தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 21 april 2013

தமிழ் மக்களின் காணிகளை சிங்களவர்களுக்கு உரிமையாக்கும் அனுமதிப்பத்திரம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு


நாட்டைப் பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை! செப்டம்பரில் வடமாகாண தேர்தல்!- ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 12:48.11 AM GMT ]
இப்போதும் நாட்டைத் துண்டாடும் எதிர்பார்ப்பிலேயே சில சக்திகள் செயற்படுகின்றன. மீண்டும் இந்த நாட்டைப் பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை. வடமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.
வெலிஓயா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற சிங்கள மக்களுக்கு மகாவலி காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவத்தில்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரிசாட் பதியூதின், குணரத்ன வீரக்கோன், திஸ்ஸ கரலியத்த பிரதியமைச்சர் டபிள்யூ. பி. ஏக்கநாயக்க, எஸ்.எம். சந்ரசேன உட்பட பிரதியமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட
ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்:
வடமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தவுள்ளோம்.
அதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள் தேர்தலை நடத்துவதற்கான வெற்றிகரமான சுபவேளையை நிர்ணயிக்கும் செயற்பாடுகள் இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் வெலிஓயா மக்கள் பட்ட துயரங்களை நாம் அறிவோம். பயங்கரவாத தாக்குதலில் பெருமளவிலான மக்கள் பலியாகியுமுள்ளனர். சிறிபுர, பராக்ரமபுர உட்பட பல பகுதிகள் இரத்தக் காடாகக் காட்சியளித்ததை நாம் காண முடிந்தது.
நாம் நாட்டைப் பாதுகாத்துள்ளோம். பிளவுபட்ட நாட்டை ஒன்றிணைந்துள்ளோம். எல்லைக் கிராமம் என்ற பெயரை இல்லாதொழித்துள்ளோம்.
நாடு பிளவுபடும் உடன்படிக்கையை நாம் கிழித்தெறிந்திரா விட்டால் இன்று எமக்கு நாடு இருந்திருக்காது. நாடு இரண்டாகப் பிளவுபட்டிருக்கும்.
இப்போதும் நாட்டைத் துண்டாடும் எதிர்பார்ப்பிலேயே சில சக்திகள் செயற்படுகின்றன. மீண்டும் இந்த நாட்டைப் பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை.
இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் நிறைவுற்றுள்ளன. இடம்பெயர்ந்து முஸ்லிம், சிங்கள மக்களையும் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்த வருகிறோம்.
சிங்கள மக்கள் அகதி முகாம்களில் வாழவில்லை. அவர்கள் தமது உறவினர்களின் வீடுகளில் வாழ்கின்றனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவது அவசியமாகும்.
நாடு என்ற ரீதியில் கடந்த 4 வருடங்களில் நாம் பல துறைகளையும் கட்டியெழுப் பியுள்ளோம். பல அமைச்சுக்களினூடாக தொடர்ந்தும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மின்சாரக் கட்டணம் உயர்த்தியமை பற்றி எல்லோரும் பேசுகின்றார்கள். சிகரட்டுக்கும் சராயத்திற்கும் விலை அதிகரிக்கும்போது அவற்றின் பாவனை குறைவதில்லை. ஆகவே தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி மக்கள் வாழ வேண்டும்' என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் வெலிஓயா (மணலாறு) பகுதியில் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்கள், தங்களுக்குச் சொந்தமான வயல் காணிகளை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுகோரி நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
1983-ம் ஆண்டில் இராணுவத்தால் வெளியேற்றப்பட்ட இந்தப் பிரதேசத்து மக்களின் வயற்காணிகளில் சிங்கள குடும்பங்கள் தொடர்ச்சியாக விவசாயம் செய்து வருவதாகவும், அந்த மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட போதிலும் தங்களின் காணிகள் மீளவும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
தமிழ் மக்களின் காணிகளை சிங்களவர்களுக்கு உரிமையாக்கும் அனுமதிப்பத்திரம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:11.38 AM GMT ]
மணலாறு பிதேச கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களிலுள்ள தமிழ் விவசாயிகளின் உறுதியுள்ள காணிகளுக்கு நேற்று அரசாங்கம் அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டுகின்றது.
இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது:
இந்தப் பிரதேசங்களில் வசித்த தமிழ் மக்கள் இராணுவத்தினால் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் இங்கு சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன.
இவர்கள் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல்களை அடாவடித்தனமாக கைப்பற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.
அரசாங்கம் நேற்று தமிழ் மக்களின் உறுதியுள்ள காணிகளை சிங்கள மக்களுக்கு உரிமையாக்கும் அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
அரசாங்கமே இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை யாரிடம் முறையிட முடியும்.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அது இழுத்தடிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் விரக்தியின் எல்லைக்கே செல்லும் நிலைதான் உருவாகி வருகின்றது என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten