தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

அவலங்களின் அத்தியாயங்கள்- 61-ஈழத்தமிழருக்கும் அவர்கள் போராட்ட்டத்திற்கும் புலிகள் அடித்த முதலாவது சாவுமணி!


இந்தியா மீது புலிகள் தொடுத்த முதலாவது யுத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 61) – நிராஜ் டேவிட்
இந்திய அரசிற்கும், இந்தியப் படைகளுக்கும் எதிராக விடுதலைப் புலிகள் தமது முதலாவது யுத்தத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் அந்த யுத்தம் போராயுதங்களைக் கொண்டு நடாத்தப்பட்ட ஒரு யுத்தமல்ல.
முழுக்க முழுக்க அகிம்சை என்னும் ஆயுதத்தைக் கொண்டே புலிகள் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஆரம்பித்திருந்தார்கள்.
எந்த அகிம்சை ஆயுதத்தை தமது கைகளில் எடுத்து மகாத்மா காந்தியும், காங்கிரஸ{ம் வெள்ளையர்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்டிருந்தார்களோ, எந்த சாத்வீகப் போராட்டம் என்கின்ற தமது ஆயுதம் பற்றி இந்தியர்கள் உலக மட்டத்தில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அதே அகிம்சை ஆயுதத்தின் மூலமே இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று விடுதலைப் புலிகள் தீர்மானித்தார்கள்.
இந்தியப்படை வெயியேறவேண்டும்
இந்தியப் படைகள் ஸ்ரீலங்காப் படைகளுக்கு சார்பாக நடந்துகொள்வதாக பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களின் வெளிப்பாடு, பலவிதமான போராட்டங்கள் வாயிலாக வெளிக்காண்பிக்கப்பட்டன. 
யாழ்ப்பாணத்தில், இந்தியப் படை முகாம்களுக்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களையும், அமைதிப் பேரணிகளையும் மேற்கொண்டு, இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பான தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
யாழ்ப்பாண கோட்டையினுள் உள்ள இந்தியப்படை முகாமுக்கு முன்பாக, இந்தியப் படையினருக்கு எதிரான ஒரு மறியல் போராட்டம் நடைபெற்றது. யாழ் பொது அமைப்புக்களும், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த மறியல் போராட்டத்தின் இறுதியில், விடுதலைப் புலிகளின் யாழ் அரசியல் பொறுப்பாளர் திலீபன் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், இந்தியாவிற்கு எதிரான புலிகளின் குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில்,
இந்த யாழ் கோட்டையிலே சில காலங்களின் முன்பதாக தமிழனின் கொடி பறந்தது. அந்தக் கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும், ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயரும் பறித்தெடுத்தனர். ஆங்கிலேயரிடம் இருந்து சிங்களவர் கைப்பற்றிய இந்த கொடியை, இன்று இந்தியர்கள் கைப்பற்றியுள்ளார்கள். இந்தக் கோட்டையில் தமிழ்க் கொடி, புலிக்கொடி பறக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
எங்கள் விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கவே இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியப்படையும் வந்து சேர்ந்தது.
எமது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். இந்தக் கோட்டையிலே தமிழர்களின் சுதந்திரக் கொடி, புலிக்கொடி பறக்கவேண்டும் என்று திலீபன் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
இந்தியப்படை தமிழ் மண்ணை விட்டு வெளியேறவேண்டும் என்ற புலிகளின் நிலைப்பாட்டை, புலிகள் பகிரங்கமாக அறிவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகள் இந்தியத் தூதரிடம் விடுத்த கோரிக்கைகள்:
13.09.1987 ம் திகதி, விடுதலைப் புலிகள் முக்கியமான ஐந்து கோரிக்கைகளை, இந்தியத் தூதருக்கு அனுப்பி வைத்தார்கள்.
(அ) தமிழ் மண்ணில் இருந்து சிங்கள இராணுவம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
(ஆ) மணலாற்றில் முடுக்கி விடப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தடுத்து  நிறுத்தப்பட வேண்டும்.
(இ) வடகிழக்கில் இடைக்கால ஆட்சி அமையுமட்டும் சகல மீளமைப்பு வேலைகள் நிறுத்தப் படவேண்டும்.
(ஈ) தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களவர்களைக் கொண்ட காவல்துறை திறக்கப்படுவது நிறுத்தப் படவேண்டும்.
(உ)அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இந்தியத் தூதுவருக்கு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த விடுதலைப் புலிகள், 24 மணி நேரத்திற்குள் இந்தியா தனது பதிலை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்கள். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்தியா தயங்கினால், சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தாம் மேற்கொள்ளப்போவதாகவும் புலிகள் அறிவித்திருந்தார்கள்.
புலிகள் விடயத்தில் எப்பொழுதுமே ஒருவித மேலாதிக்க மனப்பான்மையுடன் நடந்துகொண்டுவந்த இந்தியத் தூதுவர் தீக்ஷித், புலிகள் தன்னை மிரட்ட எத்தனிப்பதாக நினைத்தார். ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியத் துருப்புகள் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த நிலையில் புலிகள் வீணான மிரட்டல்களை விடுத்து வருவதாகவே அவர் நினைத்தார். புலிகளால் பெரிதாக எதுவும் செய்துவிடமுடியாது என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், புலிகள் விடுத்திருந்த கோரிக்கைகள் பற்றி அவர் அலட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் புலிகள் தாம் அறிவித்தபடி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள்.
விடுதலைப் புலிகளின் யாழ்பாண அரசியல் பொறுப்பாளர் திலீபன், சாகும் வரையிலான தனது உண்ணாவிரதத்தை 15.07.1987ம் திகதி காலை 9.45 இற்கு ஆரம்பித்தார்.
யாழ் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டு மையம் என்று கருதப்படுகின்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்பு, திலீபனின் வரலாற்றுப் புகழ்மிக்க அந்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
திலீபனின் ஒப்பற்ற தியாகம்:
இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியாவின் விருந்தாளியாக புதுடில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும், அங்கு புதுடில்லியில் அவர் சிறை வைக்கப்பட்ட போதும், திலீபனும் உடனிருந்தார். புதுடில்லியில் புலிகளின் தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானகரமான சம்பங்கள் பற்றிய அனுபவத்தை திலீபனும் பெற்றிருந்தார்.
அங்கு இந்தியத் தலைவர் ராஜீவ் காந்திக்கும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த எழுதப்படாத ஒப்பந்தங்கள் போன்றனவற்றின் விபரங்கள் அனைத்துமே திலீபனுக்கு தெரிந்திருந்தது.
அதனால் நடைமுறையில் புலிகளை ஏமாற்றும் விதமாக இந்தியா நடக்க ஆரம்பித்தபோது, திலீபன் மிகவும் கோபம் அடைந்தார்.
இந்தியாவின் உண்மையான முகத்தை தமிழ் மக்களுக்கும், உலகிற்கும் தோலுரித்துக் காட்டவேண்டும் என்று அவர் நினைத்தார். அந்த நோக்கத்திற்காக தன்னை மாய்த்துக்கொள்ளவும் அவர் துணிந்தார்.
உலகின் மிகப் பெரும் மக்களாட்சி நடைபெறும் நாடு என்று மார்தட்டிக்கொண்டிருக்கும் இந்தியாவிடம் நீதிகேட்டு போராட தனி மனிதனாக புறப்பட்ட திலீபன், அகிம்சையையே தனது ஆயுதமாகத் தரித்துக்கொண்டதானது, இந்தியாவிற்கு, சர்வதேச அரங்கில் மிகப் பெரிய தலைகுணிவை ஏற்படுத்தியதாக அமைந்தது. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்றதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியா, திலீபன் என்ற தமிழ் இளைஞனின் அகிம்சைப் போராட்டத்தை தனது ஆணவத்தால் சிதைத்துவிட்டதை தனது சரித்திரத்தில் வெட்கத்துடன் பதித்துக்கொண்டது.
இந்தியா என்ற மாயையில் அதுவரை சிக்கிக்கிடந்த பல ஈழத் தமிழர்களுக்கு, இந்தியாவின் உண்மையான நோக்கத்தையும், நிலைப்பாட்டையும் வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாக திலீபனின் இந்த உண்ணாவிரதப் போராட்டமும். அவரது ~தற்கொடையும்| அமைந்திருந்தது.
தமிழ் இனத்தின் ஆண்மாவை, திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொட்டிருந்தது. அந்த இளைஞனின் ஒப்பற்ற தியாகம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தெளிவையும், உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது.
திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமானது, ஒரு பொது நலனுக்காக தனியொருவன் தன்னை உதிர்த்த ஒப்பற்ற தியாகம். தனது இனம் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழவேண்டும் என்பதற்காக, வீரம் மிக்க ஒரு இளைஞன் தனக்குத் தானே மரணதண்டனை வழங்கும் ஒரு உயர் கொடை@ தன்னைத்தானே சிலுவையில் அறைந்த ஒப்பற்ற அர்ப்பணிப்பு.
திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தில் இடம்பெற்ற முக்கியமான சில விடங்களை அடுத்தவாரம் முதல் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்...
nirajdavid@bluewin.ch
தொடர்புபட்ட காணொளி:

Geen opmerkingen:

Een reactie posten