இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை கண்டித்தும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. ஐ.நா மாமன்றத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கை பிரச்சினையை மாணவர்கள் கையில் எடுத்து கடந்த 8 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
கோயம்பேட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த மாணவர்கள் அனைவரும் குண்டு கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் இவர்களின் உண்ணாவிரத போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்கள் சாலைமறியல் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பாரிமுனையில் அம்பேத்கார் சட்டக்கல்லூரி வளாகத்தில் 4 நாட்களாக 27 மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு நேற்று மாலையில் மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்து சென்று அவர்களது உடல்நிலையை பரிசோதித்தனர். அப்போது அவர்களுக்கு குறைந்த ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கான அறிகுறிகளும் காணப்பட்டன.
இதேபோல சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்திலும் மோனிஷா என்ற மாணவி உள்பட 13 பேர் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
இவர்களில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களான பீமராஜ், புவனேஷ்குமார் ஆகியோருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நடிகர் சிம்பு மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று இரவு ராஜா அண்ணாமலை புரத்துக்கு சென்ற அவர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களுடன் ஒன்றாக சிறிது நேரம் தரையில் அமர்ந்திருந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பாரிமுனை அம்பேத்கர் சட்ட பல்கலைகழக மாணவர்களான மெர்வின், பிரகாஷ், கோபால், மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் தொடர்ந்து டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள்.
புரசைவாக்கம் சட்டக் கல்லூரியின் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் கனகவேல், மாதேஷ், பழனிவேல் ஆகியோரும் மயக்கம் அடைத்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் இவர்கள் அனுமதிக்கபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு சட்டக் கல்லூரியிலும் மாணவர் களின் உண்ணாவிரத போராட்டம் 4-வது நாளாக நீடித்து வருகிறது. உண்ணாவிரதம் இருந்த 21 பேரில், விக்னேஷ், ஸ்ரீதர், நாகராஜ், சி.கே.மணிகண்டன், என்.மணிகண்டன் ஆகிய 5 பேர் மயக்க மடைந்தனர்.
இவர்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள அகதி ஈழ நேரு இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சென்னை மற்றும் செங்கல்பட்டில் மொத்தம் 13 மாணவர்கள் உண்ணா விரதம் இருந்து மயங்கி விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் உடல் நிலை மோசமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள் ளனர். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் துணை கமிஷனர் பவானீஸ்வரி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர்.
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைந்திருந்தது. அப்போது மாணவர்களின் போராட்டத்தால் தமிழகமே ஸ்தம்பித்து போனது. அதேபோன்று கிளர்ச்சியுடன்தான் ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் கடைசியில் வெற்றியில் முடிந்தது. இதேபோல மாணவர்களின் போராட்டமும் ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten