தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 april 2013

போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு உதவிகள், குறி பார்த்து சுடும் போட்டியில் 4 முன்னாள் புலிகள் தெரிவு- சந்திரசிறி கஜதீர!!!!


நில அபகரிப்பிற்கு எதிராக வரும் 24ம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்! த.தே.ம.முன்னணி
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:52.02 PM GMT ]
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட நில அபகரிப்பிற்கு எதிராக எதிர்வரும் 24ம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக த மிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
24ம் திகதி காலை 11மணி தொடக்கம் 1மணிவரை இந்தப் போராட்டத்தை வலி.வடக்கு மற்றும் நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை கொண்டு நடத்தவுள்ளதாக முன்னணி அறிவித்திருக்கின்றது.
இது தொடர்பில் முன்னணி இன்று மாலை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
கடந்த மாதம் சிறீலங்கா அரசாங்கத்தின் காணி அமைச்சர் யாழ்ப்பாணத்தில் காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விசேட அலுவலகம் ஒன்றினை திறந்து வைத்திருந்தார்.
அதன் பின்னராக யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் பல்வேறு படையணிகளுக்காக அலுவலகங்களையும், தளங்களையும் நிரந்தரமாக்குவதற்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்காக காணிச் சுவீகரிப்புச் சட்டத்தில் பிரிவு 2 ன் கீழான அறிவித்தல்கள் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக வலிகாமம் வடக்கு உட்பட குடாநாட்டின் பல பகுதிகளிலுமிருந்து கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் 30,000 ற்கும் அதிகமான மக்கள் நிரந்தரமாக தமது வாழ்விடங்களை இழக்கும் நிலை தோன்றியுள்ளது.
மேற்படி காணிச் சுவீகரிப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெறுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இராணுவக் குறைப்பு நடவடிக்கையில் தாம் ஈடுபடுவது போல பாசாங்கு காட்டிவரும் சிறீலங்கா அரசு மறுபுறத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான நில அபகரிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
இந் நிலச் சுவீகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்தக் கோரியும், இடம்பெயர்ந்து வாழும் வலி. வடக்கு உட்பட்ட அனைத்து மக்களையும் உடன் மீள் குடியமர அனுமதிக்க கோரியும், இவ்விடயத்தில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாகவும் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலி. வடக்கு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களது வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்படி போராட்டம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு உதவிகள், குறி பார்த்து சுடும் போட்டியில் 4 முன்னாள் புலிகள் தெரிவு- சந்திரசிறி கஜதீர
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 03:05.17 PM GMT ]
இறுதி யுத்தத்தில் 12,000 முன்னாள் போராளிகள் படையினரிடம் சரணடைந்து, அவர்களில் 11, 500 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன என அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத வன்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு கொடுப்பனவுகள் வழங்கும் வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் கஜதீர மேற்கண்டவாறு கூறினார்.
இந்த வைபவம் மட்டக்களப்பு தேவா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த வைபவத்தில் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தொடர்ந்து உரையாற்றுகையில்,
புனர்வாழ்வு பெற்றுள்ள விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறுபட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக அவர்களுக்கான குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு பத்து வருடங்களுக்குள் மீள செலுத்தும் வகையிலான இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா கடனுதவியும் வழங்கப்பட்டு வருகின்றன. புனர்வாழ்வு பெற்றுள்ள இவர்களை அரசாங்கம் புதிய வாழ்க்கை முறைக்குள் கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது.
அதே போன்று இன்னும் சில தினங்களில் 450 பேரை தென்னிலங்கைக்கு சுற்றுலா அழைத்துச் சென்று அவர்களுக்கு பல் வேறு இடங்களையும் காண்பிக்க விருக்கின்றோம்.
புனர்வாழ்வு பெற்றுள்ள 180 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு சுகததாச விளையாட்டரங்கில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதில் தேசிய மட்ட குறி பார்த்து சுடும் போட்டியில் 4 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கும் செல்லவுள்ளனர். அதே போன்று கராத்தே கபடி போன்ற பல்வேறு விளையாட்டுக்களிலும் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களும் இந்த போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர். இதன் மூலம் இலங்கைக்கான புகழையும் இவர்கள் ஈட்டிக்கொடுக்கவுள்ளனர்.
புனர்வாழ்வு பெற்ற பலர் கலை இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தகால பயங்கரவாத வன்செயல் காரணமாக வடக்கு கிழக்கு உட்பட தென்னிலங்கையிலுள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர்.
பயங்கரவாத வன்செயல் காரணமாக உயிர்களை இழந்த காயமடைந்த, தொழில் பாதிக்கப்பட்ட, சொத்துக்களை இழந்த அங்கவீனமடைந்தவர்களுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகளை நாம் படிப்படியாக வழங்கி வருகின்றோம்.
இந்த நட்ட ஈட்டு கொடுப்பனவுகளை வழங்கு வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2013ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்தார். அதில் தற்போது 32 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி இதற்கான பூரண ஒத்துழைப்பையும் உதவியையும் எமது அமைச்சுக்கு வழங்கி வருகின்றார்.
இனம், மதம், மொழி,பிரதேசம் பார்த்து இந்த நட்ட ஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. இவைகளுக்கப்பால் பதிக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் பரீசிலிக்கப்பட்டு கட்டம் கட்டமாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பித்த ஏனையோருக்கும் அவர்களின் விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு நட்ட ஈட்டுக்கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கஜதீர மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten