தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

ஐபிஎல் கிரிக்கெட்- இலங்கை வீரர்கள் விவகாரம்! போராட்டக்காரர்களை வேவு பார்க்க வைத்தது யார்? - தினமணி !


சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திய தனித் தமிழீழ ஆதரவு அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் நிர்வாகிகள் தொடர்பாக ஒரு தனியார் புலனாய்வு அமைப்பு தகவல் சேகரித்ததுடன்,....
....இந்த நிர்வாகிகளின் தொலைபேசி உரையாடல்களையும் ரகசியமாக ஒட்டுக்கேட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் தமிழ்நாடு காவல்துறை ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த தனியார் புலனாய்வு அமைப்பின் அதிகாரி கோர்க்கி சந்தோலா என்பவர் மீது மட்டும்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதே தவிர, அந்தத் தனியார் நிறுவனத்தை இப்பணியில் ஈடுபடுத்திய நிறுவனம் - ஐ.பி.எல். என்று புகாரில் கூறப்படும் நிலையில், ஏன் ஐ.பி.எல். மீதும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
ஒருவேளை, இந்தப் போராட்டக்காரர்கள் மீது வேவு பார்க்கும் பணியை இந்தத் தனியார் புலனாய்வு நிறுவனத்திடம் கொடுத்தது ஐ.பி.எல். நிறுவனம் அல்ல என்றோ, அதற்கு நேரடித் தொடர்பு இல்லை என்றோ கூறப்படுமேயானால், இந்த வேலையில் அந்தத் தனியார் நிறுவனத்தை அமர்த்திய நபர் அல்லது நிறுவனம் எது?
தமிழ்நாட்டில் அரசுக்கு எதிராக அல்லது மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பவர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து மேலதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பது மாநிலக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவின் கடமை.
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது என்று இந்த நுண்ணறிவுப் பிரிவு விரும்பினால், அதைச் சட்டப்படி செய்ய முடியும். இந்த இரகசிய அறிக்கைகள் முழுமையாக மேலதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அது ரகசிய அறிக்கை என்றாலும்கூட, பணம் படைத்தவர்கள், அரசியல் கட்சித் தலைமைகளுக்கு இந்த அறிக்கைகள் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
தற்போது, ஐ.பி.எல். சார்பில் தகவல் சேகரிக்க ஒரு தனியார் புலனாய்வு நிறுவனம் பணியில் அமர்த்தப்பட்டது என்கின்ற இரகசியம் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் புகழேந்திக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்று கருதினால், அதைவிட மடமை வேறொன்றும் இல்லை.
இந்த விவகாரம் காவல்துறைக்குத் தெரியாமல் இருந்திருக்காது. இது குறித்துக் காவல்துறையின் இரகசிய அறிக்கை வெளியே கசிந்திருக்கிறது என்பதுதான் இதன் பின்னணியாக இருந்திருக்க முடியும். காவல்துறையைச் சேர்ந்த சிலரால் வெளியில் தெரியாமல் மறைக்கப் பார்த்த இரகசியம் எப்படியோ வெளியாகி விட்டிருக்கிறது என்று கருத நிறையவே வாய்ப்பிருக்கிறது.
கிரிக்கெட் போட்டிக்கு எதிரானவர்களை வேவு பார்க்கும் பணி என்பதால், ஐ.பி.எல். தனது சொந்தச் செலவில் இந்த வேவு பார்க்கும் பணியில் இந்த நிறுவனத்தை அமர்த்தியிருக்கலாம், அல்லது இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்படும் அணியைச் சேர்ந்தவர்களும் இந்தப் வேவுப் பணியை அளித்திருக்கலாம், அல்லது இந்தத் தனியார் நிறுவனத்துக்கு இப்பணியை வழங்கியது இலங்கை அரசாகவும்கூட இருக்கலாம்.
இன்றைய செல்போன் தகவல் தொடர்பு என்பது தனியாரிடம் இருக்கிறது. இந்த செல்போன் நிறுவனங்களும் ஐ.பி.எல். போட்டிகளில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவர்களும்கூட, இத்தகைய வேவுபார்க்கும் வேலைக்கு தங்கள் செல்போன் நிறுவனங்கள் மூலம் உதவி செய்ய மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
தனியார் புலனாய்வு அமைப்புகள் இந்தியாவின் எல்லா நகரங்களிலும் செயல்படுகின்றன. இந்நிறுவனங்கள் உலக அளவிலான அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளையும் கொண்டிருக்கின்றன. கணினித் தொழில்நுட்பத்தில் மிகச் சிறந்த நிபுணர்களை வைத்து, பல இணையதள மின்னஞ்சல்களையே கூடப் பிரித்துப் படிக்கும் அளவுக்கு இவர்கள் திறம் படைத்தவர்கள்.
வழக்குரைஞர் புகழேந்தி தொடுத்திருக்கும் இந்த வழக்கு, போராட்டக்காரர்களின் விவரங்களை ஏதோ ஒரு உளவு நிறுவனம் வேவு பார்த்தது என்கின்ற அச்சத்தால் அல்ல, தமிழகத்தின் போராட்டத்தை யார் வேண்டுமானாலும், விதிகளை மீறி, துல்லியமாக உளவு பார்க்க முடியும் என்பதை அம்பலப்படுத்தத்தான். அந்த வகையில் இந்தப் புகாருக்கு முதல் வெற்றி கிடைத்துவிட்டது.
இந்த அளவுக்கு நவீனக் கருவிகளைப் பயன்படுத்தவும், தனியாரை வேவு பார்க்கவும் தனியார் புலனாய்வு நிறுவனங்களை அனுமதித்ததே பெருந்தவறு என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
தனியார் புலனாய்வு நிறுவனங்கள் எந்தெந்த பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைகள் இல்லாதது அல்லது எந்த நிபந்தனைக்கும் கட்டுப்படாமல் மீறி நடப்பது ஒரு நாள் இந்திய இறையாண்மைக்கே எதிராகத் திரும்பக்கூடும் என்பதற்கான முன்னெச்சரிக்கைதான் இந்தச் சம்பவம்.
வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்போன் இணைப்பு பெறுவது என்று தொடங்கி, ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பொதுச்சந்தைகளில் "டேட்டா பேஸ்' என்கிற பெயருடன் விற்பனைக்கு வராத குறை. நாம் எங்கே எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையும், யாரிடம் என்ன பேசுகிறோம் என்பதையும் நமது கையில் வைத்திருக்கும் செல்போன் தெரிவித்துக்கொண்டே இருக்கிறது.
பெரிய தொழில் நிறுவனங்களும் தொழில் அதிபர்களும் வங்கிகளில் எவ்வளவு கடன் வாங்கினார்கள், திருப்பித் தராமல் இருக்கிறார்கள் என்பது இரகசியம். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் இரகசியம். ஐ.பி.எல். போட்டியில் அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பெறும் பல கோடி ரூபாய் லாபம் இரகசியம்.
இப்படிப்பட்டவர்களின் கையில் ஆட்சியும், அதிகாரமும், அரசியலும் இருக்கும்போது, நமது படுக்கை அறைகளை வேவு பார்க்காமல் இருக்க வேண்டுமே என்று நாம் இறைவனை இறைஞ்சுவதுதான் ஒரே வழி!

Geen opmerkingen:

Een reactie posten