சிறுபான்மைத் தமிழர்களின் மனக்குறைகள் தீர்க்கப்படாமல் போனாலோ, போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படாது போனாலோ, நாட்டில் இன்னொரு மோதல் வெடிக்கக் கூடும் என்று அமெரிக்கத் தூதர் மைக்கல் ஜே சிசன் கடந்த வாரம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுபோன்ற எச்சரிக்கை அமெரிக்காவிடமிருந்து விடுக்கப்படுவது இதுதான் முதல் முறை என்றில்லை.
ஏற்கனவே இதே கருத்தை அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் பலமுறை வலியுறுத்தியுள்ளார்.
எனினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்கத் தூதுவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைக்கு சர்வதேச அளவில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் அவர் நிகழ்த்திய இந்த உரை, இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையை வெளிப்படுத்தும் வகையிலும், அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கான பதிலை அளிப்பதாகவும் அமைந்திருந்தது.
வழக்கமாக, அமெரிக்க இராஜதந்திரிகள் மறைமுகமாகவே கருத்து வெளியிடுவர். அதாவது ஒரு விடயத்தை நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக எச்சரிப்பது அவர்களின் பாணியாக இருக்கும்.
ஆனால், அமெரிக்கத் தூதுவரின் இந்த உரை அப்பட்டமான உண்மைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது சற்று வித்தியாசமானது.
இலங்கையிடமிருந்து அமெரிக்கா எதனை எதிர்பார்க்கிறது என்பதை மிகவும் நோ்த்தியாக வெளிப்படுத்தியுள்ளது இந்த உரை.
அமெரிக்க இராஜதந்திரிகளின் சொல்லாடல்கள் பல வேளைகளில் பலருக்கு மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.
ஆனால் மைக்கல் ஜே சிசனின் இந்த உரையில் அத்தகைய சொல்லாடல் மயக்கத்தைக் காணவில்லை.
அதுமட்டுமன்றி, ஜெனிவா தீர்மானத்துக்கமைய இலங்கை நடந்து கொள்ளத் தவறினால், அடுத்து அமெரிக்கா என்ன செய்யும் என்ற கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்..
இதுதான் மிக முக்கியமான விடயம்.
அடுத்த கட்டம் என்பது இலங்கை அரசின் கைகளில் தான் உள்ளது என்பதை தெளிவாகக் கூறியுள்ள அதே நேரத்தில், அமெரிக்காவின் தெரிவு என்னவாக இருக்கும் என்பதையும் அவர் கூறத் தயங்கவில்லை.
கடந்த பெப்ரவரி 13ம் திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்துலக சுதந்திர விசாரணைப் பொறிமுறை பற்றிய நீண்டகால பரிந்துரை குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளதைச சுட்டிக்காட்டியுள்ளார்.
இது கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்தகட்ட நடைமுறைகள் குறித்து ஆராயும் போது, ஐநா மனித உரிமைகள் பேரவை மற்றும் அதற்கும் அப்பால் உள்ள பொறிமுறைகள் குறித்தும் மீளாய்வு செய்யப்படும் என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால் செல்லவும் அமெரிக்கா தயாராகி வருகிறது என்பதையே அமெரிக்கத் தூதுவரின் இந்தக் கருத்து வெளிப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை அமெரிக்கா இத்தோடு கைவிட்டு விடப் போவதில்லை என்பதும், அதற்கு அப்பாலும் இலங்கை மீதான அழுத்தங்களும், நெருக்கடிகளும் தொடரப் போகின்றன என்பதையும் அமெரிக்கத் தூதுவரின் உரையில் இருந்து வியங்கிக் கொள்ள முடிகிறது.
அதேவேளை, அமெரிக்கத் தூதுவரின் இந்த உரை நிகழ்த்தப்பட்ட மறுநாள், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஜெனிவா தீர்மானத்தை ஏற்பதில்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.
இது பற்றி அமெரிக்காவுடனோ, வேறு எவருடனோ பேசப் போவதில்லை, யாருக்கும் அறிக்கை கொடுக்கவோ, ஆலோசனைகளை ஏற்கவோ போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில வாரங்கள் கழிந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் போக்கை உணர்ந்த அமெரிக்கத் தூதுவரின் இந்தக் கருத்துகள் வெளிப்பட்டுள்ளன.
ஜெனிவா தீர்மானத்தின் உள்ளடக்கம் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்கத் தவறிய போதிலும், அமெரிக்கா இதனை இலகுவானதொன்றாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அமெரிக்கத் தரப்பில் இருந்து அடிக்கடி வெளியான அறிக்கைகள், கருத்துகள்' இதனை உணர்த்துகின்றன.
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அடுத்த சில மணித்தியாலங்களிலேயே அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் இறிக்கை ஒன்று வாசிங்டனில் வெளியிடப்பட்டது.
அதன் பின்னர் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் என்று பல தரப்பிலிருந்தும் அமெரிக்காவின் அறிக்கைகளும், கருத்துகளும் வெளியாகின.
இவை அனைத்திலுமே ஜெனிவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் இல்லாவிட்டால் அடுத்த கட்டம் குறித்த எச்சரிக்கையை கொண்டிருந்தன.
இந்த நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களை இலங்கை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளது போலவே தெரிகிறது.
ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு அப்பால், ஐநா பாதுகாப்புச் சபைக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றால் அங்கே சீனாவும், ரஷ்யாவும் தனக்குக் கைகொடுக்கும் என்ற கணிப்பு இலங்கைக்கு இருக்கிறநது.
இந்த அடிப்படையான இராஜதந்திரக் கணக்கைக் கூடப் போடத் தெரியாமல் அமெரிக்கா இத்தகைய எச்சரிக்கைகளை விடுத்திருக்காது. ஒருபோதும் அமெரிக்கா தானாகச் சென்று தலையில் மோதிக்கொள்ளும் வகையில் முடிவுகளை எடுக்காது என்று உறுதியாக நம்பலாம்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை தீர்'மானத்தை முன்வைப்பதில் அமெரிக்கா காட்டிய கவனத்தில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.
அதிகளவு உறுப்பினர்களின் ஆதரவுக்காக தனது தீர்மானத்தையே அமெரிக்கா நீர்த்துப் போக வைத்தது.
இலங்கைக்கு எதிராக அடுத்த கட்டப் பொறிமுறைகள் பற்றியும் ஆலோசிக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது என்றால், அடுத்த கட்டங்களில் வரக்கூடிய சிக்கல்களை அது சிந்திக்கவில்லை என்று ஒருபோதும் கருத முடியாது.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் தோன்றியுள்ள இராஜதந்திர நெருடல் இப்போது தீவிரமாகும் அறிகுறிகள் தோன்றியுள்ளன.
இந்த இறுக்கமான போக்கை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தினால், இலங்கை என்னதான் செய்ப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.
தொடர்ச்சியான அழுத்தங்களின் ஊடாக இலங்கையை கொஞ்சமேனும் பணிய வைக்கலாம் என்பது தான் அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.
ஆனால் கொஞ்சமேனும் பணிய முடியாது என்பது போலுள்ளது இலங்கையின் நிலை.
இந்த நிலையில் இருதரப்பின் இறுக்கமான நிலைப்பாடும் இலங்கையை மீண்டும் சர்வதேச களத்துக்கு இழுத்துச் செல்லப் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
அந்தக் களம் ஜெனிவாவா அல்லது நியூயோர்க்கா அல்லது ஹேக்கா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten