தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும்!- ஸ்பெயின் (செய்தித் துளிகள்)!


அரசாங்கத்துடன் இணைந்து செல்லாத அரசியல் பயணம் அபாயகரமானது: சரத் பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:35.31 PM GMT ]
அரசாங்கத்துடன் இணைந்து செல்லாத அரசியல் பயணம் மிகவும் பயங்கரமானது என ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான மனித உரிமைப் பாதுகாப்பு கிடையாது. நீதி நேர்மையை நிலைநாட்டுவது அதனை விடவும் கடுமையானது.
அரசாங்கத்தின் அரசியல் பயணத்திற்கு புறம்பான பயணங்களை மேற்கொள்ள முடியாது.
நாட்டுக்கு நன்மை ஏற்பட வேண்டுமாயின் மக்களை ஏமாற்றாத, மக்களில் தங்கி வாழாத அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட வேண்டுமென சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா கட்சிக் காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும்!- ஸ்பெயின் (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:48.54 PM GMT ]
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் சமாதான நடவடிக்கைகளுக்கு ஸ்பெயினின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமது முழு ஆதரவினையும் வழங்க முன்வந்துள்ளனர்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஸ்பெயின் சென்றுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் ஆணையகத்தின் தலைவர் ஜோர்ஸ் இகானோஷியோ டொரொஸையும், டொரொசின் தலைமையிலான ஆணையகத்தின் 6 சிரேஸ்ட உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது நீர் முகாமைத்துவம் குறித்து இலங்கை எடுக்கவேண்டிய யுக்திகள் குறித்தும் ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, இலங்கை மற்றும் ஸ்பெயினுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கைகளை பரஸ்பரம் அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரான்சில் உள்ள இலங்கை தூதுவராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலி
நிட்டம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ கலகெடிஹேன என்னும் இடத்தில் வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்களும், ஒரு குழந்தையும் உயிரிழந்தவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மின்சார கட்டணங்கள் குறித்து கருத்தாடல்கள்
அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணங்கள் குறித்து தொடர்ந்தும் அரசியல் துறையிலும், குடியியல் சமூகத்திலும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதுகுறித்த தீர்க்கமான கலந்துரையாடல் ஒன்று எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின்சார கட்டணங்கள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக மின்சக்தி பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட கட்டண பட்டியல் மற்றும் அந்த ஆணைக்குழுவினால் திருத்தப்பட்டு மீள வெளியிடப்பட்ட பட்டியல் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் பேசிய ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, மின்சார சபையின் திறனற்ற நிர்வாகத்திற்கு நாட்டின் மொத்த சனத்தொகையும் நட்டஈடு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இதனிடையே, உயர்த்தப்பட்ட மின்கட்டணம் தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பு மத்திய நிலைய தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படவேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக பிரதி மின்சக்தி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சவுதியில் குற்றம் புரிந்த இலங்கையர்கள் குறித்து விசாரணை
ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் தொழில்வாய்ப்புகளை இழந்து சவுதி அராபியாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் முன்னர் புரிந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
சவுதியின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது. தொழில்வாய்ப்பை இழந்த இலங்கை பணியாளர்கள் தாம் பணியாற்றிய இடங்களில் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
அந்த விசாரணைகளின் போது குற்றம் புரியாதவர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்கள் மாத்திரம் கட்டம் கட்டமாக தாயகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
சவுதி அராபியாவில் தொழில்புரிவதற்கு அவர்களின் காலஅவகாசத்தை குறிப்பிட்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அந்த கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் அங்கு தங்கியிருப்பது சட்டவிரோதமான செயலாகும்.
அவ்வாறு தொழில் வரையறை காலம் நிறைவடைந்த 6 ஆயிரம் பேர் வரை ஜெட்டா நகர பாலத்தின் கீழ் அண்மையில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதுதவிர, பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஜெட்டா நகர விளையாட்டு அரங்கில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ளவர்கள் ஏற்கனவே தொழில்புரிந்த இடங்களில் பலவித குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவர்களுக்கு சவுதி அராபிய அராசாங்கத்தால் வழங்கப்படும் மன்னிப்பு காலம் பயன்தராது என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாழ்க்கைச் செலவு விலை சுட்டெண்ணை அறிவிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை
எதிர்வரும் தொழிலாளர் தினத்திற்கு முன்னதாக வாழ்க்கைச் செலவு விலை சுட்டெண்ணை வர்த்தமானியில் அறிவிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கோரியுள்ளது.
எதிர்க்கட்சியின் தேசிய சேவையாளர் சங்கத்தினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயலத் ஜயவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தாம் இதுபற்றி தொழில் அமைச்சரிடம் வினவிய போது அது தமக்கு உரித்தான விடயம் அல்லவென்று அவர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சுமத்தினார்.
பின்னர் நிதியமைச்சிடம் சென்று வாழ்க்கை செலவு விலை சுட்டெண்ணை வெளியிடுமாறு கோரினால், மாற்று கருத்தாக, தொழில் அமைச்சிடம் சென்று கோருமாறு தெரிவிக்கின்றனர்.
வாழ்க்கை செலவு விலை சுட்டெண் முன்னரை விட தற்போது வர்த்தமானியில் அறிவிக்க வேண்டியது கட்டாயமாக கருதப்படுகிறது.
தொழிலாளர் தினம் அண்மிக்கும் நிலையில், தற்போது தாங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கை செலவை நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
அதேவேளை, தொழில் புரியும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கைவைக்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளை சந்தனம் என்று பயிரடப்பட்டவை கொக்கேன் போதைப் பொருளை உருவாக்கும் மூலப் பொருள்
மாத்தறைப் பகுதியில் வெள்ளை சந்தனம் என்று கருதி பயிரடப்பட்டவை, கொக்கேன் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் ‘கொகா சாக’ என்ற பொருள் என்று கூறப்படுகிறது.
ருகுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் அறியக்கிடைத்துள்ளது. மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீட்டுப்பயிராக இந்த மரங்கள் பயிரடப்பட்டிருந்தன.
எனினும் இவை கொக்கேய்ன் என்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதனை அழித்துவிட நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten