான தலைப்பாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை ஆனால், அதனூடாகச் சொல்ல முனைந்த செய்தியின் பரிமாணம் யதார்த்தத்துக்கு முரணானது.

அதாவது ஜெனீவாவில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா, இலங்கையுடன் இணைந்து பயிற்சி நடத்துகிறது என்பதன் ஊடாக, அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதான கருத்தை உருவாக்க ஊடகங்கள் பலவும் முயன்றதைக் காணமுடிகிறது. ஆனால், அமெரிக்காவை சரியாக விளங்கிக் கொள்ளாதவர்களுக்கே அது ஆச்சரியமானதாகவோ அதிர்ச்சியானதாகவோ இருந்திருக்கும்.

ஏனென்றால், இலங்கையுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது என்பதோ, அத்தகைய நிலைக்கு இட்டுச் செல்ல முனைகிறது என்பதோ தவறான கருத்து. இலங்கையை தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொள்வது என்பது அமெரிக்காவினது தந்திரோபாயமே தவிர, அதனை விட்டு ஒதுங்கி நிற்பதோ, அதனை தனது நிழலில் இருந்து விரட்டி விடுவதோ அமெரிக்காவினது இலக்கு அல்ல.

அமெரிக்காவினது இந்த இலக்கினை சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி, ஐ.தே.க, முஸ்லிம் காங்கிரஸ் போன்றன தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளன என்பதை, ஜெனீவா தீர்மானம் தொடர்பாக அவை வெளிப்படுத்தியுள்ள கருத்துகளில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

அதாவது, ஜெனீவா தீர்மானம் என்பது இலங்கை என்ற நாட்டுக்கு எதிரானது அல்ல என்றும், அது இலங்கை ஆட்சியாளர்களுக்கு மட்டுமே எதிரானது என்றும் இந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்தியப் பெருங்கடலில், கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவை தனது விரோதியாக்கிக் கொள்வதற்கு அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.

அந்த உண்மையை, கொழும்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அமெரிக்கா நன்றாகவே தெளிவுபடுத்தியிருக்கிறது என்பதை, ஜெனீவா தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புத் தோன்றாததை வைத்தே உணர முடிகிறது.

இந்த விளக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா கடுமையாக பணியாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், சிங்களத் தேசியவாதத்தை தட்டியெழுப்புவதற்கான ஒரு கருவியாகவே இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தை பயன்படுத்த முனைந்தது.

இத்தகைய சூழலிலும், கொழும்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அமெரிக்கத் தீர்மானத்தை சரியாக விளங்கிக் கொள்ளும் நிலை காணப்பட்டது. இது அமெரிக்காவுக்கு சாதகமானதொரு விடயம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இலங்கையிடம் எதிர்பார்ப்பது நிலையான அமைதிக்கும், நல்லிணக்கத்துக்குமான சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தான். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத்தக்க நிலையில் இந்த அரசாங்கம் இல்லாத காரணத்தினால் தான், அதனை தன் வழிக்குக் கொண்டு வருவதற்கு பல்வேறு வழிகளையும் கையாள முற்படுகிறது. அதில் ஒன்று தான் ஜெனீவா ஊடாக கொடுக்கப்படும் அழுத்தம்.

அமெரிக்கா மற்றும் மேற்குலகினது கரிசனைகளைக் கருத்திலெடுத்து, அவற்றின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருக்குமேயானால், சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளை விடவும், இலங்கைக்கு வலுவான கவசமாக அமெரிக்கா மாறிவிடும். ஆனால், அரசாங்கம் வேறு விதமாக சிந்திக்கிறது. மேற்குலகினது எதிர்பார்ப்புக்கமைய நடந்து கொள்ள முனைந்தால், அது தனது காலடிக்குக் கீழ் குழி தோண்டுவதற்கு சமமாகி விடும் என்று அது கருதுகிறது.

போர் நடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறவைக்கும் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுப்பதானது, ஆட்சியில் உள்ள அரசாங்கத்தை படுகுழிக்குள் தள்ளிவிடும். எனவே தான், அமெரிக்கா பக்கம் சாயாமல் சீனா-, ரஷ்யாவின் நிழலில் நிற்க விரும்புகிறது இலங்கை அரசாங்கம். அதற்காக, இலங்கையைத் தண்டிக்கும் அளவுக்கு அமெரிக்கா முடிவுகளை எடுக்கவோ, நடவடிக்கைகளில் இறங்கவோ இல்லை.

இப்போது, ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் கூட இலங்கையைத் தண்டிப்பதற்கானது அல்ல, இலங்கைக்கு உதவுவதற்கானதே என்று அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் திரும்பத் திரும்பக் கூறுவதை அவதானிக்கலாம்.

இலங்கை அரசாங்கம் நிராகரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டே, அது இலங்கைக்கே பயனளிக்கும் என்று மேற்கு நாடுகள் கூறுவது சற்றுக்குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால், உண்மை அது தான்.

அதாவது, இலங்கைக்கு எதிரான எந்த நகர்வையும் இந்த தீர்மானம் வெளிப்படுத்தவில்லை. ஆனால், இது இலங்கை அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. இலங்கை அரசு என்பது வேறு. அதை நிர்வகிக்கும் அரசாங்கம் என்பது வேறு.

இலங்கை அரசை நிர்வகிக்கும் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு இந்த தீர்மானத்தினால் பாதிப்பு ஏற்படலாம் என்ற போதிலும், அது இலங்கை அரசுக்கு நன்மையையே அளிக்கும் என்பதே மேற்குலக கருத்தாக உள்ளது. அதாவது, நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றினால், அது இலங்கையின் எதிர்காலத்துக்கு சாதகமாக அமையும் என்றே மேற்குலகம் கருதுகிறது, ஆனால், அரசாங்கமோ அது தமக்குப் பாதகமாக அமையும் என்று அச்சம் கொள்கிறது.

இதனால் தான், அமெரிக்காவுடன் அது முட்டி மோதுகிறது. ஆனாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளைத் துண்டிக்கும் அளவுக்குச் செல்ல முனையவில்லை. அதனால் தான், எந்தச் சிக்கலுமின்றி கொழும்பில் பாதுகாப்புக் கருத்தரங்கை நடத்தி வருகிறது அமெரிக்கா. இதுமட்டுமன்றி, வேறும் பல பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்களையும் அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வருகிறது.

பசுபிக் கட்டளைப் பீடமே இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது- கண்காணிக்கிறது. எனினும், ஜெனீவா தீர்மானத்துக்கு முன்னதாக வடக்கில் மூன்று பாடசாலைகளை முழு அளவில் வசதிகளைக் கொண்டதாக புனரமைக்கும் திட்டம் ஒன்றை பசுபிக் கட்டளைப்பீடம் முன்வைத்திருந்த போதிலும் அதை அமைச்சரவை நிராகரித்திருந்தது. ஆனால் பின்னர், அரசாங்கம் அந்த திட்டத்தை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முன்வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இப்போதும் கூட, அமெரிக்கா - இலங்கை பாதுகாப்பு உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலான எந்த சம்பவமும் நிகழ்ந்து விட்டதாகக் கூறிவிட முடியாது. ஆனால், இந்த நிலைமை நிரந்தரமானது என்று உறுதிப்படுத்த முடியாது.

ஏனென்றால், ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இடமளிக்க மறுத்தால்- அதாவது சர்வதேச விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுத்தால், இலங்கை மீதான பிடியை மேற்குலகம் இறுக்க வேண்டியிருக்கும்.அது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் விரிசல்களைக் கொண்டு வரலாம்.

ஆனாலும், முடிந்தவரைக்கும் அமெரிக்கா அத்தகைய உறவுகளைத் துண்டிக்காமல் வேறு வழிகளிலேயே இலங்கையை வழிக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும். ஏனென்றால், இலங்கையின் கேந்திரத் தன்மையின் முக்கியத்துவத்தையும்,அதன் மீதான பிடியையும் அமெரிக்கா அவ்வளவு இலகுவாக விட்டுக் கொடுத்து விடாது.


ஹரிகரன்


Geen opmerkingen:

Een reactie posten