வலி,வடக்கு மற்றும் கிழக்கில் பொதுமக்களுடைய காணிகளை சுவீகரிப்பதற்கு அறிவுறுத்தல் பிரசுரங்கள் ஒட்டப்படும் நிலையில் குறித்த பிரசுரங்கள் ஒட்டப்படும் காணிளைப் பார்ப்பதற்கு சென்ற தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் யாழ்.சட்டத்தரணிகள் படையினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் தனித்தனியாக காணிகளை பார்வையிட அனுமதியில்லை எனவும் படையினர் கூறியுள்ளனர்
மேற்படி இரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் சுமார் 6381ஏக்கர் காணி படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ள நிலையில் இன்று சுவீகரிக்கப்படவுள்ள காணிளைப் பார்வையிடுவதற்கு காணி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ள நிலையில் முன்னணியினரும், சட்டத்தரணிகளும் திருப்பியனுப்பப்பட்டிருக்கின்றனர்.
நேற்று மாலை 1.30 மணியளவில் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளில் ஒட்டப்பட்டுள்ள பிரசுரங்களையம், சுவீகரிக்கப்படவுள்ள காணிளையும் பார்வையிடுவதற்காக முன்னணியினர் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான சாந்தா அபிமன்னசிங்கம், கு.குருபரன், வி.மணிவண்ணன், பா.பார்த்தீபன், ஜெ.ஜெயரூபன், வி.திருக்குமரன், பவானி பொன்சேகா, மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் சென்று சுவீகரிக்கப்படவுள்ள காணிகளையும், அவற்றில் ஒட்டப்பட்டுள்ள அறிவுறுத்தல் பிரசுரங்களையும் பார்வையிடுவதற்கு வந்துள்ளமை தொடர்பில் உயர்பாதுகாப்பு வலயத்தின் தொடக்க்த்திலுள்ள காவலரணில் கூறியிருந்தனர்.
இதனையடுத்து அங்கு யாருடைய காணியை பார்வையிடப்போகிறீர்கள்? பார்வையிடப்போகும் காணியின் உரிமையாளர் யார்? அவரிடம் அதற்கான உறுதி உள்ளதா? என்றெல்லாம் கேள்வியெழுப்பிய படையினர் காணிக்கான ஆவணத்தை கொண்டுவருமாறு கேட்டனர்.
இதற்கமைய காணியின் உறுதி கொண்டுவரப்பட்டதும், காணிகளை தனித்தனியே பார்வையிட முடியாது எனக்கூறினர்.
பின்னர் சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் 6381ஏக்கரும் காங்கேசன்துறை வீதியின் வலது புறம் உள்ளது. அவற்றை உயர்பாதுகாப்பு வலய வேலிக்கு அருகே இடப்பட்டுள்ள வீதி வழியாகச் வாகனத்தில் சென்று பார்வையிடலாம் மற்றபடி உள்ளே சென்றோ, தனித்தனியாக காணிகளுக்குள் நுழைந்து பார்வையிடவோ முடியாது. அதற்கு அனுமதியில்லை என கூறியதுடன் உள்ளே சென்று தனித்தனியாக பார்க்க அனுமதிக்க முடியாது எனவும்,
ஒட்டப்பட்ட பிரசுரத்தை பார்ப்பதென்றால் உயர்பாதுகாப்பு வலயத்தின் ஆரம்பத்தில் அந்தப் பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது அதை பார்வையிடலாம் எனவும் கூறி முன்னணியினரையும், சட்டத்தரணிகளையும் இராணுவத்தினர் திருப்பியனுப்பினர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னணியின் தலைவர் மற்றும் சட்டத்தரணிகள், எமக்கு நடந்த சம்பவமே மக்களுக்கும் இன்று நடக்கவுள்ளதாக கூறியதுடன், இராணுவம் வெறுமனே பேருந்துகளில் மக்களை ஏற்றி இந்த இடத்திலிருந்து இந்த இடம் வரை காணிகை சுவீகரிக்கப் போகின்றோம் என கூறப்போகின்றார்கள்.
எனவே இது முற்றுமுழுதாக ஒரு ஏமாற்று வேலை மட்டுமே. மக்களை ஏமாற்றி அழைத்துச் சென்று இறுதியில் மக்கள் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளை பார்த்து, சுவீகரிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்தார்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கப் பார்க்கின்றார்கள். எனவே மக்கள் இந்த விடயத்தில் விழிப்பாக இருந்து முற்றுமுழுதாக இந்த சுவீகரிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும், இராணுவத்தினரின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு ஏமாறவேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten