தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 april 2014

மகிந்தவின் அரசியல் செல்வாக்கு வீழ்ச்சியடைகிறதா?

ஜெனிவாத் தீர்மானத்தை இலக்கு வைத்து பிரசாரங்களை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிட்டு திகதி குறிக்கப்பட்ட மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்கள், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையோடு சூட்டோடு சூடாக நடத்தி முடித்துள்ளது மகிந்த அரசாங்கம்.
எனினும், இம்முறை நடைபெற்ற தேர்தல்களில் மகிந்த அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட குறைந்தளவு ஆசனங்களை பெற்றுள்ளதையும், குறைந்த வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஏனெனில், எதிர்க்கட்சிகளுக்கான வாக்குப் பதிவு இத்தேர்தல்களில் அதிகரித்துள்ளன. முக்கியமாக, ஜேவிபியின் தலைமைத்துவ மாற்றம் மற்றும் புதிய அரசியல் கட்சியான சரத் பொன்சேகாவின் ஜனநாயக் கட்சியின் எழுச்சியை இத்தேர்தல் காட்டுகிறது.
சுமார் 2 மில்லியன் வரையிலான மக்கள் இரு மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, ஜனாதிபதியின் கோட்டை என்று கூறப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆளும் கட்சி வீழ்ச்சியினைச் சந்தித்துள்ளது.
தற்போது நடந்து முடிந்துள்ள மாகாண சபைத் தேர்தலை 2009ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்பிடும் போது, ஆளும் கட்சி இரு மாகாணங்களிலும் 17 ஆசனங்களை இழந்துள்ளது. இரண்டு மாகாணங்களில் 106 ஆசனங்களைக் கொண்டிருந்த ஆளும் கட்சி தற்போது 89 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.
மேல் மாகாணத்தில் கடந்த தேர்தலில் 68 ஆசனங்களை கைப்பற்றிய ஆளும் கூட்டணி கட்சி இம்முறை 12 ஆசனங்களை இழந்து 56 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது.
அதேபோன்று தென் மாகாண தேர்தலிலும் கடந்த முறை 38 ஆசனங்களைப் பெற்ற மகிந்தவின் கூட்டணி இந்தத் தேர்தலில் 5 ஆசனங்களை இழந்து 33 இடங்களை மட்டும் தக்கவைத்துள்ளது.
ஆரம்பத்தில் மகிந்த அரசாங்கம் யுத்த வெற்றியை காரணம் காட்டி, நடைபெற்ற தேர்தல்களின் ஆட்சியைத் தக்கவைத்து வந்தது. இனிவரும் காலங்களிலும் அவ்வாறு நடைபெறும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அது தோல்விக்கான முதல்படி எனலாம்.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறப் போகும் பொதுத் தேர்தலின் போது, மகிந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பாராளுமன்றில் இழக்க நேரிடும்.
ஏனெனில், ஒரே காரணத்தை திரும்பத் திரும்பக் கூறும் போது மக்கள் சலிப்படைவர். கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை பதவியைக் காட்டி, தன் பக்கம் இழுத்து பெரும்பான்மையினைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறது ராஜபக்ச அரசாங்கம். எதிர்வரும் காலங்களில் அதுவும் குறைவடையலாம்.
இம்முறை ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணையைக் காரணம் காட்டி மக்களை அரசாங்கம் திசை திருப்பி வந்தது. அதுவே இம்முறை தேர்தல் பிரசாரங்களில் சூடு பிடித்த விடயம். இது ஆளும் கட்சியின் வெற்றிக்கு ஒரு காரணமெனலாம்.
இங்கு முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டியது, ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சியினால் வெறுப்படைந்திருந்த நாட்டு மக்கள், 1994ம் ஆண்டு, சந்திரிக்காவின் வருகையினையடுத்து, அவரின் வாக்குறுதிகளை நம்பி, அவருக்கு அமோக ஆதரவினை வழங்கி ஆட்சி பீடமேற்றினர்.
இவ்வாறே மகிந்தவின் நீண்ட கால ஆட்சியில் வெறுப்படையும் மக்கள் மாற்று அரசியல் தலைமைத்துவமொன்றிற்கான ஆணையினை வழங்கக் கூடும்.
ஜெனிவாத் தீர்மானத்திற்கு முன்னரோ அல்லாது பின்னரோ நடத்தியிருந்தால், தற்போதையை வீழ்ச்சியை விட இன்னும் அதிகமாக ஏற்பட்டிருக்கும். ஏனெனில் மக்களின் மீது திணிக்கப்படும் சுமையே முக்கிய காரணமாக அமைந்திருக்கும்.
அத்தியாவசிப் பொருட்களுக்கான விலையேற்றம் அடிமட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மாற்றிப் போட்டுவிடும். இதன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்புணர்வை வெளிக்காட்டுபவர்களாக மாறிவிடுவர். இதனால், ஜெனிவா தீர்மான விவகாரத்தைக் காரணம் காட்டி மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் மழுங்கடித்து விட்டது.
அது ஒருபுறம் இருக்க, வாக்களிப்பில் கலந்து கொள்ளாத மக்கள் அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பில் கலந்து கொள்ளவில்லையா? அல்லது விழிப்படைந்து விட்டனரா என்ற கேள்வி எழுகின்றது.
இவ்வாறான வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் கவரும் பட்சத்தில், மேலும் ஆளும் கட்சிக்கு விழ்ச்சி ஏற்படலாம்.
ஒரே தடைவையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினால், தான் தோல்வியைத் தழுவிவிடலாம் என்ற அச்சமும் மாகாண சபைத் தேர்தலை வேறு வேறாக நடத்தக் காரணமெனலாம்.
எந்தவொரு ஆட்சியாளர்களும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிவிட முடியாது. அத்துடன் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசிடம் தவறுகள் உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்னொரு அமைச்சரான வாசுதேவ நாணயக்கார மக்களின் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மக்கள் எப்போதும் தனியே அபிவிருத்தி என்ற மாயைக்குள் மயங்கி நின்றுவிடுவார்கள் என அரசாங்கம் நினைத்தால் அது முட்டாள் தனமாகும்.
அதுபோலவே மகிந்த நீண்ட நாட்களுக்கு உண்மைகளை மறைத்து ஆட்சியமைக்க முடியாது. 2016 ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தும் எண்ணம் தமக்கில்லை என அவரே கூறியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
சில வேளைகளில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் இலங்கை மீதான பொருளாதாரத் தடைக்கு வழிவகுக்குமானால், தற்போதைய அரசாங்கத்தின் நிலைமை மேலும் மோசமடையலாம்.
இதனால் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருக்க வேண்டுமென்ற மகிந்த ராஜபக்சவின் கனவு கானல் நீராய் மாறிவிடும் என்பது நிச்சயம்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWfr1.html

Geen opmerkingen:

Een reactie posten