தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

'சித்திரா பௌர்ணமி'- தமிழ்த் தாயே எங்களை அழைத்திடு தாயே - குகதாசன்!


தெய்வம்.- குரு- பிதா- மாதா – இதென்ன 'தலைகீழ் பிரமிட்' எனப் பலரும் சிந்திக்கலாம். அபிப்பிராயம் மற்றும் தகவற் கல்வியூகம் போன்ற கண்களால் பார்ப்பதற்கும், அறிவு , ஞானம் ஆகிய கண்களை உபயோகித்து பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசந் தான் இதுவோ?
அதிக தூரம் போவானேன்? பாரதிராஜாவின் வேதம் புதிதில் நாங்கள் பிறந்தவுடன் எங்கள் தாயைக் காண்கிறோம், தாய் காட்டி தந்தையை அறிகிறோம். தந்தையோ நம்மை அழைத்துச் சென்று குருவைக் காட்டி விடுகிறார். குரு தான் இறைவனாகிய தெய்வத்தை காட்ட முயற்சிக்கின்றார். என்று ஒரு இடம் வருகிறது. எனவே தெய்வமே உயர்ந்தது என்று மாதா பிதா குரு தெய்வத்திற்கு விளக்கம் கொடுக்கிறான் அந்த அந்தணப் பையன்.
எதையுமே ஏறு வரிசையிற் தான் நம்மவர் பார்பப்து வழக்கம். அதனால் சித்திரைப் பெளர்ணமி பற்றியும் அன்று துதிக்கப்படும் தாயை உயர்வாகக் சித்தரித்துக் காட்ட மாதா பிதா குரு தெய்வம் என்பதை தெய்வம் குரு பிதா மாதா என மாற்ற வேண்டியேற்பட்டது.
சர்வதேச நாடுகளையும் அரசுகளையும் தங்களது பாமரப் பார்வையை வைத்துக் கொண்டு அமெரிக்காவையும் மேற்குலகையும் ஏசித் தீர்க்கும் புலம்பெயர் மற்றும் ஈழ, தமிழக தமிழ் அரசியல் ஞான கட்டுரையாளர்களிற்கும், எதிர்காலத் தேசிய நலன்கள், சமகாலத் தேவைகள் என்ற இரண்டு கண்களை மட்டும் உள்ள உலக நாடுகளின் சிந்தனைப் போக்கையும் அவர்களின் பார்வையையும் எதிர்பார்ப்புகளையும் புரியாத எங்களின் பாமரப் பார்வைகளிற்கும் , அரச தந்திர ஞான நோக்கிற்கும் உள்ள வேறுபாடும் இப்படித் தான் தலை கீழானதாகத் தொடர்கிறது.
ஆனால் இவைகளை எழுதுபவர்களின் புனை பெயர்களோ ஞானம், சாணக்கியம், போன்ற ராஜ . அரச போன்ற பதங்களை தவறாது உள்ளடக்கிக் கொள்கின்றன.
குருடனால் யானையைக் பார்க்கவும் முடியாது, குருடனிற்கு யானையைக் காட்டவும் முடியாது ஆனால் புலம்பெயர் தமிழர் மத்தியில் குருடர்களே யானையைத் தடவிக் கூடிப் பார்க்காமல் தாங்கள் விரும்பியவாறு, தங்களின் தேவைப்படி உலக நாடுகள் சுழல வேண்டும் என எதிர்பார்ப்பதோடு அதனை எழுதித் தள்ளிக் கொட்டுகிறார்கள். மறுபுறத்தில் அரசியலையே கைவராத கொம்பியூட்டர்க் கரங்களோ மின் கணனிப் பத்திரிகைப் பக்கங்களை நிரப்பி வருகின்றன.
ஒரு குருடனை யானை ழுமுவதும் தடவிப் பார்க்க விட்டு, அவனிற்கும் ஆர்வமும் விவேகமும், நேரமும் இருந்தால், பக்குவமாக யானையை உருவகிக்க யாராவது கண்ணியமான குரு வாய்த்தால், அவனால் அதைப் பார்க்க முடியாத போதும் உணர இயலும்.
