தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் ‘கத்தி’ திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால் அத்திரைப்படத்துக்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன் சந்தோஷ் சிவன் என்ற கேரள சினிமா இயக்குநர் இயக்கிய ‘இனம்’ என்ற திரைப்படத்துக்கு தென்னிந்திய தமிழர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அத்திரைப்படம் வெளியிடுவதை அதன் தயாரிப்பாளர் லிங்குசாமி தடைவிதித்தார்.
இலங்கைத் தமிழர்களை அத்திரைப்படம் மோசமாக சித்தரிப்பதாகக் கூறியே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இனம் திரைப்படம் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.
இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம், விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி திரைப்படத்தைத் தயாரிக்கின்றது.
லைக்கா மொபைல் நிறுவனமானது, ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ, இந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார். லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவராக சுபாஷ்கரன் அல்லி ராஜா தமிழர் என்றாலும், ஜனாதிபதிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்று இந்திய செய்திகளில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட விஜய்யின் கத்தி திரைப்படத்தில், இப்போது லைக்கா மொபைல் நிறுவனமும் இணைந்துள்ளது.
‘தன்னை இலங்கைத் தமிழர்களின் காவலனாகச் சித்தரித்துக்கொண்ட விஜய்க்கு இந்த உண்மை தெரியாதா? அல்லது தெரிந்தே இப்படியொரு துரோகத்துக்கு துணை போகிறாரா?’ என்ற கேள்விகளோ இந்த திரைப்படத்தை எதிர்க்க தமிழர்கள் தயாராகி வருவதாக அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரன் கூறுகையில், ‘எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான் இந்த படத் தயாரிப்பு நிறுவனம். கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியதான் எங்கள் சேர்மனின் நண்பர்.
எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர் சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரச தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்து வருகிறோம். இது இனத் துரோகம் அல்ல. மேற்கொண்டு பேச முடியாது’ என்று ரவீந்திரன் கூறியுள்ளார்.
(தற்ட்ஸ்தமிழ்)
http://www.jvpnews.com/srilanka/64909.html
Geen opmerkingen:
Een reactie posten