தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 april 2013

மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - பாகம் 2


மிரட்டிய அமெரிக்கா... மீறிய புலிகள்...!  [ விகடன் ]

கியூபா, வியட்நாம், தென்ஆப்ரிக்கா, நமீபியா, பாலஸ்தீனம் போலவே ஈழத்தில் நடந்ததும் விடுதலைப் போராட்டம். இதை உணர்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் தயக்கம் என்ன?
இந்த நாடுகளின் கோரிக்கையை சில ஏகாதிபத்திய சக்திகள் ஆதரித்தன அல்லது ஆதரிக்கும் என்பதற்காக, அதன் போராட்ட நியாயங்களை சமூக - ஜனநாயக சக்திகள் புறந்தள்ளிவிட முடியுமா?

கியூபாவுக்கும் சோசலிஸ நாடுகளுக்கும் அமெரிக்கா செய்ததை, யாழ்ப்பாணத்துக்கும் வன்னிப் பகுதிக்கும் சிங்களம் செய்தது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் தடுத்தும், சொந்த தேசத்துக்குள் வர்த்தகம் அனைத்தையும் நிறுத்தும், விலைகொடுக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலையை உயர்த்தியும், 'பொருளாதாரத் தடை’ செய்யப்பட்ட பகுதியாக தமிழீழத்தை சிங்கள இனவெறி நடத்தியது.
அப்போது, இன்று ஜெனிவாவில் தீர்மானம் கொண்டுவந்த அமெரிக்காவோ அல்லது தீர்மானத்தை ஆதரித்து நிற்கும் நாடுகளோ அன்று குரல் கொடுக்கவில்லை. காரணம், ஒன்றுபட்ட இலங்கைதான் அவர்களுக்குத் தேவை. அது இருந்தால்தான் தங்களது சந்தை செழிக்கும் என்று நினைத்தனர். 'ஒன்றுபட்ட இலங்கைக்குள்’ புலிகளை அமுக்கப் பார்த்தனர். அதனால், ஏகாதிபத்திய சக்திகள் தனித் தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. புலிகளின் அரசியலைத் தீர்மானிக்கும் நபர்களில் ஒருவராக இருந்த கா.வெ.பாலகுமாரன், ''கியூபா எங்களுக்குப் ஒரு பாடமாக இருக்கிறது. நாளை நாங்கள் விடுதலை பெற்றாலும்கூட தொடக்கத்திலேயே எங்களுக்கு இப்படிப்பட்ட சில தடைகள் வரக் கூடும்'' என்று, அமெரிக்காவை மனதில்வைத்தே சொன்னார்.
ராஜபக்‌ஷவை வைத்துப் புலிகளை வீழ்த்துவதும் பின்னர் ராஜபக்‌ஷவை வீழ்த்துவதன் மூலமாக சீனாவை மிரட்டுவதும் என்ற தந்திரம் மட்டுமே ஜெனிவா தீர்மானமே தவிர, இது தமிழருக்கு ஆதரவானதும் அல்ல; சாதகமானதும் அல்ல. சர்வதேச அரசியலையே சர்வமும் யோசித்துக்கொண்டிருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 'தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கும்’ என்று நம்புவதுதான் ஆச்சரியமானது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் குறித்து 'தீக்கதிர்’ பத்திரிகையில் தோழர் உ.வாசுகி 'சாத்தான் வேதம் ஓதினால், சந்தேகம் வர வேண்டாமா?’ என்று ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.
கொலம்பஸில் தொடங்கி, லத்தீன் அமெரிக்காவில் தொடர்ந்து, பாலஸ்தீனம் வழியாக வந்து, வியட்நாமைத் தொட்டு, ஈராக் அநியாயத்தை அடையாளப்படுத்தி விரிவாக எழுதியிருந்தார். ஆனால், இந்த நாடுகளில் நடந்த அட்டூழியங்களோடு ஒப்பிடும்போது கொஞ்சமும் குறையாதது ராஜபக்ஷே சகோதரர்கள் ஈழத்தில் நடத்தியது. ஆனால், அதைப் பற்றி கரிசனமான வார்த்தைகள் வர மாட்டேன் என்கிறதே... அதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நுண்மையான அரசியல். இவர்களுக்குத் தூரப் பார்வைதான் உண்டு போலும். கிட்டப் பார்வை கிடையாதோ?
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுமையான சித்துவிளையாட்டுகள் பகிரங்கமாக நடந்த இடம் இலங்கை. ஓஸ்லோவில் 2002-ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தை அமைதியாகப் போய்க்கொண்டு இருந்தபோது, அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அமிட்ரேச் இடையில் புகுந்து, 'ஒரு தனியரசை அமைப்பதற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஸ்ரீலங்கா மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விடுதலைப் புலிகள் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மிரட்டல் விடுத்தார். இந்தக் கூட்டத்தில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இருந்தார்.
'ஒரு சமாதானக் கூட்டத்தில் தமிழரின் சுதந்திரப் போராட்டத்துக்கு இகழ்ச்சியை உண்டு பண்ணும் நோக்கத்துடன் ஒரு உயர்தர அமெரிக்க அதிகாரி ஆத்திரமூட்டும் வகையில் எமது இயக்கத்தைச் சீண்டியது எனக்குச் சினத்தை ஏற்படுத்தியது. என்று பாலசிங்கம் எழுதினார்.
இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை 2003-ம் ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜப்பான் செய்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள்தான் அதிக நிதி அளிக்க ஒப்புக்கொண்டன. அளவுக்கு அதிகமான நிதி இலங்கைக்குள் வருவதை புலிகள் அமைப்பு கண்டித்தது. இதை அமெரிக்கா விரும்பவில்லை.
ஜப்பானில் நடக்க இருந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடு செய்யும் ஆலோசனை மாநாட்டை வாஷிங்டனில் நடத்தப்போகிறோம் என்று திடீரென அறிவித்து, அதற்கு புலிகள் அமைப்பை அழைக்காமல்விட்டது அமெரிக்கா. 'எங்கள் நாட்டில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால், அவர்களை அழைக்க முடியாது’ என்று சொன்னார்கள். 'நாங்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே அமெரிக்காவில் நடத்தியுள்ளீர்கள்’ என்றார் பிரபாகரன்.
புலிகள் பங்கேற்காமலேயே அந்த மாநாடு வோஷிங்டனில் நடந்தது. 'நாசகாரச் சுழற்சிகள் நிலவும் அரசுகளது சர்வதேசக் கூட்டமைப்பின் சதிவலைப் பின்னலில் சிக்குண்டு நசுங்குவதை எமது இயக்கம் விரும்பவில்லை. பலம் பொருந்திய இந்த சர்வதேச சக்திகளின் பொறியில் விழுந்துவிடாது சுதந்திரமாகச் செயல்படவே நாம் விரும்பினோம்’ என்று பிரபாகரன் கடுமையாக அமெரிக்காவைக் கண்டித்தார். இனி பேசிப் பயனில்லை என்று புலிகள் முடிவுக்கு வந்தது அதன் பிறகுதான். ொ
இதுபற்றி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்துக்கு, அவர் பதில் அனுப்பவில்லை. ஆனால், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆஸ்லி வில்ஸ் பதில் அனுப்பினார்.
'விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவதாயின், பயங்கரவாதத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும். பெரும் படை அணிகளையும் ஆயுதங்களையும் வைத்திருப்பதால், புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. அது அவர்களுக்கு நெருக்கடியையே ஏற்படுத்தும்’ என்று, அமெரிக்கத் தூதர் சொன்னார். 'எமது மண்ணையும் மக்களையும் பாதுகாக்க நாம் ஆயுதம் வைத்துள்ளோம்’ என்று பதில் சொன்னார் பாலசிங்கம்.
'இனப் பிரச்சினையை இரு தரப்பும்தான் தீர்க்க வேண்டும். பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள வெளிநாட்டுச் சக்திகளை அநியாயமாகத் தலையீடு செய்யவைத்தது தவறு’ என்று ரணிலுக்கு புலிகள் கடிதம் அனுப்பினர்.
'சமாதானத்தின் பெயரால் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் ரணில் அரசு விரித்த சர்வதேச சதிவலைப் பொறிக்குள் சிக்கிவிடாது இருப்பதில், எமது இயக்கத்தின் தலைமை மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சமாதானப் பேச்சுக்களை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழரின் தேசிய இனப் பிரச்னையை சர்வதேசமயப்படுத்துவதில் நாம் வெற்றி கண்டோம். ஆனால் அதேவேளை, எமது மக்களின் விடுதலைப் போராட்ட லட்சியத்தில் சர்வதேச சக்திகள் குறுக்கிட்டு தலையீடு செய்வதை நான் வன்மையாக எதிர்த்தோம்’ என்று பாலசிங்கம் அறிவித்தார்.
அதாவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தங்கள் சந்தை வளத்துக்கும் மூலதனத்துக்கும் புலிகளையும் தமிழர்களையும் பண்டமாக மாறுவதற்கு அமெரிக்கா கட்டாயப்படுத்திய வரலாறுதான் இவை. கொலம்பஸ் காலம் முதல் அமெரிக்க ஏகாதிபத்திய அராஜகங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இலங்கையில் நடத்தப்பட்ட அமெரிக்க நெருக்கடிகள் தெரியாதா? தெரிந்தும் பார்க்கத் தவறினார்களா?இதைப் பற்றிச் சொன்னால், தேசிய இனப் பிரச்னை குறித்து பேச வேண்டும் என்பதால் பீதி அடைகிறார்களா?
தேசிய இனப் பிரச்னையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையிலேயே உள்வாங்க மறுப்பதால்தான், ஏகாதிபத்தியப் போர்வைகளைப் போட்டுமூடி, நாட்டில் நடக்கும் அனைத்து விடுதலைப் போராட்டங்களையும் நிராகரிக்க வேண்டியுள்ளது.
அப்படியே அமெரிக்கா, ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தால் என்ன முடிவெடுப்பது? இதற்கு லெனின் வழிகாட்டுகிறார்...
''ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்னொரு பெரிய வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். இதனால் சமூக - ஜனநாயகவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுக்க மாட்டார்கள். அதேபோல், அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல சமயங்களில் பூர்ஷ்வாக்கள் குடியரசுக் கோஷங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதற்காக சமூக - ஜனநாயகவாதிகள் தங்களது குடியரசுக் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை'' என்று தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார்.
தேசிய இனப்பிரச்னை, சுயநிர்ணய உரிமை, பிரிந்துபோதல் ஆகியவற்றை எப்போது எழுதினாலும் லெனின், குடும்ப உதாரணம் ஒன்றைக் காட்டுவார். அதுதான் விவாகரத்து.
''சுயநிர்ணய சுதந்திரத்தை அதாவது, பிரிந்துபோகும் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்வது, விவாகரத்து உரிமையை ஆதரிப்பவர்களை குடும்ப பந்தங்களை அழிப்பவர்கள் என்று சொல்வதற்கு சமமானது'' என்கிறார் லெனின். குடும்பத்துக்குள் சித்ரவதை செய்யப்படும் பெண் ஒருத்தி, அதில் அடங்கி இருப்பதைவிட அந்த வீட்டைவிட்டு வெளியேறுவதுதான் நிம்மதியானது என்று நித்தமும் மாதர் சங்கங்கள் கவுன்சிலிங் நடத்துகின்றன. ஆனால், 'என்ன கொடுமை செய்தாலும், அந்த நாட்டுக்குள் வாழத்தான் வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்பு எடுக்கிறது. மாதர் சங்கத்தின் அறிவுரை குடும்பத்துக்குக் குடும்பம் மாறாது. ஆனால் மார்க்சிஸ்ட் நிலைப்பாடு நாடுகளுக்கு நாடு மாறுகிறதே?
- தொடரும்-

Geen opmerkingen:

Een reactie posten