இதற்கான விழிப்பும் அதனைத் தொடரந்து இராஜதந்திர விழிப்புணர்ச்சியுமே நமது 'முழு' இனத்திற்குமான இன்றைய தேவை என்பதற்கான சான்றே முள்ளிவாய்க்கால் இன அழிப்பாகும். தோற்பது வேறு. தோற்கடிக்கப்படுவது வேறு, அநியாயமாக அழிபடுவது வேறு. நிற்க!
சித்திரை வருடப் பிறப்பன்று என்னுடன் அங்கு கடமையாற்றிய ஒரு அன்பரைக் கோயிலிற் கண்டேன். சுற்றிக் கும்பிடும் போது இரண்டு தடவைகள் கண்டும் அவர் புன்முறுவல் கூடப் பூக்கவில்லை. புத்திரிகைகளில் பகுத்தறிவு, வரலாறு எனப் பலதையும் எழுதிவிட்டு, தற்போது ஓய்ந்து விட்டவர் அவர். எனது மூன்று சுற்றும் முடிந்து விட்ட போதும் அவரது சுற்றுக்கள் முடிந்த பாடில்லை.
ஆலயம் என்றும் பார்க்காமல் , அங்கொரு கண்ணையும் இங்கொரு கண்ணையும் சுழல விட்ட போது, அவர் நவக்கிரகங்களை மணிக்கூடு சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் சுற்றியதைக் கண்டேன். ஓ! இராகு, கேதுக்கள் சூரியனை அந்தத் திசையில் சுற்றுவதால் இரண்டு தடவைகள் 'தலைகீழ்ச் கூற்று'  இடம் பெறுகிறதாக்கும் என எண்ணிய போது சிரிப்பு வந்தது. இதனைக் கவனித்த குருக்கள் ' என்ன தம்பி இப்ப ராகுவும், குருவும் 12ல் உள்ளதால் உயிரைத் தவிர எல்லாமே போயிருக்குமே! என்ற படி விரைந்து கடந்து மூலஸ்தானத்திற்கு சென்றார்.
இல்லை. என்ற நான் ஒரு ஆளிற்காகக் காத்திருப்பதாகச் சொன்னேன். ஒரு நமட்டுச் சிரிப்புடன் திரைக்குள் மறைந்து விட்டார் அவர். நான் என்னை விட வயதான அண்ணரிற்காக காத்திருப்பதை காணும் சாதாரண பார்வை அவரிடமில்லை. கவிஞர் வைரமுத்து ஒரு விழா மண்டபத்தால் வெளியே வந்த போது, கே எஸ் கோபாலகிருஸ்னன் வாயிலில் நின்று கொண்டிருந்தாராம். யாருக்காகக் காத்திருக்கிறீர்கள் என்று கவிஞர் வைரமுத்துக் கேட்டதிற்கு ' காரிற்கும் றைவரிற்கும் காத்திருக்கிறேன் 'என்று பதிலளித்தராம் அந்த பழம் பெரும் பட இயக்குனர்.
சரி உங்கள் கார் நம்பரைச் சொல்லுங்கள் கண்டுபிடித்து வரச் சொல்லி விடுகிறேன் என்று கேட்டாராம் இளங்கவிஞர். வயதான அவரோ அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று நிறத்தை மட்டும் சொன்னாராம் இயக்குனர். கவிஞர் வைரமுத்துவே இதனை ஒரு இடத்தில் சுட்டி எழுதியுள்ளார்.
எதையாவது எப்பவுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களின் கதி இது தான். ஆனால் இங்குள்ள குறைபாடு பாமரப் பார்வையின்மையே. இந்த உலகில் செல்வந்தர்களிற்கும் வறியவர்களிற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாகவும், அது ஒரு மாபெரும் சமூகக் கொடுமை என்றும் கொக்கரிக்கிறார்கள்.
இந்த உலக சர்வதேச ராஜீகப் பார்வைக்கான முனைப்பின்மைக்கும், நமது கொள்கை வாத இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட தேவைப் பார்வைக்கும் உள்ள இடைவெளி இருப்பதை இனங் காணாமலே நமது புலம்பெயர் அரசியற் பயணம் தொடர்கிறது. முள்ளிவாயக்காலுள் உச்சரிக்கப்பட்ட 'இராஜதந்திர வழிகளில்..... ' என்பதற்கும் வரையறை இல்லாததால் நமது புலம் பெயர் இடப்பெயர்வுப் பயணம் தொடர்கிறது. பாமரத் தன்மைக்கும் சிந்தனைத் தேடலிற்கும் உள்ள தமிழ் இன இடைவெளி குறைய வேண்டும்.
சந்திப்பு வருவது கண்டு சிலர் சிந்திக்கும் இடங்களும் உண்டு. நாங்களோ முள்ளிவாய்க்காலிற்கு பின்பும், ஒரு கணமாவது கண்களை மூடி அந்த அரசியல் ஞான, இராஜதந்திர விழிப்பை பெற முயல்வதாக இல்லை. எதுவித மாற்றமும் அற்ற அதே பழைய பாணியை, பாதையை கொள்கைப் பிடிப்பு, இலட்சியத்தை கைவிடாமை வீரம் என நம்பிக் கொண்டு மார்பில் குண்டேந்தி அழியத் துணிவுடன் முன்னேறுகிறோம்.
அறிஞர் அண்ணா காலத்தில் அறிவாலயத்துள் தஞ்சம் புகுந்திருந்த நம் 'தமிழ்த் தாய்' நமது வன்னியானது, கன்னிகள் கூட நடுநிசி இரவில் தனியாக நடுக் காட்டிற்கு ஊடாகவும் போகக் கூடிய அரசை அமைத்திருந்த புலிகள் காலத்தில், வன்னிக்கு புலம் பெயர்ந்திருந்தான். ஆனால் புலிகளை அழித்த பின்பு, இன்றளவில், தெருவால் கற்கக் கூட கன்னிகள் பட்டப் பகலில் செல்ல முடியாதென யாழ் மாநகர மேயரிடம் முறைப்பாடு போயுள்ளதாம். நிற்க!!
இது எனது இரண்டாவது நிற்க ஆகிறது. காரணம் நமது தமிழ் இனம் கற்க வேண்டிய சகலதையும் கசடு அறக் கற்காமல் எஞ்சினியர் டாக்டர் தொழில்களை மட்டும் கற்ற இனமாக இருப்பதே. கற்க வேண்டிய அரசியல், ராஜீகம், ஊடகத் துறை, தொடர்பாடல், அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைச் சட்டங்கள், பொருளியல் போர்க் குற்றச் சட்டங்களை எல்லாம் நாம் அன்று நாடவும் இல்லை என்பதோடு இன்றளவில்த் தேடவும் இல்லை என்பதே உண்மை. கற்க வேண்டியவற்றை ஐயந் திரிபற இனியாவது கற்போமாக! அவற்றைக் கற்ற பின் அதற்கு தகுந்த மாதிரி நிற்போமாக! இது மூன்றாவது நிற்க!!!
அவளும் அதாவது எங்கள் தமிழ்த் தாயும், முள்ளிவாய்க்கால் கூற்றி வளைப்பிற்குள் அகப்பட்டாளா? இல்லையா என்று தெரியவில்லை. இதனால் சித்திரைப் பெளர்ணமி தினத்தில், அவளிற்கும் துதி செய்வதா இல்லையா என முடிவு எடுக்க இயலாதுள்ளது. ஆக, தமிழ் இனமே ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்களா இல்லையா என்பது கூடத் தெரியாமல் வாழ்வதே இங்கு ஞாபகத்திற்கு வருகிற அம்சமாகும்.
தமிழர்கள் பலரைக் காணவில்லை. அவர்கள் உடல்களையும் காணவில்லை. தகவல்கள் தடயங்கள் எதுவுமேயில்லை. எங்கள் தமி;ழ்த் தாயையும் காணவில்லை. அவள் வருவாளா? மாட்டாளா? என்ற கேள்வியையும் நாங்களே கேட்டு அவள் வருவாளே சுகம் தருவாளே என்று விஸ்வநாதன் குரலில் ஆசையை பாடி முடிக்கிறோம். அவள் வராள் என்று தெரிந்தும் ..... நமது விருப்பம் காரணமாக அவள் வருவாள் என எங்களையே தேற்றி தொடர்ந்தும் நாமே எங்களை ஏமாற்றுகிறோம்.
சிஙகளமும் இந்தியாவும் உலகமும் ஏமாற்றியது முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விட்டது. அந்த முடிவு கிட்டியவுடனேயே நமமவர் ஏமாற்று தொடங்கியது. கிரடிற் காட்டில் அடித்து கொடுத்தவர்கள் அந்தக் காசில் எழுந்த கட்டிடங்களிற்குள்ளும், கடைகளிற்கும் சென்று வருகிறார்கள். இதனைத் துக்கம் என்பதா ? ஆழ்ந்த தூக்கம் என்பதா ? என்பதை விட இன உணர்வற்ற சுய நலம் என்று தான் கணிக்க வேண்டியுள்ளது.
ஒரு மட்டத்திற்கு மேலே கற்று உணர்ந்தவர்கள் யாருடனும் அதிகம் பேசாதிருப்பதைக் கண்டிருப்பீர்கள். இப்படி நம்மவர் பலர் இன அரசியலில் இருந்து சுதந்திரமுள்ள வெளிநாடுகளிலும் ஒதுங்கி இருப்பபதற்கு தொடரும் குழுக்கள் தான் காரணமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இலட்சியத்தை சென்றடையும் வழி வகைகள், எதையும் சொல்லாமல், தடைகளையும் தவிர்க்காமல், காண்போம் ஈழம் என்றால் அங்கு கூட்டம் சேருகிறது. வாருங்கள் கலந்து ஆலோசித்து என்ன செய்ய வேண்டும் என ஆராய்வோம் என்றால் கூட்டமே ரத்தாகிறது.
உலகாண்ட தமிழ்த் தாய்க்கு இன்று தங்குவதற்கு ஒரு சதுர அடி நிலம் கூட சொந்தமாக இல்லை. தமிழகத்தைக் கூட யாரோ கட்டியாள்கிறார்கள். தமிழ்த் தாய் எங்கே? போவாள்?? நாங்களோ எங்கள் தமிழ்த் தாயைப் பற்றிக் கவலைப்படாத தனயர்களாக தாயைக் காக்கவும் முடியாதவர்களாக வாழ்கிறோம். காரணம் நம்மிடம் சம கால சர்வதேச அரசியலிற்கும் ராஜீகத்திற்கும் வேண்டிய அரச துறை, ஐ நா த்துறை அறிவற்றவர்களாக என்ன செய்து நீதியையாவது கேட்கலாம் என்பதைக் கூடத் தெரிhயது ராஜீகப் பாமரர்களாக உலகெலாம் வலம் வருகிறோம்.
உண்மையைச் சொன்னால் தங்கள் தங்கள் சொந்த அபிப்பிராயங்களுடன் வாழ்பவர்களே நம்முள் அதிகம்.
அதியுயர் தொழில் நுட்ப வளர்ச்சியும், அதன் நூதன கருவிகளின் பயன்பாடுகளும் தெய்வ நம்பிக்கையைக் குறைத்து விட்டன. குரு என்று போற்றுதற்குரிய காலமும் மலையேறி விட்டது.
பிதாக்களுடன் எல்லாப் பிள்ளைகளும் வாழாத ஒரு உலகாக மேற்குலகு மாறியும் வருகிறது.
ஆனால் தாயை அறியாத நேசிக்காத பிள்ளைகளைக் காணவே இயலாது. அவள் எந்த நிறத்தவளானாலும் சரி, எந்த இனத்தவளானாலும் சரி அம்மா அம்மாவாகவே இருக்கிறாள்.
இந்த மானிடரை விட்டு விலங்குகளைப் பார்த்தாலும் அந்த அம்மாக்களும் அன்புடனே ஆதரிக்கும் தெய்வங்களாகவே உள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten