தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 6 april 2014

தலிபான் மற்றும் அல்-குவைதாவுடன் தடை செய்யப்பட்ட தனி நபர்கள் தொடர்பு: இலங்கை

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு தடை செய்யப்பட்ட வெளிநாடுகளில் இயங்கும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள 424 தனி நபர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை அரசாங்க அச்சம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்யப்பட்டியலில் சேர்த்துள்ளதாக அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது.

ஜேர்மனி, டென்மார்க், பின்லாந்து உட்பட பல நாடுகளிலும் வாழும் 400க்கும் மேற்பட்ட புலம்பெயர் இலங்கையர்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இந்த அமைப்புகளும், தனி நபர்களும் தலிபான் மற்றும் அல்-குவைதா ஆகிய இரண்டு முக்கிய சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளின் சொத்துக்கள், நிலங்கள் மற்றும் வங்கி கணக்குகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரரா தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் இலங்கையில் உள்ள சில அமைப்புகளுக்கு நிதியுதவிகளை அனுப்பியுள்ளதுடன் அந்த அமைப்புகளை அடையாளம் காண அரசாங்கம் விசாரணைகளை நடத்த உள்ளது.
அத்துடன் தடை செய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த எவருக்கும் வீசா வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களில் எவரும் நாட்டிற்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தடைக்கு எதிராக சட்டம் மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாக தடை செய்யப்பட்ட அமைப்புகளில் ஒன்றான உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பேச்சு, சுதந்திரமான சமூகம், நேசத்திற்குரிய சுதந்திரம், ஜனநாயகம் என்பன வரையறுக்கப்பட்டுள்ளன.
ஜனநாயகம் இல்லாத இலங்கையுடன் பயங்கரவாத தந்திரோபாயங்களுடன் எவரும் பணியாற்றி முடியாது என்ற தெளிவான செய்தியை அரசாங்கத்திற்கு அனுப்ப உள்ளதாக உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரித்தானிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் அமைப்பு, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடியத் தமிழர் தேசிய பேரவை, தமிழ் தேசிய பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை, உலக தமிழர் நிவாரண நிதியம் உட்பட 16 அமைப்புகளை இலங்கை அரசாங்கம் அண்மையில் தடை செய்தது.

Geen opmerkingen:

Een reactie posten